Wednesday, March 9, 2011

மிஸ்டர். சன்டே - 3

இந்த வாரம் வேதபாட நேரத்து குட்டித் தூக்கத்தில் பேதுருவுக்கு கிடைத்த தரிசனம் எனக்கும் வந்தது. வானத்திலிருந்து ஒரு துப்பட்டி இறங்கி வர, ஈமு, சிக்கன், மட்டன், மாட்டன், மீன், நண்டு, இறால், காடை, கவுதாரி, முயல் போன்ற பார்வைக்கு இன்பமும், புசிப்புக்கு ஏற்றதுமான பல உயிரினங்கள் உயிரில்லாமல், சமைக்கப்பட்டு, பல நிறங்களில் கவர்ச்சியாக “என்னைப்புசி”, “என்னைப் புசி” என்று கோரசாகப் பாடிக் கொண்டிருந்தன. “அடித்துப்புசி” என்று ஆழமான குரலில் ஒரு கட்டளை பிறந்தது. கீழ்ப்படியத் தயாரானேன். “யாவரும் எழுந்து நின்று” கிறிஸ்தவ கீர்த்தனைகளில் ஏதோ ஒரு பாடலைப் பாடும்படி போதகர் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்.

கனவுகளின் பலன்கள் அல்லது அர்த்தங்களைக் கண்டுபிடிப்பதில் வாஞ்சை அதிகமுள்ளவன் என்பதால் அந்த ‘நான் வெஜ்’ கனவைப் பற்றிய சிந்தனையுடன் பிரசங்க நேர நித்திரை கொண்டேன். முந்திய கனவின் அர்த்தம் பிந்திய கனவில் புரிந்தது. அடுத்த வாரத்திலிருந்து லெந்து காலம் துவங்குகிறது. நொந்து போயிருந்த எனக்கு ஆறுதல் தரவே அந்த ’தொங்கு ஹோட்டல்’ இறங்கி வந்தது போலத் தோன்றியது. மீண்டும் அந்த அசைவ உணவுகளைக் காண எவ்வளவு முயற்சி செய்தும் பலன் இல்லை. மிஸ்டர். சன்டே தான் அசைந்து அசைந்து வந்தார்.

“என்னப்பா, மாம்சம் சாப்பிட முடியாதேன்னும் மாம்சம் வருத்தப்படுதோ?”

“விரும்பினாலும், விரும்பாட்டாலும், லெந்து காலத்துல ’என்.வி’ கிடைக்காது. கவுச்சி இல்லாம எனக்கு சாப்பாடு உள்ளே போகாது. என்ன பண்றது. நாப்பது நாளுக்கு பல்லக் கடிச்சிட்டு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியது தான்.”

“ ’லெந்து காலத்தை கடுமையாக ஆசரிப்பாயாக’, ‘லெந்து காலத்தில் மாமிசம் உண்ணாதிருப்பாயாக’ அப்படின்னு பத்துக்கட்டளைக்குப் பக்கத்துல ஏதாவது கட்டளை இருக்குதா?”

“அப்படி எல்லாம் இல்ல. கர்த்தர் பாடுபட்டத நினைச்சுப் பாக்கறப்போ, நாமளும் ஒண்ணு ரெண்டு விஷயங்கள விட்டுட்டா அவருக்கும் பிரியமா இருக்கும். வீட்டுலயும் பிரச்சன இல்லாம இருக்கும்.”

“நீ கர்த்தரையும், உன் வீட்டுக்காரங்களையும் மட்டுமில்ல, உன்னையே நீயும் ஏமாத்திக்கிட்டு இருக்கற.”

“என்ன சொல்றீங்க? உபவாசம் கர்த்தருக்குப் பிரியமானது. இயேசு சாமி கூட நாற்பது நாள் ராப்பகல், வனவாசம் உபவாசம் பண்ணினார்-னு பைபிள்ல, பாமாலைல எல்லாம் போட்டிருக்கே?”

“உபவாசம்னா என்ன?”

“மாமிசம், போதை, சிற்றின்பங்கள் அப்படின்னு நம்மகிட்ட இருக்கற கெட்ட விஷயங்கள விடுறது தானே?”

“அதாவது நாப்பது நாளுக்கு மட்டும் விட்டுட்டு அப்புறமா வெளுத்துக் கட்டுறது தான் உபவாசமா?”

“அப்படி இல்ல... நம்மள நாமே கட்டுப்படுத்த முடியும், அப்படின்னு நிரூபிக்கறது தான் உபவாசம்.”

“எதையாவது விடணும், கெட்டது செய்யக்கூடாதுன்னு நெகட்டிவா சொல்றதவிட, எதையாவது நல்லது செய்யணும்னு தீர்மானிக்கறது நல்லது தானே?”

“இப்பத்தான் புதுவருஷ தீர்மானம் செய்து ஊத்திக்கிச்சு. அதுக்குள்ள அடுத்த தீர்மானமா?”

“மாமிசம் சாப்பிடாம இருக்கறத தப்புன்னு சொல்லல, ஆனா, டிவி, செல்ஃபோன், கோள், வஞ்சகம் மாதிரி சில விஷயங்கள லெந்து காலத்துல குறைச்சுட்டு, பைபிள் வாசிக்கறது, ஜெபம் பண்ணுறது, நல்ல புத்தகங்கள வாசிக்கிறது, யாருமில்லாத மத்தவங்களுக்கு உதவி செய்யறது அப்படின்னு நல்ல விஷயங்கள புதுசாப் பிடிச்சுக்கலாம்னு பாசிட்டிவா முடிவு செய்.”

“அதாவது விடுறத விடப் பிடிக்கிறதே மேல் அப்படின்னு சொல்றீங்க.”

“நல்லாப் பிடிச்சுக்கிட்டியே. லெந்து காலம்னாலேயே பாடுபடுற காலம்னு நினைக்காம, உயிர்த்தெழும் நாளுக்கு ஆயத்த காலம்னு நினைச்சா, உன் வாழ்க்கைல உயிர்த்துடிப்பு இருக்கும். அது உன்னச் சுத்தி இருக்கறவங்களையும் பத்திக்கிடும்.”

No comments: