Friday, February 11, 2011

மிஸ்டர்.நோக்கியா, மிஸ்.சோனி & குருஜி.லவ்வானந்தா.

மிஸ்டர்.நோக்கியா, மிஸ்.சோனி & குருஜி.லவ்வானந்தா.
======================================================
ஃபெப்ரவரி 9”
=========

அதிகாலை.
--------

அவனும் நோக்கினான் சோனியும் நோக்கினாள்.

நோக்கியா அவளை முதன் முதலாகப் பார்த்த உடனேயே முடிவு செய்துவிட்டான்.

“கல்யாணம்னு ஒண்ணு எனக்கு நடந்தா அது இவக் கூடத்தான்.” அதை அவளிடம் வாய் விட்டு சொல்லவும் செய்துவிட்டான்.என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், முகம் சிவந்த அவளைத் தன் மொபைல் கேமராவின் ஷட்டரைத் திறந்து மீடியா கார்டில் பதிவு செய்து கொண்டான்.

அவள் முகத்தில் தெரிந்தது கோபம் இல்லை என்று தெரிந்ததும் தைரியமாகச் சொல்லிவிட்டான் ”உடனே பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல.இன்னும் நாலு நாளுல வாலண்டைன்ஸ் டே வருது அன்னிக்கி, பதில் சொன்னாப் போதும்.”

***

ஒன்பதாம் வகுப்பில் இருந்தே படிப்பே கதியாகக் கிடந்ததால் நினைத்துப் பார்க்கவே நேரம் இல்லாத,வீட்டிலும் பள்ளியிலும் இருந்த கெடுபிடிகளில் வாய்ப்பே கிடைக்காத அந்தச் சில நிமிடப் பார்வை சோனிக்குள் அட்னீலரினைப் பொழிந்தது. தமிழ் சினிமாக்களையோ டிவியில் பாடல்களையோ பார்த்திருந்தால் கூட அவளுக்கு செகண்ட் ஹாண்ட் முன் அனுபவம் கிடைத்திருக்கும், அவள் வீட்டில் அதற்கெல்லாம் சான்சே இல்லை. ஒரு பள்ளிக்கூடம் மாதிரியே நடந்த அந்த ப்ளஸ் டூ கோச்சிங் சென்டரில் பெண்களின் பாட்ச் முடிந்த பின்பு தான் பையன்கள் வர முடியும். அன்று அவளது மோபெட் ரிப்பேர் ஆகி நிற்க... அவன் கோச்சிங் சென்டருக்கு லேட்டாக வரும் வழியில் (லேட்டாக வருவதிலும் நன்மைகள்:) அவன் அவளை... இல்லை இல்லை அவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணிக் கொடுக்க... அவர்களுக்கிடையே எதோ ஒன்று ஸ்டார்ட் ஆனதை உணர்ந்தான்.

”இத்தனை க்யூட்டான பெண்ணை இன்னொருவன் கரெக்ட் பண்ணுவதற்கு முன் எப்படியாவது அவள் மனதில் துண்டு கர்சிஃப் எதையாவது போட்டு இடம் பிடித்துவிட வேண்டும்” என்று முடிவு செய்து விட்டான்.அவளது தயக்கமான பார்வை அவனுக்குள் ஒரு தைரியத்தைத் தர பட்டென சொல்லிவிட்டான், “நீ சான்ட்ரா புல்லக் மாதிரியே இருக்கிறே. எனக்கு வைஃப், லைஃப் பார்ட்னர் அப்படின்னு யாராச்சும் வந்தா உன்ன மாதிரி.... இல்ல இல்ல... நீ தான். இல்லாட்டி வேணாம்.”

எந்த ஆண் மகனும் இப்படித் தன்னிடம் பேசியதும் இல்லை, படம் பிடித்ததுவும் இல்லை... ’ஒரே கோச்சிங் சென்டரில் படித்தும் இப்படி ஒரு நபர் இருப்பது தெரியாமல் போய்விட்டதே?’ என்று இருவரும் வருத்தப்பட்டார்கள். ’இந்தத் தவறு தொடரக்கூடாது’ என்று இருவரும் முடிவு செய்து தங்கள் செல் ஃபோன் நம்பர்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

***

மாலை
-----

இரவு 7 மணிக்கு ஸ்பெஷல் க்ளாஸ் முடிந்தபின் ரோட்டுக்கடையில் கோபி மஞ்சூரியன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, தான் பெற்ற இன்பத்தை வையகத்திடம் சொல்லாமல் இருந்த பாவத்திற்குப் பரிகாரம் செய்தான் நோக்கியா. “சைனா கொஞ்சம் எங்கூட வர்றியா? எங்க வீட்டு வரைக்கும் வண்டியத் தள்ளிட்டே போய் பேசலாம். அப்புறமா நீ உங்க வீட்டுக்குப் போ”

நோக்கியாவின் கண்களில் தெரிந்த ஃப்ளோரசன்ட் பிரகாசம் ஏதோ ஒரு க்ளூவைக் கொடுக்க, சைனா போட்டு வாங்கினான், “யார்டா அந்தப் பொண்ணு?”

ஆச்சர்யமே இல்லாமல் பதில் சொன்னான் நோக்கியா, “ பேரு தெரியாது...கான்வென்ட்ல படிக்கிறா. நம்ம எஸ்.பி சார் கோச்சிங் சென்டர்ல தான் மார்னிங் பேட்ச்ல படிக்கறா.இன்னிக்கி காலைல தான் பாத்தேன். செல் நம்பர் வாங்கிட்டேன்.”

“சூப்பர் ஃபாஸ்ட்டுடா நீ. பேரு தெரியறதுக்கு முன்னால ஃபோன் நம்பரத் தேத்திட்ட” சைனா டக்கென விஷயத்துக்கு வந்துவிட்டான,”டேய் இப்பவே இங்கேயே அவளுக்கு ஃபோன் போடு. தாமதம் நஷ்ட்டம்.”

“பயம்மா இருக்குடா. ஏற்கனவே திருமாறன் கேஸ்-ல என்ன ஆச்சு தெரியும்ல. பேசாம எக்ஸாம் முடிஞ்சதும் பாத்துக்கலாம்.”

“திருமாறன் லூசாட்டம் விஷயத்த சொதப்பிட்டான். நாங்க சொன்ன அட்வைஸ் எல்லாத்தையும் இக்னோர் பண்ணிட்டுப் போனான். வாங்கிக் கட்டினான். டேய் நீ என்னிய நம்புறியா இல்லியா? நம்பலன்னா இப்பவே சொல்லிடு நான் போறேன்” வண்டியை ஸ்டார்ட் செய்வது போல பாசாங்கு செய்தான் சைனா.

“ஓ. கே டா” என்றான் நோக்கியா.

***

ஃபெப்ரவரி 10
==========

மதியம் சாப்பாட்டு இடைவேளை
----------------------


”சான்ட்ரா புல்லக் யாருடி?”

”ஸ்பீட் படத்துல பஸ் ஓட்டிட்டுப் போவாளே அவ தான் சான்ட்ரா புல்லக். மிஸ்.கன்ஜீனியாலிட்டி... அப்புறம் ஸ்பீடு டூ வுல கூட நடிச்சிருக்கான்னு நினைக்கிறேன். ஏண்டி சோனி நீ தான் படமே பாக்க மாட்டியே ஒனக்கு ஏன் இந்த சந்தேகம் எல்லாம் வருது?” பிடித்துக் கொண்டாள் சாரா.

கடைசியில் தன் உயிர்த் தோழி சாராவிடம் காலையில் நடந்தவைகளை எல்லாம் அப்படியே சொல்ல அங்கே ஒரு திட்டம் தயாரானது.

மாலை
-----


வீட்டுக்கு வந்த சோனி உடனடியாக குளித்து உடை மாற்றிக் கொண்டு தன் அறைக்குள் அடைக்கலமானாள். கதவைத் தட்டி ”பூஸ்ட் போட்டுத் தரட்டுமாம்மா?” என்ற அம்மாவுக்கு ஒரு டோஸ் விட்டுவிட்டு, லேசான சத்தத்தில் ஸ்டீரியோவைப் பாட வைத்துவிட்டு பால்கனிக்குப் போய் தன் செல் ஃபோனை ஆன் செய்தாள்.

”எனக்கு வைஃப், லைஃப் பார்ட்னர் அப்படின்னு யாராச்சும் வந்தா உன்ன மாதிரி.... இல்ல இல்ல... நீ தான். இல்லாட்டி வேணாம்” வசனத்தை நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டாள். “இவனக் கட்டிக்கப்போற குடுத்துவச்ச பொண்ணு... யாரோ.... இல்ல இல்ல... அந்த குடுத்து வச்சவ நான் தான்.”

அதற்குள் அவள் ஃபோன் வைப்ரேட்டர் மோட்-இல் துடிக்க முதல் ரிங் முடிவதற்குள் எடுத்து ”ஹலோ நான் சோனி பேசறேன்” என்றாள்.

அடுத்த பக்கத்தில் “ஓ உம் பேரு சான்ட்ரா புல்லக் இல்லியா?” என்று நோக்கியா கேட்கவும் இருவரும் சிரித்தார்கள். அப்படியே 16 நிமிடம் வழிந்தும் வழியாமலும் புரிந்தும் புரியாமலும் அவர்கள் பேசிய பேச்சுக்களை எல்லாம் சோனி தன் மொபைலில் ரெக்கார்ட் செய்து கொண்டாள். நாளைக்கு சாராவிடம் அதை ப்ளே பண்ணிக் காட்டாவிட்டால் ஃப்ரண்ட்ஷிப்பே முடிந்துவிடும் என்று எச்சரிக்கை விட்டிருந்தாளே! அன்று இரவு அந்த 16 நிமிடப் பேச்சுக்களையும் - அவன் தான் அதிகம் பேசியிருந்தான் - ஒரு இரவல் கவிதை உட்பட, அவள் சுமார் 13 தடவைகள் கேட்டுவிட்டிருந்தாள்.

***

சைனா சொன்னான், “டேய் நீ எங்கூட டவுன் ஹாலுக்கு வர்றே.”

“டேய் வீட்ல போய் படிக்கணும். நாளைக்கு டெஸ்ட்டு வேற இருக்கு” செல்ஃபோனில் மெசேஜ் அனுப்பிக் கொண்டே பதில் சொன்னான் நோக்கியா.

“ஜஸ்ட் நாப்பத்தஞ்சு நிமிஷம். அப்புறமா சொல்லு அடுத்த மூணு நாளும் போகலாம்டான்னு என்னப் பாத்து கெஞ்சப் போற.” வழக்கம் போல சைனா ஜெயித்தான்.

***


”லவ்வானந்தா” அந்தப் பெயரைக் கேட்டதுமே நோக்கியா சிரித்துவிட்டான். ஆனால் அவர் மேடையில் ஏறியதுமே அவரது ஜீன்ஸ், வெள்ளைச் சட்டை, தோள் வரை தொங்கும் முடி, வசீகரமான சிரிப்பு எல்லாவுமே அவனைக் கவர்ந்தது. அத்துடன் அவர் யூத் மொழியில் பேசினார். குட்டிக்கதைகள் சொன்னார். அவரது பேச்சின் தலைப்பு அவனைக் கட்டிப் போட்டுவிட்டது. ”லவ் பண்ணுங்க ப்ளீஸ்.”

அவர் பேசிக் கொண்டே நடுவில் சில காட்சிகளை எல் சி டி திரையில் போட்டுக் காட்டினார். கூட்டம் முழுவதும் அவர் ஜோக் அடிக்கும் நேரம் தவிர பின் ட்ராப் சைலன்ட் ஆக இருந்தது. அங்கே இருந்தது எல்லோருமே டீன்களும் ட்வென்டிஸ்களும். நோக்கியாவின் கணக்குப்படி அவனுக்குக் கம்பெனிக்கு சில யூனிஃபார்ம் போட்ட ஸ்கூல் பையன்களும், சில கான்வென்ட் பெண்களும் இருந்தார்கள்.

“ஒழுக்கத்தப் பத்திப் பேசப் போறேன், அல்லது கடவுளப் பத்திப் பேசப் போறேன் -னு சொல்லியிருந்தா உங்கள்-ல முக்கால்வாசிப் பேரு வந்திருக்கவே மாட்டீங்க, வந்தவங்களும் எந்திரிச்சுப் போய்டுவீங்க. ஆனா உங்களுக்கு பிடிச்ச, தேவையான, சப்ஜக்ட்ல பேசிட்டு நான் சொல்ல வர்ற விஷயங்களையும் வாழப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி சொல்லப் போறேன். லவ்வுக்கு நான் ஒரு டெஃபினிஷன் குடுக்கப் போறேன். எல்.ஒ.வி.இ அப்படின்னு நாலு எழுத்துக்கும் ஒவ்வொரு விளக்கம் தந்துட்டு கடைசி நாள்-ல அந்த நாலையும் சேத்து ஒரு சின்ன கார்ட் உங்களுக்குப் பரிசாத் தரப் போறேன்.அடுத்த வருஷம் இதையே ஒரு புத்தகமா அல்லது வீடியோவா எடுக்கறாப்புல ஐடியா இருக்குது” நிறைய கதைகள், விளக்கங்கள், படங்கள், பாடல்கள் என்று பட்டையைக் கிளப்பினார் லவ்வானந்தா.

நோக்கியாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ’இவர் ஒரு சாமியாராக இருக்க முடியாது. ஆனால் இவர் விவரமானவர், வாலிபப் பசங்கள புரிஞ்சுக்கிட்டவர், நம்ம மேல அக்கற உள்ளவர்.’

”லவ் அப்படின்னா காதல் மட்டும் தான்னு நினைக்காதீங்க. இந்தக் கூட்டத்துல இருக்கற எல்லாருமே காதலிச்சுட்டு இருக்கறவங்க அப்படின்னு சொல்ல முடியாது. ஆனா எல்லாருமே காதலிக்கணும். கல்யாணம் முடிஞ்சதும்... பொண்டாட்டியக் காதலிக்கணும்” எல்லோரும் ’ஓ’ என்று கத்தினார்கள். “நான் கல்யாணத்துக்கு முன்னால வர்ற காதலுக்கு எதிரியும் இல்ல” இப்போது இன்னும் பலமான “ஓ” சத்தம். ”ஆனால் எல்லாத்துக்குமே ஒரு அளவு, ஒழுக்கம் இருக்கு” “நான் லவ் பண்ணாதீங்க-ன்னு சொன்னா நீங்க பண்ணாம இருந்துடப் போறீங்களா?” சத்தம் பலத்தது. அவர் கைகளை அசைக்கவும் மந்திரம் போல சத்தம் குறைந்தது.

“இல்ல லவ் பண்ணுங்கன்னு சொன்ன உடனேயே பண்ணிடப் போறீங்களா?” கூட்டத்தைக் கவர்ந்துவிட்டார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. குழப்புவது போல இருந்தது. ஆனால் ஏதோ ஒன்றைக் கடைசியில் சொல்லி முடிக்கப் போகிறார் என்பது மட்டும் தெரிந்தது.

“நான் சொல்லப் போற லவ் வித்தியாசமானது. இன்னும் நாலு நாளுல காதலர் தினம் அப்படின்னு கொண்டாடப் போறீங்க. காதல் பண்றதுக்கு ஒரு நாள் குறிச்சா, ஒரு நாள் மட்டும் லவ் பண்ணுனா போதுமா? வருஷம் முழுசும் 365 நாளும் லவ் பண்ணணும்னு நான் சொல்றேன்.” விசில்கள், கைத்தட்டல்கள்,கத்தல்கள் தொடர அவரும் தொடர்ந்தார், “காதல் மட்டும் தான் லவ் இல்ல. அன்பு, நேசம், பாசம், நட்பு, மனித நேயம் இப்படின்னு நிறைய இருக்கு. நான் உங்களுக்கு இந்த நாலு நாளும் சொல்லப் போற விளக்கங்கள் மனுஷங்க மத்த மனுஷங்க கிட்ட வச்சுக்கிற எல்லா உறவுகளுக்கும் பொருந்தக்கூடியது. காதலுக்கு மட்டும்னு நினைச்சுக்கிட்டா நீங்க சிறு பிள்ளைத் தனமா இருக்கீங்கன்னு அர்த்தம். ஆனா இந்த வயசுல அதப்பத்தித் தான் நீங்க அதிகம் நினைப்பீங்க, இது புரியாட்டி நான் சிறு பிள்ளைத் தனமா இருக்கேன்னு அர்த்தம். அதனால நான் லவ் பத்தி இப்போ சொல்லப் போறத கவனமா ஞாபகத்துல வச்சுக்கிட்டா அது எல்லா உறவுகளுக்கும் எப்படி பொருந்துதுன்னு நீங்களே நல்லா யோசித்துப் பாக்கலாம். கடைசி நாள் நான் தர்ற கார்ட பத்திரமா வச்சுக்கிட்டா உங்க வாழ்நாள் முழுசும் அது உங்களுக்கு உபயோகமா இருக்கும். எனக்கு என்னோட குருஜி தந்த புத்தகத்த நான் இப்பவும் வச்சிருக்கிறேன்.” ஒரு பழைய கிழிந்து ஒட்டுப் போட்ட புத்தகத்தைத் தூக்கிக் காட்டினார் லவ்வானந்தா. அத வச்சுத்தான் நான் உங்களுக்கு இதையெல்லாம் பேசறேன்.”

“இவரு ஏதோ புத்தகத்த விக்கறதுக்காக இப்படி ஸ்டன்ட் அடிக்கறாரு போல” என்றான் நோக்கியா.

“போடா லூசு, அவர எனக்குத் தெரியும். கடைசி நாள் வந்து பாரு. எல்லாம் ஃப்ரீ. இந்த ஆளு பெரிய மீடியா கம்பெனி வச்சிருக்கார். அதுல வர்ற லாபத்துல தான் இப்படி எல்லாம் செய்றாரு.”


***

”எல்” - எல்லோருமே தனித்தன்மை உள்ளவர்கள்...
--------------------------------------

”உங்க கைரேகை, கண் விழி, டி என் ஏ, திறமைகள், ரசனைகள், குணங்கள் எல்லாமே சேந்த கலவை தான் நீங்கள். உங்கள மாதிரி கலவை உள்ள இன்னொரு மனுஷனோ மனுஷியோ இந்த உலகத்துல இருந்ததும் இல்ல. இப்போ இல்லவும் இல்ல. இனிமே இருக்கப் போறதும் இல்ல. அதனால ஒருத்தர் கிட்ட வேகிற பருப்பு இன்னொருத்தர்ட்ட வேகாது. உங்க தனித்தன்மைய நீங்க விட்டுக் கொடுத்துடக் கூடாது. மந்தைல உள்ள ஒரு ஆடு மாதிரி, ’எல்லோரும் போறாங்க நானும் போறேன்’, ’எல்லோரும் செய்யறாங்க, நானும் செய்யறேன்’ அப்படின்னு செஞ்சீங்கன்னா நீங்களே உங்க தனித்தன்மைய மதிக்கலன்னு அர்த்தம். அதே மாதிரி நீங்களும் மத்தவங்க தனித்தன்மைய மதிக்கணும். அவங்களுக்கும் சில ஆசைகள், திறமைகள், ரசனைகள், விருப்பங்கள், வெறுப்புகள் இருக்கும் அதையெல்லாம் மதிக்கணும். இப்படி இருந்தா இந்த உலகத்துல உறவுகள்-ல உரசல்கள் குறையும். ’எல்லோரும் லவ் பண்றாங்க, நானும் லவ் பண்ணணும், எல்லோருக்கும் பாய் ஃப்ரென்ட்ஸ், கேர்ஸ் ஃப்ரென்ட்ஸ் இருக்காங்க அதனால எனக்கும் வேணும்’-னு நினைச்சா நீங்க மந்தையில இருக்கற ஆடுகள் மாதிரி. ஜீசஸ் க்றைஸ்ட், அப்துல் கலாம், க்ளிஃப் ரிச்சர்ட், மதர் தெரசா, இவங்க எல்லாம் லவ் பண்ணல, அதனால அவங்களுக்கு எதுவும் குறைஞ்சு போகவும் இல்ல. ஆனா அவங்க மனுஷங்கள லவ் பண்ணுனாங்க, பண்றாங்க... அதுக்காக நீங்க லவ் பண்ணக்கூடாது, ஃப்ரென்ட்ஸ் வச்சுக்கக் கூடாது-ன்னு சொல்லல. சொல்ல மாட்டேன்... எதையும் புரிஞ்சு செய்யணும், சரியாச் செய்யணும், நல்லதச் செய்யணும், நல்லதாச் செய்யணும். உங்க தனித்தன்மை அடுத்தவங்க தனித்தன்மை இதையெல்லாம் பாதிக்காத மாதிரி தான் எதையும் செய்யணும்.”


இரவு / நடு இரவு
-------------


அன்று இரவு நடந்த எஸ் எம் எஸ் பரிமாற்றங்களில் நோக்கியாவும் சோனியும் தங்களைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டார்கள்.

நோக்கியா - விளையாட்டுப் பிரியன். சோனி - புத்தகப்புழு. நோக்கியா - ஜாலி டைப். சோனி - மூடி டைப். நோக்கியா - கிட்டார் வாசிப்பான். சோனி - ஸ்டாம்ப் சேகரிப்பாள், சமைப்பாள்.

அடுத்த நாள் டவுன் ஹாலுக்கு வரும்படி நோக்கியா சோனியை அழைத்தான். ”வெளியே சுத்தறது எல்லாம் எனக்கும் பிடிக்காது. வீட்டுல தெரிஞ்சா சங்கு தான்” என்று முற்றுப்புள்ளி வைத்தாள் சோனி.



ஃபெப்ரவரி 11
==========

மதிய உணவு இடைவேளை
-------------------

சாரா அந்த 16 நிமிட உரையாடலையும் கேட்டுக் கொண்டிருக்கும் போதே வார்த்தைக்கு வார்த்தை கூடவே சேர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள் சோனி. அன்று மாலை சாராவின் கைனடிக் ஹோண்டாவில் சோனியும், சைனாவின் பல்சரில் நோக்கியாவும் உட்கார்ந்து கொண்டு பதிலுக்குப் பதில் எஸ் எம் எஸ் அனுப்பிக் கொண்டே போனார்கள். மார்க்கட் ரோட்டில் ஒருவரை ஒருவர் தாண்டிச் செல்லும் போது கை காட்டிக் கொண்டார்கள்.


***
மாலை
-----


”ஒ” - ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொண்டு...
---------------------------------

”ஆண், பெண், வயசுப் புள்ளைங்க, வயசானவங்க, படிச்சவுங்க, படிக்காதவுங்க இப்படின்னு பல வித்தியாசங்கள் நமக்குள்ள இருந்தாலும். நாம் எல்லாரும் மனுஷங்க தான். நமக்கு சில ஒற்றுமைகள் இருக்குது. இந்த ஒற்றுமைகளைப் பகிர்ந்துகிட்டு உறவுகள வளக்கலாம். ஆனா ஜாதி,மதம்,கட்சி இப்படிப்பட்ட ஒற்றுமைகளக் காரணமா காட்டி வெறியோட இருக்கறது, தங்களோட இல்லாத மத்த கூட்டத்துக்காரங்க மேல பகை, விரோதம் வச்சுக்கிட்டு வன்முறையில ஈடுபடறது எல்லாவுமே மனுஷத் தன்மை இல்லை. இரத்தம் ஒரே நிறம், ஒன்றே குலம் ஒருவனே தேவன், யாதும் ஊரே யாவரும் கேளிர் அப்படிங்கற உண்மையப் புரிஞ்சுக்கிட்டா, நம்மோட தனித்தன்மைய நினைச்சு பெருமையும் வராது, நம்மோட பலவீனங்கள நெனச்சு பெருமூச்சும் வராது. என் வெற்றி உன் வெற்றி உன் வெற்றி என் வெற்றி எல்லாவுமே நம் வெற்றி அப்படின்னு பரந்த மனசு நமக்கு வரும். அதனால மனுஷன மனுஷனா மதிச்சு, அந்த ஒற்றுமையினால ஒருத்தர ஒருத்தர் மதிச்சு நடந்துக்கிட்டா உறவுகள் பலப்படும். லவ் பண்றவங்க எவ்வளவு தான் கடலை போட்டுட்டு இருந்தாலும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்குவாங்கன்னு சொல்ல முடியாது. கல்யாணம்-னு வந்ததுக்கு அப்புறம் தான் உண்மையான கலர் தெரியும். பெத்தவங்க பாத்து வச்ச கல்யாணமோ, தாங்களே பாத்துக்கிட்ட கல்யாணமோ கல்யாணத்துக்கு அப்புறமாத் தான் உண்மையிலேயே ஒருத்தர் ஒருத்தர் மனசுல இருக்கற ஆழமான எண்ணங்கள், குணங்கள் இதுல இருக்கற ஒற்றுமை தெரியும். சில வேற்றுமைகளும் கூட ஒற்றுமையா மாறுரது, நல்ல அன்போட பழகற தம்பதிகள்ட்ட தான் நடக்கும்.”


இரவு / நடு இரவு
-------------

இன்றைய எஸ் எம் எஸ்களில் அவர்கள் தங்களுக்குள் இருந்த ஒற்றுமைகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள்.

”சிக்கன் சிஸ்ட்டி ஃபைவ் எனக்குப் பிடிக்கும்”

“எனக்கும் தான்”

“ஏ ஆர் ரஹ்மான்”

“மீ டூ”

“நாய்க்குட்டி”

“ஐயோ எனக்கு ரெம்ப பிடிக்கும்”

“எங்க வீட்ல டாபர் மேன்”

“லேப்ரடார்”

”சான்ட்ரா புல்லக்?”

”ஃபெப்ரவரி 9 ஆம் தேதியில இருந்து பிடிக்கும்”


***

ஃபெப்ரவரி 12
==========

மாலை
-----


”வி” - வித்தியாசங்களைப் புரிந்து கொண்டால்...
-----------------------------------

”மனுஷங்க எல்லாரும் மனுஷங்க தான். ஆனா நாம எல்லோரும் தனித்தன்மை உள்ளவங்க, அதனால நமக்குள்ளால வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். நம்மோட பிறவிக்குணங்கள், நாம வளந்த சூழ்நிலை, நாம கஷ்ட்டப்பட்டு உழைச்சு உண்டாக்குன பழக்க வழக்கங்கள் எல்லாவுமே நம்மை மத்தவங்கள்ல இருந்து வித்தியாசப்படுத்தத் தான் செய்யும். உதாரணமா ஒருத்தருக்கு புத்தகம் படிச்சுட்டு இருக்கறது ரொம்பப் பிடிக்கும். இன்னொருத்தருக்கு விளையாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். ரெண்டு பேருக்கும் நடுவுல உறவு நல்லா இருக்கணும்-னா புத்தகத்தப் படின்னு அவனும், பாலப் புடின்னு இவனும் சொல்லாம. புத்தகத்தப் படிச்சுக்காட்டி, பாலப் புடிச்சுக்காட்டி தங்களோட ஃபீல்டப் பத்தி ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் செய்துட்டு, கொஞ்சம் விட்டுக் கொடுத்தா உறவு நல்லா இருக்கும். ”நானும் புத்தகத்தப் படிச்சுப்பாக்கலாமே”, ”நீ எனக்கு விளையாட்டக் கத்துத் தாயேன்” அப்படின்னு அடுத்தவங்க அனுபவங்களப் புரிஞ்சுக்க முயற்சி செய்தால் உறவுகள்-ல பாலங்கள் கட்டலாம். என்னைப் போலவே அடுத்தவரும் மாறணும்-னு பிடிவாதமா நினைச்சா உறவுல விரிசல்கள் தான் வரும்.”

“காலைல எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தேனே ஏன் பதில் இல்ல?”

“டெஸ்ட்டுக்குப் படிச்சிட்டு இருந்தேன். மறந்துருச்சு... சாரி.... ப்ளீஸ்”

“இப்பவே மறக்குதே?”

“இப்பத்தானே பழக ஆரம்பிச்சிருக்கோம்?”

“அப்போ இதுக்கெல்லாம் வருஷக்கணக்கா ஆகணுமோ?”

“ஐயோ... லூசு மாதிரி பேசாத...”

“ஆமா நான் லூசு தான்... நான் மட்டும் எஸ் எம் எஸ் அனுப்பிட்டு பதில் வரலியே அங்கே எதுவும் பிரச்சனையோ என்னவோன்னு பதறிட்டு இருக்கேன்... நீங்க மறந்துருவீங்க... நாங்க லூசா ஆயிருவோம்...”

இரவு / நடு இரவு
-------------

அன்று இரவு மன்னிப்புகள், புதுப்பிப்புகள் நடந்தன. இனிமேல் சேவல் கூவாவிட்டாலும் குட் மார்னிங் எஸ் எம் எஸ் வந்தே தீரும்,சூரியன் மறையாவிட்டாலும் குட் நைட் எஸ் எம் எஸ் அனுப்ப மறக்க மாட்டோம் என்று இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

***

ஃபெப்ரவரி 13
==========

மாலை
-----


”இ” - இன்பமாக இருக்கும் வாழ்க்கை...
------------------------------

”ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டா மந்திரத்துல மாங்கா காய்க்கறது மாதிரி, அந்தக் காலத்து கதைகள்ல கடைசியில வர்ற மாதிரி, அவர்கள் அதற்குப் பின்பு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் அப்படின்னு நடக்காது. கதை வேற வாழ்க்கை வேற. இன்பம் அப்படிங்கறதுக்கு விளக்கம் என்னன்னு நமக்குத் தெரியணும். கஷ்ட்டமே இல்லாதது தான் இன்பமா? ஓட்டப்பந்தயத்துக்குப் போறவரு வலிக்காம ப்ராக்டிஸ் பண்ண முடியுமா? ப்ராக்டிஸ் இல்லாம ப்ரைஸ் வாங்க முடியுமா? நோ பெய்ன் நோ கெய்ன். அதனால உலகத்துல மனுஷங்களும், உறவுகளும் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான சிக்கல்களுக்குள்ளே போயிட்டு இருக்கறதால ஒவ்வொரு நாளும் பிரச்சனைகளை எதிர்பார்க்கத்தான் செய்யணும் நாம. வாய்ப்புக்கள் எல்லாத்துலயும் பிரச்சனை இருக்குதான்னு தேடிப்பாக்காம பிரச்சனைகள வாய்ப்புக்களா எடுத்துக்கிட்டா பிரச்சனைகளைத் தீர்த்த திருப்தியும் கிடைக்கும், அடுத்த பிரச்சனைக்கு ஆயத்தமா இருக்கற தெளிவும் இருக்கும். பிரச்சனைன்னு ஒண்ணு வந்தாத் தான் தீர்வுன்னு ஒண்ணு வரும். மேட்ச்-ல கேட்ச் பண்ணிடுவாங்களோன்னு விளையாடாம இருப்பீங்களா? கடைசியில கெடைக்கப் போற வெற்றிக் கோப்பைக்கு முன்னால படுற கஷ்ட்டம், ப்ராக்டிஸ், டயட், டிசிப்ளின், மேட்ச்ல போராட்டம் இதெல்லாம் இன்பம்னு சொல்வீங்களா அல்லது வெற்றிக் கோப்பை மட்டும் தான் இன்பம்னு சொல்வீங்களா? வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சொல்வாங்க இல்லியா அது மாதிரி அவரவருக்கு உள்ள பிரச்சனைகள பின்னால வரப்போற இன்பமான வாழ்க்கைக்கு ஏறிப்போகற வெற்றிப்படின்னு நினைச்சுக்கணும். அன்பு, உறவு, அப்படின்னு இருந்தாலே, கருத்து வேறுபாடுகள், உரசல்கள், சண்டைகள் வரத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் அப்பபோ வர்ற க்ளாஸ் டெஸ்ட், மன்த்லி டெஸ்ட் மாதிரி எடுத்துக்கிட்டு தொடர்ந்து சூப்பராப் படிக்கணும். வாழ்க்கைங்கற யுனிவர்சிட்டியில சாகற வரைக்கும் படிச்சுட்டே இருக்கலாம்.

இரவு / நடு இரவு
-------------

“நாளைக்கு ஞாயித்துக் கிழமை தானே கண்டிப்பா ஏதாவது காரணம் சொல்லிட்டு வா. நம்ம ஆர்ச்சீஸ் பக்கத்துல, காஃபி டேயில சாயங்காலம் 4 மணிக்கு வெய்ட் பண்ணிட்டு இருப்பேன்”

“ஐயையோ, கோச்சிங் சென்டர்-ல டெஸ்ட் இருக்கே? வெளில தனியா போனா மம்மி திட்டுவாங்க.”

“நானும் தான் டெஸ்ட்ட கட் அடிக்கிறேன். அம்மா கிட்ட ப்ரெண்ட்ஸோட போறேன்-னு சொல்லு. அல்லாட்டி ஸ்பெஷல் க்ளாஸ், கம்பைன்ட் ஸ்டடி அப்படின்னு எதாவது சொல்லிட்டு வா. எனக்காக பொய் சொல்லலாம் தானே?”

“நான் எனக்காகவே பொய் சொல்ல மாட்டேன்:) உனக்காக பொய் சொல்லச் சொல்றே? :p”

“அப்போ நான் வேற நீ வேறன்னு பிரிச்சுப் பேசறியா?” பிரச்சனை விவாகரத்து வரை போய்விடுமோ என்று பயப்படும் குடும்பஸ்தர்கள் லெவலுக்குப் போய்விட்டது. கடைசியில் நோக்கியா தீர்க்கமாக எஸ் எம் எஸ் செய்துவிட்டு, அந்த எஸ் எம் எஸ் கிடைத்ததா என்று உறுதியும் செய்து கொண்டான்.

“நாளை காஃபி டே, 4 மணி.யெஸ்-ன்னா வா. நோ-ன்னா வரவேண்டாம். இது தான் கடைசி.”


ஃபெப்ரவரி 14
==========

வாலண்டைன்ஸ் டே வந்து போனது. சோனி வரவே இல்லை. நோக்கியா காஃபி டேயில் காத்திருந்தான் மாலை முழுவதும். பின்னர் அவனும் வீட்டுக்குப் போனான். நொந்து போய் இருந்த அவனுக்கு அன்று குட் நைட் சொல்ல சோனியின் எஸ் எம் எஸ் வரவில்லை. அந்த இரவு பேட் நைட்டானது.


ஃபெப்ரவரி 15
=========

காலை
-----

காலையில் ’குட் மார்னிங் எஸ் எம் எஸ்’ வரும் என்ற ஆவலில் தூங்காமலேயே காத்திருந்தான். லேட்டஸ்ட் விஜய் பாட்டு டவுன் லோட் செய்யச் சொல்லி ஒரு எஸ் எம் எஸ் வந்தது.

சைனாவின் கால் வந்தது “என்ன ஆச்சுடா மச்சி?”


காலையிலேயே கோச்சிங் சென்டருக்குப் பெண்கள் போகும் நேரம் ஒரு டீக் கடையின் ஓலைக்குள் மறைந்து சோனி போகிறாளா என்று கவனித்தான். அவள் போனது போலத் தெரியவில்லை. திரும்பி வந்தது போலவும் தெரியவில்லை. அவன் கோச்சிங் க்ளாஸ்க்கு லேட்டாகப் போனான். கணக்குகளைத் தப்புத் தப்பாகப் போட்டான். நோட்டுக்குள் இருந்து லவ்வானந்தாவின் கடைசி நாள் பேச்சு முடிந்ததும் கொடுத்த சின்ன கார்டு கீழே விழுந்தது. அதிலிருந்து நான்கு முக்கியத் தலைப்புகளும் பளிச் என்று தெரிந்தன.

”எல்” - எல்லோருமே தனித்தன்மை உள்ளவர்கள்.
===================================

”ஒ” - ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொண்டு,
==============================

”வி” - வித்தியாசங்களைப் புரிந்து கொண்டால்,
=================================

”இ” - இன்பமாக இருக்கும் வாழ்க்கை.
===========================

மாலை
-----

மாலை சைனாவுடன் சேர்ந்து லவ்வானந்தாவைப் பார்க்கப் போனான். அவன் நினைத்தது போலவே அவர் வீட்டில் அவர் சாதாரண மனிதனாகத் தான் இருந்தார். அவர் மனைவியும் சின்னக் குழந்தையும் வீட்டின் முன்புறம் ஒரு ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அன்புச் செல்வன் M.E., ”லவ்மீடியா” என்று வீட்டின் முன்பக்கம் பெயர்ப்பலகை இருந்தது.

“வாங்க உக்காருங்க” என்றார் அவர்.

”உங்களுக்கு ஜூஸ் பிடிக்கும் தானே? எங்க வீட்ல காஃபி டீ சாப்டறதில்ல. எழில், இவங்க ரெண்டு பேரும் என்னோட ஸ்பீச்சுக்கு வந்தவங்க. ஜூஸ் கொண்டு வாம்மா?”

நோக்கியா கண்ணீரையும் உணர்ச்சிகளையும் அடக்கிக் கொண்டு தன் கதை முழுவதையும் சொன்னான். ”சார் உங்க லவ் பண்ணுங்க ப்ளீஸ் ப்ரோக்ராம் துவங்குன நாள் தான் எனக்கும் லவ் தொடங்கிச்சு. நாலு நாள்ல, வேலன்டைன்ஸ் டே அன்னிக்கி முடிஞ்சு போச்சு. அவளுக்கு என்ன ஆச்சுன்னும் தெரியல. எனக்கும் தூக்கமே வரல. மனசு கஷ்ட்டமா இருக்கு. படிக்க முடியல. செத்துறலாம் போல இருக்கு”

சிறிது நேரத்தில் ”அம்மா நான் தான் குதுப்பேன்” என்று அந்தக் குட்டிப் பெண் ஒரு ட்ரேயில் ஜூஸ் கொண்டு வந்தாள். ட்ரே நனைந்து அவள் ஃப்ராக்கும் நனைந்திருந்தது.

சிரித்துக் கொண்டே “முழுசும் கீழே சிந்துறதுக்குள்ள அத எடுத்துக்கோங்க.” என்ற அன்புச் செல்வன் தொடர்ந்தார், “தம்பி உங்க வயசுல இதெல்லாம் அதிகம்-னு சொல்ல மாட்டேன். உங்களுக்குள்ளே போற டிவி,மூவி,நெட் எல்லாவுமே அதிகமா இருக்குது. அதுல உங்களுக்கு சொல்லப்படுற செய்தியும் டூ மச்சா இருக்குது. இந்த வயசுல இதெல்லாம் சாதாரணமா எல்லாருக்கும் வரக்கூடியது தான். ஆனா எல்லாத்துக்குமே ஒரு காலம் இருக்குது இல்லியா? நீ இப்போ என்ன வண்டி வச்சிருக்கே?”

“டிவிஎஸ் 50” என்றான் நோக்கியா.

“பல்சர்” என்றான் தலையைக் குனிந்து கொண்டே சைனா.

”18 வயசுல தான் லைசன்ஸ் குடுப்பாங்க. தெரிஞ்சும் உங்க பேரண்ட்ஸ் வாங்கிக் குடுத்துருக்காங்க.ஒடம்பு மனசு எல்லாம் தயாராகாம வண்டி ஓட்டத் தயாரா இருக்க மாட்டாங்கன்னு அரசாங்கம் நினைக்குது. வயசுக்கு வந்து லைசன்ஸ் எடுத்தவங்க எல்லாரும் சரியா நல்லா ஓட்டுறாங்களான்னு நீங்க கேக்கலாம். சின்ன வயசுலேயே வண்டி ஓட்டி கின்னஸ் ரெக்கார்டுல கூட சில பேர் பேர் வாங்கியிருக்காங்களேன்னு சொல்லலாம். ஆனால் விதி விலக்குகளை விதியா எடுத்துக்க முடியாது. நான் சொல்லிக் குடுத்த ’எல்-ஒ-வி-இ’ விளக்கம் ஞாபகம் இருக்குதா?”

இருவரும் தலையாட்டினார்கள்.

”அந்தப் பொண்ணுக்கு என்ன பிரச்சனையோ அதைப் புரிஞ்சுக்கணும் நீ. பசங்க சுத்தலாம், சுத்த விடுவாங்க, ஆனா பொண்ணுங்கன்னாலேயே பெத்தவங்க கொஞ்சம் அதிகம் அக்கறையாவே இருப்பாங்க. அம்மாக்கள் எல்லாம் சின்ன வித்தியாசத்த பொண்ணுங்க கிட்ட பாத்தா உடனே அலர்ட் ஆயிருவாங்க. அது மட்டும் இல்ல, பசங்கள விட பொண்ணுங்க எதிர்காலத்தப் பத்தி அதிகமா யோசிப்பாங்க.திடீர்னு அந்தப் பொண்ணே மனச மாத்தியிருக்கலாம். இல்லாட்டி அவங்க அப்பாவோ அம்மாவோ அவளோட செல் ஃபோனப் பாத்து விஷயத்தக் கண்டு பிடிச்சு கோச்சிங் டியூஷன எல்லாம் மாத்தியிருக்கலாம். ஆட்டோவுல அல்லது அப்பாவோட வண்டியிலேயே கொண்டு விட்டுட்டு கூட்டிட்டு வர ஆரம்பிச்சுருக்கலாம்.அவளுக்கோ அவங்க வீட்டுல யாருக்கோ சுகமில்லாமப் போய் லீவ் போட்டிருக்கலாம். நாளைக்கே கோச்சிங் க்ளாஸ்-க்கு வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல.”

சைனா மெதுவாகப் பேச்சை மாற்றினான் “சார் நீங்க நெனச்சா உதவி செய்யலாம். நான் இதுக்கெல்லாம் பொறுப்பு. ஒரே ஒரு வாட்டி அவங்க பேசிட்டா போதும். இனிமே எக்ஸாம் முடியறவரைக்கும் இவன் அவ கிட்ட பேச மாட்டான், அதுக்கு நான் கியாரண்டி”

“நீ என்ன சொல்றேன்னு எனக்குப் புரியல” சிறு புன்னகையை அடக்கிக் கொண்டு சீரியஸாகக் கேட்டார் லவ்வானந்தா என்னும் அன்புச் செல்வன்.

“நீங்க நெறைய ஜோடிகளச் சேத்து வச்சிருக்கீங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன். உங்க வைஃப்-அ வச்சு சோனி கிட்ட பேசி அப்படியே நோக்கியா கிட்ட ஒரு வாட்டி அவளப் பேச வச்சிருங்க. அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நாங்க கட்டுப்படுறோம்.” தன் மொபைல் ஃபோனை வெளியே எடுத்துக் கொண்டே ஓரக் கண்ணால் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த மேடத்தைப் பார்த்தான்.

தன் கோபத்தை அடக்கிக் கொண்டு புன்னகையுடன் பதில் சொன்னார் அன்புச் செல்வன் “ எனக்கு நல்லாத் தெரிஞ்ச பழகின பசங்க பொண்ணுங்களுக்குத் தான் உதவி செய்திருக்கேன். அதுவும் படிச்சு வேலைக்கு வந்தப்புறம் தான். சட்டப்படி சரியா இருக்கற சூழ்நிலையில ரெண்டு பேரோட பெத்தவங்களையும் வச்சுக்கிட்டுத் தான் பேசியிருக்கேன். உங்கள மாதிரி தனித்தனியா நிறைய பேருகிட்ட பேசி நெறையே பேர் கிட்ட இது உங்களுக்கு வேண்டாம்னு தான் பேசியிருக்கேன். உங்க கேஸ்ல மைனர் பசங்க நீங்க, உங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு நான் ஜெயிலுக்குத் தான் போகணும்.”

இப்போது மெதுவாக நோக்கியாவின் தோள்களில் தன் இடது கையை போட்டபடி அவன் அருகில் நெருங்கி உட்கார்ந்தார்.”தம்பி இது உன்னோட முதல் கேஸ்.அந்தப் பொண்ணுக்கும் முதலாவது. நீங்க ரெண்டு பேருமே இன்னும் எத்தனையோ பேரப் பாக்கப் போறீங்க.எத்தனையோ சூழ்நிலைகள சந்திக்கப் போறீங்க. வாழ்க்கைல எத்தனையோ நல்லது கெட்டதுங்களப் பாக்கப் போறீங்க. நீயில்லாம நான் இல்ல, செத்துருவேன் அப்படின்னு சொன்னவங்க பல பேர நான் பாத்திருக்கேன். அவங்க இப்போ உயிரோட நல்லாவே இருக்காங்க, இன்னொருத்தங்கள கல்யாணம் செய்துக்கிட்டு. எல்லாமே மனுஷ காரியம் தம்பி, யாருக்கு யார் அப்படின்னு நமக்குத் தெரிஞ்சத விட கடவுளுக்குத் தான் அதிகம் தெரியும். எனக்கு இவ இருந்தா நல்லா இருக்கும்-னு நாம சொல்லலாம். ஆனால் இவனுக்கு இவ தான் சரி அப்படின்னு கடவுள் எழுதி வச்சிருப்பான். மேட் ஃபார் ஈச் அதர் அப்படின்னு வாழ்ந்த ஜோடிகள்-ல ஒருத்தர் சின்ன வயசிலேயே செத்துப் போய் அடுத்தவங்க அடுத்த கல்யாணமும் பண்ணி இவங்களும் சூப்பர் ஜோடி-ன்னு பேர் வாங்கிட்டு இருக்கறாங்க. எங்க ரெண்டு பேரோட டீன் ஏஜ்-ல எங்களுக்கு இருந்த அனுபவங்கள நினைச்சா இப்பவும் நாங்க ரெண்டு பேரும் சிரிச்சுக்குவோம். எத்தனையோ பொண்ணுங்களக் கனவுல பாத்து, பின்னால சுத்தி இப்போ இவளக் கை பிடிச்சிருக்கேன். பழசுல கத்துக்கிட்ட பாடங்களத் தான் இப்போ உங்களுக்குச் சொல்லிட்டிருக்கேன். என் வயசுக்கோ, அனுபவத்துக்கோ இல்லாட்டியும் என்னோட அக்கறைக்கு மதிப்பு குடுத்து அந்த நம்பர ஒன்னோட மொபைல்ல இருந்து அழிச்சுடு. அந்தப் பொண்ண நீ பாத்தாலோ, ஃபோன் கால் வந்தாலோ, கண்டுக்காம விட்டுட்டு நல்லாப் படிக்கறதுக்கு வழியப் பாரு. இப்போ நான் சொல்றத உங்களால ஏத்துக்க முடியாது தான் ஆனா, எனக்கு இந்த மாதிரி ஒருத்தர் சொல்லப் போய் தான் நான் நல்லாவும் இருக்கேன், நாலு பேருக்கு நல்லது செஞ்சிட்டு இருக்கேன். நான் ஒனக்காக, உன் படிப்புக்காக ப்ரே பண்ணிக்கிறேன். எக்ஸாமுக்கு அப்புறம் நீங்க வாங்க, ஃப்ரெண்ட்ஸையும் கூட்டிட்டு வாங்க அதிகமாப் பேசலாம். அதுக்கு நடுவுல எதுன்னாலும் எனக்கு ஃபோன் பண்ணலாம், பாக்க வரலாம்.”

***

ஃபெப்ரவரி 16
==========

அடுத்த நாள் நோக்கியா சைக்கிளில் தான் கோச்சிங் க்ளாஸ்க்கும் பள்ளிக்கும் போனான்.வழக்கம் போல சைனாவும் அவனும் ரோட்டுக்கடையில் நூடுல்ஸ்,கோபி மஞ்சூரியன் சாப்பிட்டார்கள்.

சைனா கேட்டான் “எப்டிடா இருக்கிறே மச்சி”

உற்சாகம் துள்ளும் குரலில் நோக்கியா சொன்னான் “எனக்கென்னடா,சூப்பரா இருக்கேன்”

“எதுவும் கால் வந்துதா?” சைனா சந்தேகத்துடன் கேட்டான்.

”காலும் வரல கையும் வரல,மொபைல் தான் போச்சு”

“உங்க அப்பா புடுங்கிட்டாரா?”

“நானே குடுத்துட்டேன். அப்ப நான் வரட்டா” என்றான் நோக்கியா.

பர்ஸில் இருந்து காசு எடுக்கும் போது லவ்வானந்தாவின் கார்டும் வெளியே வந்தது. ஒரு தடவை அதைப் பார்த்துவிட்டு உள்ளே வைத்தான்.


=============================================================================================================================

”எல்” - எல்லோருமே தனித்தன்மை உள்ளவர்கள்.
===================================

சங்கீதம் 139:4, ஆதியாகமம் 5:1-2, சகரியா 2:8, ஏசாயா 43:1, மத்தேயு 10:30

”ஒ” - ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொண்டு,
==============================

கலாத்தியர் 3:28, ரோமர் 3:22- 23, சங்கீதம் 100:3, 1 கொரிந்தியர் 12:12,20


”வி” - வித்தியாசங்களைப் புரிந்து கொண்டால்,
=================================

1 கொரிந்தியர் 12:14-19,


”இ” - இன்பமாக இருக்கும் வாழ்க்கை.
===========================


1 யோவான் 4:11, மத்தேயு 7:12.


9994258788 yaway.in

=============================================================================================================================

சைக்கிள் பெடலை உந்திக் கொண்டே சீட்டில் உட்காரும் போது மனதிற்குள் சொல்லிக் கொண்டான் நோக்கியா ”ஆதியாகம், சங்கீதம், கலாத்தியர் அப்படின்னு எழுதி நெறைய நம்பர்கள்லாம் போட்டிருக்காங்களே அதெல்லாம் என்னன்னு அன்பு சார் கிட்ட கேக்கணும்.”

***

No comments: