Tuesday, May 27, 2014

மிஸ்ட்டர் சன்டே




 “ஸ்கூல் ஃபீஸ் கட்டற காசுல ஒரு ஸ்கூலே கட்டிறலாம் போல இருக்குது.”

“அந்தக் காலத்துல நெறைய பிள்ளைங்களப் பெத்துக்கிட்டாங்க, நீ சொன்ன மாதிரி ஸ்கூல் துவங்கியிருக்கலாம்.  இப்போ எல்லாருமே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு பெத்து, மானே மணியேன்னு செல்லமா வளக்கிறீங்க.”

“இருக்கற விலைவாசிக்கு ஒரு பிள்ளைய வளக்கறதே பெரிய விஷயமா இருக்கு. அதுவும் ரெண்டு பேரும் வேலைக்குப் போய் சம்பாதிச்சாத்தான் முடியும்.”

“சாதாரண பள்ளிக்கூடத்துல படிக்க வச்சுட்டு, உன் பொஞ்சாதிய வேலைக்குப் போகாம பிள்ளைய வீட்டுல நல்ல படியா வளத்தாப் போதும். அப்துல் கலாம் தமிழ் மீடியம் பள்ளிக்கூடத்துல படிச்சாராம், அண்ணாத்துரை தெரு விளக்குல படிச்சாராம்.”

“அது எல்லாம் அந்தக் காலம், இப்பல்லாம் எங்கே போனாலும் போட்டி, நம்ம பிள்ளைங்க நல்ல மார்க் வாங்கி, பெரிசா சாதிக்கலன்னா, தெருவுல தான் நிக்கணும்.”

“நீ பேசறது எல்லாமே பணத்தப் பத்தி தான் இருக்குது. எங்கேயாவது எப்போதாவது உம் பிள்ளைங்களோட ஒழுக்கம், பக்தி இதப் பத்தி எல்லாம் கவலப்பட்டிருக்கியா?”

“ஞாயித்துக் கிழமை கோயிலுக்குக் கூட்டிட்டு வர்றேன், ஊழியக் காரங்க என் பிள்ளையோட ஃபோட்டோவ வச்சு ஜெபம் பண்ணுறாரு, போதாதா?”

“நீ சின்ன வயசுல இருந்தப்போ குடும்ப ஜெபம்-னு ஒண்ணு இருந்தது ஞாபகம் இருக்குதா? ஞாயித்துக்கிழமை வசனம் மனப்பாடமா சொல்லாட்டி மதியம் சாப்பாடு கிடையாதுன்னு சொல்லியிருக்காங்க, மறந்துட்டுதா, சன் டே ஸ்கூல், யூத் மீட்டிங் இதெல்லாம் இப்போ இல்ல, எல்லாமே கோச்சிங், டியூஷன் இப்படின்னே தான் போயிட்டு இருக்குது இது எங்க போய் முடியும் தெரியுமா?”

“எங்கப் போய் முடிஞ்சாலும் சரி நம்ம பொறுப்ப சரியாச் செய்துட்டாத் தான் நிம்மதி”

“பணம் இருக்கும் குணம் இருக்காது, வசதி இருக்கும் நிம்மதி இருக்காது. எல்லாமே இயந்திரம் மாதிரி தான் மாறிக்கிட்டு இருக்குது.”

“வெள்ளக்காரன் காலத்துல தான் ஸ்கூல் எல்லாம் நல்லா இருந்தது. இப்பல்லாம் அந்தத் தரம் இல்ல.”

“ஒரு காலத்துல கல்வி ஊழியமா இருந்தது, இப்போ வியாபாரமா ஆயிருச்சு. மிஷன் பள்ளிக்கூடம் மட்டும் தான் இருந்தது. அப்புறமா அரசாங்க பள்ளிக்கூடங்கள்லயும் நல்லா கத்துக் குடுத்தாங்க.”


“இப்ப அந்த இரண்டு இடங்களையும் திரும்பிப்பாக்க ஆள் இல்ல. நான் எல்லாம் என் பிள்ளைங்கள, இன்டர்நேஷனல் பள்ளிக்கூடங்கள்லயும், இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்கள்லயும் தான் படிக்க வச்சிருக்கேன்.”

“மிஷன் பள்ளிக்கூடங்கள்ல கட்டணம் குறைவு, அரசாங்க பள்ளிக்கூடத்துல இலவசம். அந்தப் பக்கம் திரும்பாம நீ ஃபீஸ் அதிகம் இருக்குதேன்னு புலம்புற.”

“ஆமா காசு அதிகமாக் குடுத்தாத்தான், நல்ல ஸ்கூல்ல சேக்க முடியும்; பிள்ளைங்களும் நல்ல மார்க் வாங்க முடியும்.”

“மிஷன் பள்ளிக் கூடங்களையும், கார்ப்பரேஷன் பள்ளிக்கூடங்களயும் நாம மதிச்சு பிள்ளைங்கள சேத்தா பிசினஸ் பள்ளிக்கூடங்கள் தானாவே காணாமப் போகும். அர்ப்பணிப்போட இருக்கற ஆசிரியர்கள் எல்லா இடங்கள்லயும் இருக்கறாங்க. அது மட்டும் இல்ல, அர்ப்பணிப்பு ஆசிரியர்களுக்கு மட்டும் இல்ல, பெத்தவங்களுக்கும் இருக்கணும். இல்லன்னா, பிள்ளைங்க வெளிநாட்டுல போய்க படிச்சாலும் காட்டுமிராண்டிகளாத் தான் மாறிடுவாங்க.”

“இலவச கல்வி தான் சரின்னு சொல்றீங்களா?”

“நல்ல கல்வி, பணம் குடுத்து வாங்கறது இல்லன்னு சொல்றேன். ஒழுக்கமும் பக்தியும் இல்லன்னா பணம் இருந்தும் பயன் இல்லன்னு சொல்றேன். பணம் சம்பாதிக்கறதுக்குத்தான் படிக்க வைக்கணும்னு நினைச்சா, பணம் கறக்கற பள்ளிக்கூடத்துல தான் சேக்கணும்.”

No comments: