Thursday, May 26, 2011

Mr.Sunday

மிஸ்ட்டர் சண்டே!

”திருச்சபையில கூட இவ்வளவு அரசியல் இருக்குதே? ஒரே வாரத்துல இப்படி கட்சி மாறிட்டாங்களே?”

“ஏம்ப்பா இப்படி புலம்புற?”

“பின்ன என்னங்க. போன வாரம் முதல்வருக்காக பெயர் சொல்லி ஜெபம் செய்தாங்க. தேர்தல் முடிவு வந்ததும் புது முதல்வர் பெயரச் சொல்லி ஜெபம் செய்யறாங்க.”

“பரவாயில்லியே லித்தானியா ஜெபத்துல கூட முழிச்சு இருந்திருக்கிற போல இருக்கு?”

“ஆமா கோடை காலத்துல தூக்கம் வந்தாலும் சூடு தாங்க முடியாம தூக்கமும் ஓடிப் போயிடுது. அது இருக்கட்டும் என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க”

“இன்னிக்கு பிரசங்கத்த நல்லாக் கவனிச்சியா? ரோமர் 13 ஆம் அதிகாரத்துல உன் கேள்வி எல்லாத்துக்கும் பதில் இருக்குது.”

“நீங்களே சொல்லிருங்களேன்”

“முன்னாள் இன்னாள் முதல்வர்கள், குடியரசுத்தலைவர்கள், பிரதமர்கள் எல்லாருக்குமே இருக்கற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.”

“அப்படின்னா ஓட்டுப் போட்டவங்க எல்லாம் டம்மின்னு சொல்றீங்களா?”

“ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்தறவர் நம்ம கடவுள் அவர் சித்தம் இல்லாம, அவர் அதிகாரம் தராம எந்த தலைவர்களும் இல்ல. அவங்க நல்லவங்களோ கெட்டவங்களோ”

“அது சரி எல்லாத் தலைவர்களும் நல்ல கெட்டவங்களா இருக்காங்க அல்லது கெட்ட நல்லவங்களா இருக்காங்க”

“கடவுள நம்பாதவங்க அல்லது வேற கடவுள கும்புடுறவங்க யாரா இருந்தாலும் அவங்க தேவ ஊழியக்காரர்கள்னு பைபிள் சொல்லுது”

“ஆமா ஆமா சில தேவ ஊழியக்காரங்களப் பாத்தா, மத்த மதத்துல இருக்கறவங்களே தேவலாம் போலத் தெரியுது”

“அவர்கள் நீதியைச் செலுத்துற தேவ ஊழியர்கள்னு வேதம் சொன்னாலும், அநீதி இந்த உலகத்துல இருக்கத்தான் செய்யுது. அதனால தான் உம்முடைய ராஜ்யம் வருவதாகன்னு எதிர்பார்ப்போட ஜெபம் செய்யறோம்”

“கர்த்தரும் எலக்‌ஷன்ல நிப்பாரா என்ன?”

“அவரோட இரண்டாவது வருகைக்கு அப்புறமா, வெளிப்படுத்தல், ஏசாயா புத்தகங்கள்ல சொல்லியிருக்கற மாதிரி அவரோட ஆட்சி இருக்கும்.”

”இப்போ உலகத்துல இருக்கறதப் பத்திப் பேசுங்க ஐயா, அப்புறமா அடுத்த உலகத்தப் பத்திப் பேசலாம்”

“இப்போ உலகத்துல இருக்கற அரசாங்கத்துக்கு நீ செய்ய வேண்டிய கடமையச் செய்யலன்னா, கடவுளுக்கு எப்படி நீ அடங்கி நடக்க முடியும்?”

“அது சரி யார் ஆட்சி செய்தா எனக்கு என்ன? எந்த அரசாங்கம் வந்தாலும் என்னோட வாழ்க்கை இப்படியே தான் நடக்கப் போகுது. அப்படி என்ன கடமை இருக்குது?”

“வரி, தீர்வை, பயம், கனம் இப்படித்தான் பவுல் வரிசையா சொல்லியிருக்கிறார். ஒவ்வொருத்தரும் அடுத்தவங்களப் பத்தி குறை சொல்லாம, நாட்டுல நடக்கற ஊழல், அநீதியப் பத்தி மட்டுமே எப்பவும் பேசிட்டு இருக்காம, அவரவர் கடமைய அவரவர் செய்தாலேயே, சிறு துளி பெருவெள்ளம்னு சொல்லுற மாதிரி தேவனுடைய ராஜ்யம் இந்த உலகத்திலேயே நடக்கறதுக்கு வாய்ப்பு இருக்குது”

”அதெல்லாம் சரி அதுக்காக அவங்க பெயர எல்லாம் சொல்லி ஜெபம் செய்யணுமா?”

”1 தீமோத்தேயு 2:2ல பவுல் அப்படித்தான் சொல்றார். நமக்கு பக்தியும் ஒழுக்கமும் கலகம் இல்லாத அமைதலான வாழ்க்கை வேணும்னா நம்மை ஆட்சி செய்யறவங்களுக்காக ஜெபம் செய்யணும்.”

“சரி நம்ம டயோசீசன் தேர்தலும் வருது இல்லியா? அதுக்காகவும் எல்லா வேட்பாளர்கள் பெயரையும் சொல்லி அடுத்த வாரத்துல இருந்து ஆராதனையில ஜெபம் செய்யச் சொல்லணும்.”

“சீரியஸ் விஷயங்கள் பேசறப்போ குறும்பு பேச்சு பேசறது தானே உன்னோட புத்தி.”

“ஐயையோ நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. நான் சீரியஸாத்தான் சொன்னேன்.”

No comments: