Wednesday, February 14, 2018

பவர் பாதை. நாள் 2

நாகரீகத்தில் உன்னத நிலையில் இருந்தவைகளாகக் கருதப்பட்ட அரசர்களின் பொற்காலத்தில் கூட அசிங்கமான அரசியல் அற்புதமாக நடந்திருக்கிறது. மக்களாட்சி, சமத்துவம் ஆட்சி செய்வதாகச் சொல்லப்படும் இந்தக் காலத்திலும் இதுவே தொடர்கிறது. பெயர்கள், குணங்கள் மட்டும் தான் மாறியிருக்கின்றன. மனிதன் மனிதன் தானே! இது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் அல்லவா?

ராபர் க்ரீன் அந்தக் காலத்து அரசவையைப் போல இந்தக் காலத்திலும் அலுவலகங்கள், குடும்பங்கள், அமைப்புகள், சமுதாயம், அரசு போன்ற சூழல்களில் கீழ்க்கண்ட ஐடியாக்களை முயற்சி செய்து பார்க்கச் சொல்கிறார்:
  1. மறைமுகமாக செயல்படுதல், கவர்ச்சி, இனிமை, ஏமாற்றுதல், எதிர்ப்பவர்களை வஞ்சகமாகவும் மறைமுகமாகவும் வெற்றி கொள்ளுதல்.
  2. எந்த பவரும் இல்லாமல் பலவீனமாக இருப்பது ஒரு தியாகம் அல்லது நல்ல குணம் என்று காட்டிக்கொள்வது
  3. வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் சமத்துவம் வேண்டும் என்று போராடுவது.
  4. நூல் பிடித்தது போல நேர்மையாக நடந்த்து கொள்வது. சுற்றியிருப்பவர்கள் ஏமாற்றுக்காரர்களாக இருக்கும் போது நேர்மையாக இருப்பதுவே ஒரு பலத்தைக் கொடுக்கும்.
  5. எதுவுமே தெரியாத அப்பாவி போல இருந்த்து கொள்வது. ஆனால் தங்களை அப்பாவிகளாகக் காட்டிக் கொண்டு நடிப்பவர்கள் கண்டிப்பாகஅடப்பாவிஎன்று சொல்லுமளவில் தான் இருப்பார்.
இந்த டெக்னிக்குகளை நம்மில் பலரும் தெரிந்தோ தெரியாமலோ சிறுவயதில் இருந்த்து கடைபிடித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

இவை எல்லாவற்றிலும் முக்கியமான, பெரும் சிறப்புக் குணம் என்பது நம் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து மேலாண்மை செய்வது தான். உணர்ச்சிகள் மேகம் போல,புகை போல உண்மையை மறைத்துவிடும்

அன்பு கூட பெரும் அழிவாக மாறிவிடும் என்கிறார் ராபர்ட் க்ரீன். ஏனென்றால் நம்பி, அன்பு செய்யும் ஒருவர் துரோகம் செய்யும் போது, எதிர்பாராத விதத்தில் உங்கள் பவர் பிடுங்கப்பட்டு பரிதாபராக மாறிவிடுவீர்கள் நீங்கள்.

ஆனால் இயேசுவின் போதனைகளில் இவற்றுக்கு நேர்மாறான சில விதிகளைக் காண்கிறோம்:ட்

  1. உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையாக இருக்கிறது என்று சொல்லியிருக்கின்றார்.
  2. எளிமையானவர்கள், நீதியுள்ளவர்கள், பலக்கீனமானவர்கள் பாக்கியவான்கள் என்கிறார் இயேசு. அவரும் அப்படிப்பட்ட வாழ்வை வாழ்ந்து காட்டினார். வாழக் கற்றுக் கொடுக்கிறார்.
  3. உரிமைகள், சொத்துக்கள் என்பவைகள் எல்லாவற்றையும், சுயத்தையும் கூட விட்டுக் கொடுக்காமல் அவரது சீடனாக முடியாது என்கிறார். அவரது சீடர்களைத் தன் நண்பர்கள் என்ற பவரஃபுல்லான நிலையில் வைத்திருக்கிறார்.
  4. நம்மை நேர்மையாக இருக்கச் சொல்லும் கடவுள் நாம் பலகீனமானவர்கள் என்பதையும் அறிந்திருக்கிறார். அவரே ஒரு மனிதனாக வந்ததால் அவருக்கு நம் நிலை நன்றாகவே தெரியும். ஆனால் அச்சச்சோ சொல்வது மட்டுமல்லாமல், பலவீனத்தில் வெற்றி பெற உதவி செய்பவராகவும் இன்றும் நம்முடன், நமக்குள் இருக்கிறார்.
  5. பலவீனத்தைப் பவராக மாற்றிக் கொடுப்பவர் அவர் என்றாலும், நாம் நம் பலவீனத்தை ஒரு பெரிய சாதனையாக, நல்ல குணமாகக் காட்டிக்கொண்டு சீன் கொடுத்தால் நாம் ஒரு மாய்மாலக் காரர்களாகத் தான் இருப்போம்.
  6. சிறு பிள்ளைகளைப் போல மாறும்படி நமக்குச் சொல்லும் இயேசு தான், புறாக்களைப் போல கபடம் இல்லாதவர்களாகவும் பாம்புகளைப் போல புத்திக் கூர்மையுடன் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார். நரியைப் போலவோ, பூனையைப் போலவோ நடிக்கச் சொல்லவில்லை. இது அவருடைய போதனைகளைப் பின்பற்றி அவர் உதவியுடன் நடக்கும் போது மட்டுமே சாத்தியம்.

இதை நடைமுறைப்படுத்தி, போராடி அனுபவித்த ஒருவர் சொல்கிறார்:

எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன். (2 கொரிந்தியர் 12:7-10).


எனக்கு என்னவோ, இந்தக் காலத்தில் பவருக்காக அல்ல, பலவீனத்துக்காக, பலவீனத்தில் நிமிர்ந்து நிற்கும் பவருக்காகத் தான் நாம் ஜெபிக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.

பவர் பாதை

#aprilfoolchallenge.  #mictesting50+
சமீபத்தில் ராபர்ட் க்ரீன் எழுதிய 48 Laws of Power என்ற புத்தகத்தை சென்னையிலுள்ள ஒரு பழைய புத்தகக் கடையில் பேரம் பேசி வாங்கி வந்தேன். பவர் என்பது கத்தியைப் போன்றது, பயன்படுத்துபவர்களின் தன்மையைப் பொறுத்து அது நன்மையாகவோ தீமையாகவோ இருக்கும் என்று அந்தப் புத்தகத்தின் முன்னுரை சொல்கிறது. ஆனால் வல்லமையுள்ள தேவன், ராஜ்யமும் வல்லமையும் உம்முடையது, பரிசுத்த ஆவி வரும் போது பலனடைந்து (ஆங்கிலத்தில் பவர்)... என்றெல்லாம் வல்லமை பற்றி வேதம் சொல்கிறதே என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது, வல்லமையைப் பற்றிய வேதாகமத்தின் விளக்கம், அதுவும் இயேசுவின் விளக்கம் வித்தியாசமாகத் தெரிந்தது. ராபர்ட் க்ரீனின் புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த பல விளக்கங்களும் விதிகளும், பழங்காலத்து அரச சபைகளில் காணப்பட்ட பவர் பாலிட்டிக்ஸை அடிப்படையாகக் கொண்டு தான் இருக்கின்றன. கர்த்தரின் அரசு என்பது எப்படி இருக்கும் அதில் பவர் பாலிட்டிக்ஸ் இருக்குமா என்று சிந்தித்தபோது, இயேசுவின் சீடர்கள் இருவரின் அம்மா அவரிடம் வந்து அவர்கள் இருவருக்கும் முக்கிய பதவியைத் தரச் சொல்லி ரெக்கமண்ட் செய்தது நினைவில் வந்தது. அதைக் கேட்டு மற்ற பத்து பேரும் அவர்கள் மீது காண்டு ஆனார்கள். யூதாஸும் கூட இயேசு ஒரு பவர்ஃபுல் ஆன ராஜாவாக வருவார் என்று தான் எதிர்பார்த்திருந்தார்

ஆனால் இயேசுவோ சிறு பிள்ளையை நடுவில் நிறுத்தி இவர்களைப் போல மாறுங்கள் என்று முகத்தில் சப் என்று அறைந்தது போல சொல்லிவிட்டார். சிறுவர்களிடமும் பவர் பாலிட்டிக்ஸ் இருக்கும் என்றாலும், அவர்கள் எப்போதுமே பெரியவர்களைச் சார்ந்து இருப்பதுவே அவர்களுக்கு பலமாக இருக்கிறது. ஆகவே இந்த லெந்து காலம் முழுவதும் பவர் பற்றி சிந்திக்கலாம். அதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்

அம்மாவின் சிபாரிசில் சீடர்கள் கடுப்பாகியிருந்த போது இயேசு சொல்கிறார்: “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்” (மத்தேயு 20:25-28).

பவர்லெஸ் ஆக இருப்பது தான் பவர் என்கிறார் இயேசு. அது தான் அவரது போதனையாக இருந்தது. இதே சம்பவமும் போதனையும் முதல் மூன்று நற்செய்தி நூல்களிலும் இருக்கின்றன. மாற்குவின் புத்தகத்தில் கிட்டத்தட்ட மத்தேயுவில் இருப்பவையே வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருக்கின்றது.
லூக்காவில் ஒரு வித்தியாசமான பிரயோகமும் போதனையும் காணப்படுகின்றன:
புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள். உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன். பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்... என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள்” (லூக்கா 22:25-30). இந்தக் காலத்தில் சேவை செய்ய வேண்டியவர்கள் அதிகாரம் பண்ணுகிறார்கள். இதனால் தான் கக்கன்காமராஜர் என்று பழைய அரசியல்வாதிகளும் தலைவர்களும் இன்றும் ஆதர்ச நபர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இதில் அதிகாரம், வல்லமை எல்லாவுமே மறுவுலகத்தில் தான் கிடைக்கப் போகின்றது என்பதாக இயேசு கூறுகிறார். இது மக்களை ஏமாற்ற மதங்கள் செய்த சதி என்று தான் மற்றவர்கள் சொல்வார்கள். ஆனால் வேதத்தின் முழுமையான போதனைகளைக் கணக்கில் கொண்டால், இது பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டிற்குள் புகுந்து, ஆதி சபையிலும் வழிந்து, இப்போதும் சில இடங்களில்  மட்டும் கசிந்து கொண்டிருப்பதைக் காணலாம்.


இந்த முன்னுரையை ஒரே வேதப் பகுதியுடன் முடித்துக் கொண்டு, நாளையிலிருந்து நேரடியாகப் பவர் பாதையில் வலம் வரலாம்: “விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்; வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்” (எபிரெயர் 11:33-40). இங்கே விசுவாச வீரர்களின் வெற்றிப் பட்டியலைப் போலவே, அவர்களது தோல்விப் பட்டியலும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதை நாம் அதிகம் வாசித்திருக்க மாட்டோம். இங்கே, விசுவாசத்தினாலே வெற்றி பெறாத சிலர், பெயர் கூட இல்லாமல் குறிப்பிடப்பட்டு உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை என்று சொல்லப்பட்டிருக்கின்றது. எத்தனை சிறப்பான பவர்ஃபுல்லான மனிதர்களாக இருக்க வேண்டும் இவர்கள்! இவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் வாக்குத்தத்தத்தை அடையாமல் போயிருக்கின்றார்கள். இவர்களுக்கு பலன் அடுத்த உலகத்தில் தான். பவர் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை. அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை