" 'தானாப் பொரிச்சா சிக்கன், நாம பொரிச்சா ஆம்லேட்' எப்படி என்னோட பஞ்ச் டயலாக்?" மிஸ்ட்டர் சன்டேயிடம் பில்ட் அப் கொடுத்துக் கொண்டிருந்தேன் நான்.
"உனக்கு பரீட்சையிலும் முட்டை, நினைவெல்லாம் முட்டை தான்" சன்டே சட் என்று பதில் கொடுத்தார்.
"முட்டைக்குப் பின்னால உயிரு இருக்கு. பொரிச்சா இன்னொரு கோழி. நாம் பொரிச்சு சாப்பிட்டா நம்ம உயிர் வாழறதுக்கு உதவியா இருக்கும். பரிச்சையில முட்டை வாங்கினதால தான், அப்புறமா முட்டி முட்டி படிச்சு நல்ல மார்க்கும், நல்ல எதிர்காலமும் எனக்குக் கிடைச்சுது."
"அதெல்லாம் சரிதான், பரிட்சையில, வாழ்க்கையில பாஸ் பண்ணிட்டு, ஆன்மீகத்துல முட்டை மார்க் வாங்கினா, முட்டை இல்லாத ஆம்லெட் மாதிரி சிக்கன் இல்லாத சிக்ஸ்ட்டி ஃபைவ் மாதிரி இருக்கும்."
"பரவாயில்ல, உங்க உதாரணங்கள் எல்லாமே சூப்பரா இருக்கு"
"விளக்கமா சொல்லாட்டி உன்ன மாதிரி, மரமண்டைங்களுக்கு புரியாது இல்லியா?"
"நமக்கு மண்டை மரமா இருந்தாலும், காஞ்ச மரம் இல்ல. பச்சை மரம். அப்பப்போ துளிர் விடும்."
"லெந்து காலத்துக்கு வசந்த காலம்னு ஒரு அர்த்தம் உண்டு தெரியுமா? காஞ்ச இலைகள் எல்லாம் உதிர்ந்து, புதுசா துளிர் விடறது மாதிரி, வேஸ்ட்டான பழக்கங்கள் எல்லாம் ஒழிஞ்சு, நல்ல புதுப் பழக்கம் எல்லாம் வரணும்னு தான் இப்படிக் காலத்த சர்ச்-ல வச்சிருக்காங்க. ஆனா நீங்க என்னடான்னா, லெந்துல ஃபாஸ்ட் பண்ணிட்டு, ஈஸ்ட்டருல ஃபீஸ்ட்டுக்கு காத்திருக்கீங்க."
"லெந்துகாலம் கர்த்தரோட பாடுகளுக்காக வேதனைல தண்ணி அடிப்போம், ஈஸ்ட்டர்ல அவரு உயிரோட எந்திரிச்சதுக்காக தண்ணி அடிச்சு கொண்டாடுவோம். எல்லாமே நம்ம வசதிக்குத் தானே?"
"இப்படி ஒரு லெந்து ஈஸ்ட்டர் கொண்டாடுறத விட சும்மா இருக்கலாம் இல்லியா?"
"பழக்கமாயிருச்சு. எனக்கு லெந்து காலத்துல நம்பிக்கை இல்லன்னு சொன்னா கோயில்லயும் வீட்டுலயும் விட்டுறவா போறாங்க?"
"அது சரி தான். வாசிக்கிற சுருக்க ஜெபங்கள், செய்யிற பாவ அறிக்கைகள், பாடுற பாட்டுகள், ஒப்பிக்கிற விசுவாசப் பிரமாணங்கள எல்லாம் அர்த்தம் தெரிஞ்சு புரிஞ்சு செய்தாலேயே போதும் பரலோகத்துக்குப் போயிறலாம்."
"இந்த மாதிரி விஷயங்கள் இல்லாம, ஷார்ட் கட்ல, தட்கல் மாதிரி பரலோகத்துக்குப் போறதுக்கு வழி இருக்குதா? ஏதாவது ஊழியக்காரங்க, சிறப்பு ஜெபம், ஆசீர்வாதம் எல்லாம் குடுப்பாங்க தானே?"
"பரலோகம் போக பலருக்கு ஆசை இருக்குது; ஆனா சாவறதுக்கு மனசே இல்ல. அனுதினமும் சிலுவைய சுமக்கணும்னு சொன்னார் இயேசு. நீங்க கழுத்துல ஸ்டைலா தங்கச் சிலுவைய சுமக்கிறீங்க."
"சாகறத விட பரலோகம் தானே நல்லது?"
"மரணம் இல்லாம, பரலோகம் இல்லியே?"
"எலியா, ஏனோக்கு போனாங்கன்னா, நம்மளாலேயும் முடியும் தானே?"
"இயேசுவே சிலுவை மரணத்துக்குப் போனார், நீ என்ன அவர விட பெரிய இவனா? எலியா ஏனோக்கு எல்லாம் திரும்பவும் உலகத்துக்கு வந்து செத்து தான் அப்புறமா உண்மையாவே பரலோகத்துக்குப் போவாங்க. வெளிப்படுத்தல் புத்தகம் எல்லாம் படிக்கிறது இல்லியா?"
"சரிங்க, நான் செத்து அப்புறமா பரலோகம் போகலாம்னு முடிவு செய்துட்டேன். உங்க பிரசங்கத்துக்கு நன்றி."
"நீ நினைக்கற மாதிரி சாவு ஒரு நாள் வரத்தான் போகுது. ஆனா அனுதினமும் சிலுவைய எடுத்துக்கிட்டு, உயிருள்ள பலியா தினமும் உன்னை நீயே பலிபீடத்துல ஒப்படைக்கணும். அதுதான் இயேசு விரும்புற கிறிஸ்தவ வாழ்க்கை."
"முட்டைய உடைக்காம ஆம்லேட் கிடைக்காதுங்கறீங்க?"
"சரியாப்புரிஞ்சுக்கிட்டே"
No comments:
Post a Comment