Monday, August 11, 2014

மிஸ்ட்டர் சண்டே

“நம்ம சர்ச்ல நற்கருணைக்கு குட்டிக் குட்டியா கப் குடுத்திருக்காங்க கவனிச்சீங்களா?”

“அதுக்கு என்ன இப்போ?” 

“இல்ல தனித்தனியா திராட்சை ரசம் குடிக்கறது, சுகாதாரத்துக்கு நல்லது தானே? பட்டணங்கள்ல எல்லா பல வருஷங்களுக்கு முன்னாலேயே வந்திருச்சு. வெளிநாடுகள்ல நூறு வருஷத்துக்கு முன்னாலேயே வந்திருக்கும்னு நினைக்கிறேன். திருநெல்வேலியில இது தான் முதல்லன்னு நினைக்கிறேன்.”

“கம்யூனியன் அப்படின்னாலேயே எல்லாரும் பொதுவா சேர்ந்து எடுக்கறது. இதுல இப்படியே தனித்தனியே குடுத்தா, நம்ம உறவு சார்ந்த கலாச்சாரம் அப்படியே தனித்தனி உரிமைகள், சுதந்திரம் அப்படின்னு மேல் நாட்டு கலாச்சாரம் மாதிரி மாறிடும்.”

“அதுதான் அப்பம் தனித்தனியா ஒவ்வொருத்தருக்கும் குடுக்கறாங்களே?”

“அது சரி வீட்டுலயே ஒருத்தங்க குடிச்ச பாத்திரத்துல மத்தவங்க குடிக்க மாட்டங்க. சின்னப் பிள்ளைங்க முத்தம் குடுத்தப்புறம் கூட துடைச்சுக்கிறதக் கூட பாத்திருக்கோம். சர்ச்ல மட்டும் தான் ஒருமனம், ஒற்றுமை அப்படிங்கறதயும், வித்தியாசம் பார்க்காம எல்லாரும் ஒண்ணா பங்கெடுக்கற பாத்திரம்னு இருந்தது. அதுவும் போச்சு.”

“காலங்கள் மாறும் போது மாற்றங்கள நாம ஏத்துக்கத் தான் வேணும்.”

“அது சரி தான். மாற்றத்துக்காக மாற்றம்னு இருக்கக் கூடாது இல்லியா?”

“நீங்க எதுக்கு எடுத்தாலும் குத்தம் கண்டுபிடிச்சுட்டே இருக்கிறீங்க.”

“நீ கட்டளை வியாழனுக்கு மட்டும் தானே நற்கருணை எடுக்கறவன்? இதெல்லாம் உனக்கு எதுக்கு?”

“அபாத்திரமா நற்கருணையில பங்கெடுக்கறவங்க, சுகவீனமாப் போயிருவாங்க. சில பேரு செத்துக்கூட போயிருக்காங்கன்னு பைபிள்ல போட்டுருக்குதே?”

“ஒரே பாத்திரத்துல பானம் பண்ணினதுனாலத் தான் சுகவீனம் வந்ததுன்னு இத்தனை நூற்றாண்டுகளா ஒரு கேஸ் கூட கேள்விப்பட்டது இல்லியே?”

“ஐயோ நான் அதப்பத்தி சொல்லல. ஆயத்தமா இல்லாம, பரிசுத்தமா இல்லாம நற்கருணை எடுக்கக் கூடாது இல்லியா? அதுனாலத் தான் நான் வருஷத்துக்கு ஒரு தடவ எடுக்கறேன்.”

“அப்போ பெரிய வெள்ளிக்கிழமை மட்டும் எப்படி எடுக்கற?”

“அதுதான் நாப்பது நாள் உபவாசம் எல்லாம் இருந்து சுத்த பத்தமா போய் எடுக்கறேன்?”

“நாப்பது நாள் சுத்தபத்தம், அப்புறம் முன்னூத்து இருபது நாள் அசுத்தமா வாழறதா? என்னப்பா இது? நற்கருணை எடுக்கறதுனால சுத்தம் வருமா, சுத்தமா இருந்தாத் தான் நற்கருணை எடுக்கணும்னா யாருமே நற்கருணை எடுக்கவோ குடுக்கவோ முடியாது. மனசால செய்யறதும் பாவம்னு இயேசு சொல்லியிருக்காரே?”

“பரிசுத்த நற்கருணைக்கு மரியாதை வேண்டாமா?”

“என்னை நினைவு கூறும்படி இதைச் செய்யுங்கன்னு, இயேசு சொல்லியிருக்காரு. இதுல மந்திரம் எதுவும் இல்ல. இயேசு என் பாவத்துக்காகத் தன் உயிரைக் கொடுத்தார். இது அவருடைய இரத்தத்தை மாதிரின்னு நினைவு கூர்ந்தா, அத நம்பினா, நற்கருணையில பங்கெடுக்கறதால, பரிசுத்தமா வாழணும் அப்படிங்கற தூண்டுதல் உனக்கு இருந்துக்கிட்டே இருக்கும்.”

“இந்த மாதிரி நான் யோசிச்சுப் பாத்ததே இல்லியே?”

“ஒரே பாத்திரமோ, தனித்தனி கப்புகளோ, முறைகள் வேறன்னாலும், நினைவு கூருதல் ஒண்ணுதான். அதாவது நினைவு கூருவது ஒருத்தரத் தான், இப்போ நற்கருணைக்கு கூப்பிடுவாங்க. ஒழுங்காப் போயிடு.”

“அப்போ ஆயத்தம்?”

“பாவ அறிக்கை ஜெபம் சொல்றப்போ அர்த்தத்த உணர்ந்து சொல்லு, அது தான் ஆயத்தம்.”

“சில பேரு திராட்சைரசம் குடிக்கறப்போவாவது தலைய மேல ஏறிட்டுப் பாக்கறாங்க. அந்த மாதிரி கடவுளையும் பாத்தா நல்லது தான்.”

“நீங்க அதச் சொல்லுறீங்க. சில பேரு வெத்து கப்புகளை நின்னுக்கிட்டே கூடையில போடுறாங்க. அப்படியே கொஞ்சம் பணிவோட குனிஞ்சாலும் நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன்.”

No comments: