Monday, January 9, 2017

சண்டே சண்டை #சண்டேசண்டை1.1.2017


ஞாயிறும் திங்களும் உரசிக் கொள்ளும் அந்த நடு இரவில், ஓய்வு நாள் ஓய்வெடுக்கும் அந்த நடு நிசியி
ல் நான் நித்திரைக்குள்ளானேன். மிஸ்டர் சண்டே இப்போது என் கனவுகளில் வருவதில்லை, ஏனென்றால் இப்போதெல்லாம் ஞாயிறு ஆராதனைப் பிரசங்க வேளைகளில் என் மனதிற்குள் ஒரு பெரும் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. அவற்றில் கவனம் போகும் போது பிரசங்கமோ தூக்கமோ என்னை பாதிப்பதில்லை. மிஸ்டர் மன்டேயும் மிஸ்டர் சன்டேயும் என் நடுஇரவுக் கனவில் வந்து என்னை குடைந்து எடுக்கின்றார்கள். நான் அவற்றை எல்லாம் கொட்டித் தீர்க்காவிட்டால் என் மனமும் உடலும் தாக்குப்பிடிக்காது என்பதால் எழுதத் துவங்கிவிட்டேன்.
மிஸ்ட்டர் சன்டே: “இந்த வாட்டி கிறிஸ்மஸ், ந்யூ இயர் ரெண்டுமே ஞாயித்துக் கிழமை வந்ததுல நிறைய பேர் என் மேலத்தான் சாபம் விடுறாங்க.”
மிஸ்ட்டர் மன்டே: “ஆனா வீக் எண்ட் முடிஞ்சு வேலைக்கு வர்றப்போ எல்லா திங்களும் எனக்கு சாபம் தான்.”
“வேலையும் ஓய்வும் சாபமா இல்ல ஆசீர்வாதமான்னும் தெரியல்ல. ஏதேன்ல விட்ட சாபம் தான் வேலையக் கஷ்ட்டமாக்கியிருச்சோ என்னவோ?”
“வேல வேல, சம்பாத்தியம் சம்பாத்தியம்னு அலையற ஒர்க்கஹாலிக்குகள் வேலை தான் ஆசீர்வாதம்னு சொல்றாங்க.”
“லீவு கிடைச்சா போதும் அப்படின்னு ஒரு கூட்டம் இருக்குது.”
“இன்னிக்கு நியூ இயர் டே, ஏ டி எம் மாதிரியே கோயில்கள்லயும் கூட்டம் அலை மோதுது.”
“வருஷப் பிறப்பு அன்னிக்கு ஒழுங்கா கோயிலுக்கு வந்து, வரிசையில வந்து காணிக்கை போட்டுட்டு, வாக்குத் தத்த வசனத்தையும் எடுத்துட்டா இனி ஒரு வருஷத்துக்கு மனசுல அமைதி தான்.”
“பைபிள் முழுசும் வாக்குத்தத்த வசனங்கள் இருக்குது. ஆனா ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒரு வாக்குத்தத்தம்னும் சொல்லி ஏமாத்துறாங்க ஒரு கூட்டம்.”
“பைபிளையே படிக்காத கூட்டம் கூட இப்படி ஒரு வசனத்தையாவது மனப்பாடமா வச்சிருக்கறது நல்லது தானே? சம்திங் இஸ் பெட்டர் தேன் நத்திங் அப்படின்னு எடுத்துக்கோரும் வோய்.”
“மண்ணாங்கட்டி, அடுத்த மாசம் கேட்டா ஞாபகம் இருக்காது. எல்லாமே ஹைப் தான். செல்ஃபி, மீம், விளம்பரம், மீடியா காய்ச்சல் மாதிரி மாறிக்கிட்டே மறந்துக்கிட்டே இருக்குது. ஒழுங்கா வேதத்த வாசிச்சு, தியானிச்சு, வாழ்க்கையில கடைபிடிக்கலன்னா கிறிஸ்தவம் ஒண்ணும் இல்லாம போயிரும். உயிர் இல்லாத பொக்கு விதை மாதிரி மாறிடும்.”
“மக்கள் வேதத்த வாசிச்சு, தியானம் பண்ணி, சொந்தமா ஆன்மீகத்த வளக்கறதுக்குப் பதிலா, ஊழியக்காரங்க கிட்ட எல்லாத்தையும் அவுட் சோர்ஸ் பண்ணி, எனக்கு ஒரு வாக்குத்தத்தம் தாங்க நான் அதப் பிடிச்சு தொங்கிட்டு, ஹாப்பி நியூ இயர்னு ஒரு வாரத்துக்கு திருப்தியா சுத்துறேன். காணிக்கைய போடுறேன், அப்புறமா முருங்க மரத்துல தொங்கிக்கலாம்னு இருக்காங்க. ஊழியக்காரங்களும் பொதுவா ஒரு வாக்குத்தத்தத்துல பிரசங்கங்கம் செஞ்சுட்டு அப்புறமா பெர்சனல் வாக்குத்தத்தம் குடுக்கிறோம்னு பிரிண்டிங் ப்ரஸ் காரங்க கிட்ட அவுட் சோர்ஸ் பண்ணி வாக்குத்தத்த வசன அட்டைகள வாங்கி அவுங்க சபை, ஊழியம் பேருல சின்ன காலண்டரையும் அடிச்சு குடுத்துடறாங்க.”
“இதுல என்ன தப்பு? காசக் குடுத்து சாமான வாங்கற மாதிரி, காணிக்கையக் குடுத்து வாக்குத்தத்தம் வாங்கிக்க வேண்டியது தான். கன்ஸ்யூமர் இஸ் த கிங்”புரியுதா?”
“அது சரி, கன்ஸ்யூமர் கிங் ஆயிருதான், கிறிஸ்துவ கடைசியா தள்ளி வச்சு ஓரங்கட்டிருதாங்க. இது தானே நடக்குது. இன்னிக்கு ஒரு சர்ச்ல ஒரு பொண்ணுக்கு இப்படி ஒரு வசனம் கிடைச்சிருக்கு. இதப் பாத்து சிரிக்கறதா அழுவறதா, கோவப்படுறதா, பரிதாபப்படுறதான்னு தெரியல்ல. வரிசைல நின்னு, காணிக்கையக் குடுத்து, பாஸ்ட்டர் கிட்ட நெத்தியில சிலுவை வாங்கிட்டு பதிலுக்கு எடுத்த வாக்குத்த்தத்த வசனத்துல என்ன எழுதியிருக்கு பாரும்.”
“அடப் பாவிகளா, அர்த்தத்தையே மாத்திப்புட்டீங்களே? மொதல்ல ஸ்பெஷலா வாக்குத்தத்தம் அப்படிங்கறதே ஒரு வியாபாரம். காசு குடுத்தாத்தான் வாக்குத்தத்தம் தருவோம்னு ஆல்ட்டர் பக்கத்துல அட்டைகள வைக்கறது திருட்டுத்தனம். அதுலயும் எந்த வசனம் எல்லாம் இருக்குதுன்னு பாக்காம, ஹோல் சேல் வசனத்த வைக்கறது முட்டாத்தனம்.”
“வசனம் இருப்பிடத்த தமிழ்ல குடுத்துட்டு இங்கிலீஷ்ல மாறி இருக்கறதப் பாக்காமல் மிஸ்ட்டேக்குல அடிச்சுட்டாங்க, வியாபாரிங்க. ஆனா நம்ம கிறிஸ்தவ ஊழிய வியாபாரிங்க அதக் கூட பாக்காம, டிஸ்ட்ரிப்யூட் பண்ணியிருக்காங்க.”
“ஆமா ரெண்டு க்ரூப்புக்கும் பணம் தான் முக்கியமாயிட்டுது. தப்புகள சரி பண்ணுறது, செக் பண்ணிப் பாக்கறது பெரிசு இல்ல. அதுக்கு நேரமும் இல்ல. பின்ன என்ன வித்தியாசத்த நீரு எதிர்பார்க்க முடியும்?”
“அது சரி தான், அந்த வசனத்துல சொன்னது தான் நடக்கும் இப்படி சபைக்குள்ள… ”
“கர்த்தர் விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, வலதுபுறம் இடதுபுறம் சாய்ந்து தான் போயிரும் நம்ம சபைகள்.”

No comments: