Monday, May 4, 2015

மிஸ்ட்டர் சன்டே



“வலது கை குடுக்கறது இடது கைக்கு தெரியக்கூடாதுன்னு ஜீசஸ் சொல்லியிருக்காரே.... இங்க என்னடான்னா, ட்யூப் லைட் முதல் ப்ளாஸ்டிக் சேர் வரைக்கும் அன்பளிப்பு... திரு............ அவர்கள்.... அப்படின்னு பேரு எழுதி வச்சிருக்கீங்க. ஃபேன் நின்னுச்சுனா யாரு அன்பளிச்சாங்கன்னு தெரியுது. லைட்டு எரிஞ்சா உபயம் யாருன்னு பளிச்சுன்னு தெரியுது. எந்தப் பொருள யார் வாங்கிக் குடுத்தாலும் ஆராதனையில அவங்க பேரச் சொல்லி ஸ்பெஷலா ப்ரே பண்ணிருதாங்க. எதுவும் வாங்கிக் குடுக்க முடியாதவங்க ஏங்கிக்கிட்டு நிறுத்திக்க வேண்டியது தானா?”

“இங்கப் பாரு, மத்தவங்களும் கோயிலுக்கும், ஊழியத்துக்கும் அதிகமா குடுக்கறதுக்கு உற்சாகப்படுத்தறதுக்குத் தான் இப்படி எல்லாம் செய்யறாங்க.”

“போற போக்கப் பாத்தா, இந்த ஆராதனையை உங்களுக்கு வழங்குபவர்கள் நெல்லை சில்க்ஸ் அப்படின்னே விளம்பரம் பண்ணிருவாங்க போல. அப்புறமா நேயர் விருப்பம், சின்ன ஸ்பான்சர்ஸ் அப்படின்னு வந்திரும் இந்தப் பாட்டை வழங்குபவர்கள் மஞ்சள் மாங்காய் ஊறுகாய் கம்பெனி.... இந்த ஜெபத்தை உங்களுக்கு அளிப்பவர்கள் புலி மார்க் சோப்புக் கம்பெனின்னு ஸ்பான்சர் செஞ்சிருவாங்க போல இருக்குதே?”

“இயேசு கூட ரெண்டு காசு காணிக்கை போட்ட பெண்மணியப் பாராட்டியிருக்காரு. அதுவும் ஆலயத்திலேயே.”

“ஆனா அந்த அம்மா பெயர இயேசு சொல்லலியே? அதே மாதிரி இப்பவும் குறைஞ்ச காணிக்கை போடறவங்க பேரு எல்லாம் சொல்லிட்டு இருந்தா, ஒரு நாள் முழுக்க அறிவிப்பு மட்டுமே குடுத்துட்டு இருக்க வேண்டியது தான்.”

“தாவீது ராஜா ஆலயம் கட்டறதுக்கு எவ்வளவு தங்கம், வெள்ளி சேத்து வச்சாருன்னு பைபிள்ல லிஸ்ட்டு குடுத்திருக்காங்களே?”

“ஆரோனும் தங்கம் கலெக்ட் பண்ணினாரு தெரியுமில்ல?”

“சரி தாம்ப்பா. பழைய ஏற்பாடு காலத்துல எந்த எந்த கோத்திரத்துல இருந்து எவ்வளவு காணிக்கை குடுத்தாங்கன்னு எண்ணாகமத்துல எழுதி வச்சிருக்காங்க தெரிஞ்சுக்கோ.”

“அய்யா, அது எல்லாருக்கும் சமமா இருந்த வரி. மக்கள் மனசார குடுத்தது. ஆனா இப்போ சில பேரு அதிகமாக் குடுக்கிறாங்க. மத்தவங்க, ஓட்டுக்காக சங்கம் மட்டும் கட்டுறாங்க.”

“இப்போ நீ பேர் சொல்றது சரின்னு சொல்றியா அல்லது தப்புங்கறியா?”

“கண்டிப்பா மக்கள் அதிகமா காணிக்கை குடுக்கணும். ஆனா கணக்கு பாக்காம குடுக்கணும். பெயர் சொல்லணும், ஆனா எல்லாரோட பெயரும் சொல்லணும்.”

“உண்மையிலேயே மனசுல தாழ்மை உள்ள பணக்காரங்க குடுக்கத்தானே செய்வாங்க?”

“அவங்க பேர் சொல்லாட்டியும் கவலப்பட மாட்டாங்க.”

“என்ன தான் செய்யணும்னு சொல்ற?”

“அதாவது மக்கள் இரகசியமா குடுக்கறதுக்கு பெரியவங்க கத்துக் குடுக்கணும். மக்களும் குடுத்தங்க பேர் சொல்ல வேண்டாம்னு சொல்ற அளவுக்கு முதிர்ந்தவங்களா மாறணும்.”

“அதுல ஒரு ரிஸ்க் இருக்குது தெரியுமா? யார் குடுத்தாங்க, எவ்வளவு குடுத்தாங்கன்னு கணக்கு வழக்கு இல்லாம இருந்தா, ஊழல் நடக்கறதுக்கு, சோதனைய நாமளே ஏற்படுத்திக் குடுத்தமாதிரி இருக்காதா?”

“அதுக்குத் தான் ரசீது இருக்குதே. உடனேயே ரசீதுல, ஆலயம் விரும்பி, தயாள மனசான், தாராளன் அப்படின்னு ஏதாவது பேர் எழுதி உடனேயே கிழிச்சுப் போட்டுற வேண்டியது தான். மத்தபடியும் பேர் எழுதி பட்டியல் போடறது தப்புன்னு நான் சொல்லலியே. பெரிசு பெரிசா விளம்பரம் பண்றது தான் சரி இல்லன்னு சொன்னேன்.”

No comments: