Tuesday, July 1, 2014

குடும்ப கொ(தி)ண்டாட்டம் - மிஸ்ட்டர் சன்டே





“ஒரு வருஷமா நம்ம சர்ச்ல குடும்ப வருடம்னு கொண்டாடப் போறோம்னு பாஸ்ட்டர் அறிவிப்பு குடுத்துருக்காரே. கொண்டாடுற மாதிரி எந்தக் குடும்பத்துல என்ன இருக்குது? எல்லாமே திண்டாட்டமாத் தான் இருக்குது”

“திண்டாட்டமே கொண்டாட்டத்துக்குக் காரணமா இருக்கணும்.”

“நீங்க என்ன குண்டக்க மண்டக்கன்னு பேசுறீங்க?”

“அமைதியா மூச்சு விடாமக் கிடக்கற உடம்புக்கும், மூச்சுவிடத் திணறிக்கிட்டு கிடக்கற நபருக்கும் வித்தியாசம் தெரியுமா?”

“அது தான் செத்த சிங்கத்தவிட உயிருள்ள நாயே பரவாயில்லன்னு நீதிமொழிகள் சொல்லுதே”

“பரவாயில்ல நீ பொருத்தமான வசனங்களச் சொல்ற அளவுக்கு வளந்திருக்கிற.”

“சும்மா என்ன உசுப்பேத்தாதீங்க. விஷயத்துக்கு வாங்க.”

“திண்டாடிட்டு இருக்கற குடும்பங்கள் உயிரோட இருக்குதுன்னு கொண்டாடணும். ஒரே வீட்டுல இருந்துக்கிட்டு உறவுல செத்துப் போன குடும்பம் தான் பிரச்சனைக்குரியது.”

“அமைதியா இருக்கறத விட சண்டை போடுற குடும்பம் மேல் அப்படின்னு சொல்றீங்க?”

”ஆமாம் சாமி போட்டுட்டு, ஜால்ரா அடிச்சுக்கிட்டு, எதுத்துப் பேசாம இருக்கறது தான் அபாயம். அப்படிப்பட்ட ஆட்கள் வீட்ட மட்டுமில்ல, நாட்டையும் கெடுத்துருவாங்க.”

 “வீட்டுச் சத்தம் வெளியில கேக்காம இருக்கறது நல்லது தானே?”

“வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்குதுன்னு எல்லாருக்கும் தெரியும். புண்ணக் கழுவி மருந்து போட்டா வலிக்கத் தான் செய்யும் அத விட்டுட்டு மேல மேல கட்டுப் போட்டுட்டே இருந்தா”

“காலையே எடுக்கற அளவுக்குக் கூட போகலாம்.”

“இப்போ சொல்லு, சண்டை போடுற குடும்பம் நல்லதா அல்லது அமைதியா இருந்துட்டு ஒரு நாள் பிரிஞ்சு போற குடும்பம் நல்லதா? ”

“அது இருக்கட்டும், பிரச்சனை வர வேண்டாம்னு ஒரே ஆளு சமாளிச்சுக்கிட்டே போனா அமைதியா இருக்கும் தானே குடும்பம்?”

“ஒரே ஆள் விட்டுக் குடுத்துக்கிட்டே இருக்கறது அடுத்த ஆள் மோசமான ஆளா மாறிப் போகறதுக்கும், விட்டுக் குடுக்கிற ஆளு அழுத்தத்துல பொம்மை மாதிரி மாறிப் போறதுக்கும் காரணமா ஆயிடும்”

“ஒரு பார்ட்டி சமாளிச்சுக்கிட்டேயும் அடுத்த பார்ட்டி சவடால் பண்ணிட்டே இருக்கறதும் இருந்தா அது குடும்பமே இல்லன்னு சொல்றீங்க!”

“ஆமா. அன்பு இருக்கற இடத்துல சண்டையும் இருக்கும், மன்னிப்பும் இருக்கும்.”

“அன்பான சண்டை தான் அமைதியான பகையை விட நல்லதுன்னு சொல்றீங்க.”

 “குடும்பத்துல இருக்கற எல்லாருக்குமே சண்டை போடுற தைரியமும், மன்னிக்கிற பெருந்தன்மையும் இருக்கணும்.”

“அடிக்கிற கைதான் அணைக்கும்.”

“தேற்றரவாளனான பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஆறுதலை மட்டும் தரமாட்டார், கண்டிச்சும் உணர்த்துவார் இல்லியா அது மாதிரி தான்”

“ஆமா குடும்ப வருஷத்த அறிவிப்பு செஞ்சப்போ ரோஜாப்பூ குடுத்தாங்களே அது சிம்பாலிக்கா சொல்லுது மெசேஜ் - முள் இல்லாம ரோஜா மலர் இல்ல”

3 comments:

Jayaseelan Samuel said...

இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. முடிஞ்ச அளவுக்கு அதிகமா கூச்சல் போட்டு சண்டை போடுற குடும்பங்கள்ல அதிகமான ஈகோ பிரச்சனைகள் இருக்கிறத பார்த்து இருக்கிறேன். ஆனா, அதுவே சின்னதா ஒரு முறுமுறுப்பு அரைமணிநேரத்துக்குள்ள சமாதானமா போற குடும்பங்கள் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கிறாங்கனு தோனுது

Unknown said...

மிக பொருத்தமான விவாதம்.... நன்றாக உள்ளது

Unknown said...

பதிவு நன்றாக உள்ளது