Friday, January 28, 2011

மிஸ்ட்டர் சன்டே. 2

"ஏம்ப்பா, ஒனக்குத்தான் வசதியான வீடு, படுக்கை, மெத்தை எல்லாம் இருக்குதே, இப்படி வந்து கோயில்ல மர பெஞ்ச்-ல உக்காந்துட்டே தூங்கணும்னு எதுவும் வேண்டுதல் பண்ணியிருக்கியா? கழுத்து சுளுக்கிக்கப் போவுது."

“ஏங்க, தூக்கம் வர்றதே ஏதோ ஒரு பெரிய ஆசீர்வாதம் மாதிரி இருக்குது. நீங்க வேற தூக்கத்தக் கெடுத்துருவீங்க போல இருக்கே?”

“எங்கிட்ட நீ பேசிட்டு இருக்கறதே, என்னோட ஆசீர்வாதத்தால தான் அதப்புரிஞ்சுக்கோ. அது இருக்கட்டும் நீயே பரிசுத்த ஆவியானவர் வாழும் ஆலயம்னு பைபிள் சொல்லுதே, அப்புறம் ஏன் நீ கோயிலுக்குப் போகணும்?”

“அது எப்படிங்க இத்தன வருஷத்து பழக்கத்த விட்டுற முடியுமா? அப்புறமா ஞாயித்துக்கிழம காலைல வேற என்னத்த தான் செய்ய முடியும். சரி நீங்க என்ன தப்பு கண்டுபிடிக்கலாம்னு தானே இப்படி சொல்றீங்க. அதே பைபிள் தானே சபை கூடி வருதலை விட்டுவிடாதீர்கள்-னும் சொல்லுது?”

”ஆலயம் வேற சபை வேற திருச்சபைங்கறது வேற”

“ஐயோ, திரும்பவும் மொக்கையப் போட ஆரம்பிச்சுட்டீங்களா? ஐயா தெரியாமத்தான் கேக்கிறேன், நீங்க என்ன மட்டும் தான் குறி வச்சு வந்திருக்கீங்களா? அல்லது வேற ஆட்களும் உங்க கிட்ட சிக்கிக்கிட்டு முழிக்கிறாங்களா?”

“உன்ன மாதிரி யோசிக்கிறவங்க கிட்ட மட்டும் தான் நான் பேசுவேன். அது சரி உலகம் எங்கும் தேவனைத் தொழுது கொள்ளும் காலம் வருகிறதுன்னு இயேசு சொல்லியிருக்காரே, கண்டிப்பா கோயிலுக்கு வந்து தான் இப்படி தூங்கி வழிஞ்சு தொழுதுக்கணுமா? நல்லா தெளிவா முழிச்சுட்டு இருக்கறப்போ தொழுதுக்கலாமே?”

“அப்படின்னா கிரிக்கெட் மாட்ச் பாக்கறப்போ டிவி முன்னால தான் தொழுகை நடக்கணும். மத்தவங்களுக்கு சீரியல் நேரத்துல, சினிமா நேரத்துல. அப்படி மட்டும் இருந்தா, ராவும் பகலும் தொழுகை தான்”

“சரி நீ ஞாயிறு தோறும் கோயிலுக்கு வர்றதால ஏதாவது மாத்தம் நடந்திருக்குதா?”

“எனக்கு மாத்தம் நடந்திருக்குதோ இல்லியோ, எதிர்க்கட்சிக்காரங்களோட நாத்தத்த நான் வெளியே காட்டிட்டு இருக்கேன். பாலிட்டிக்ஸ், வதந்தி, கிசு கிசு, சர்ச்சைகள் எல்லாத்துக்கும் சர்ச் மாதிரி ஒரு சூப்பர் எடம் ஒண்ணுமே கிடைக்காதே!”

“நீயும் அழுக்காகி அடுத்தவங்களையும் அழுக்காக்கறதுக்குப் பேர் தான் பரிசுத்த ஓய்வு நாளா? இது தான் பரிசுத்த ஆலயமா? வீட்டிலேயே தூங்கிட்டு, கடவுளுக்கு பயந்து ஒழுங்கா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?”

“ஐயையோ, கர்த்தருடைய நாள் இது. இது அவருக்கு உரியது”

“அவருக்கு உரியதுன்னா, இந்த பாலிட்டிக்ஸ், வதந்தி, கிசு கிசு எல்லாம் சேந்து அவருக்கு குடுக்கப் போறீங்களா? காயீன் செலுத்துன பலி ஞாபகம் இருக்குதா? சும்மா நித்திரைக்காக கோயிலுக்கு வந்தா, கர்த்தருக்குள் நித்திரையாயிட வேண்டியது தான்”

சமாதானத்துக்காக எழுந்து நிற்போம் என்று போதகர் சொல்ல எழுந்து நின்று அசட்டு சிரிப்புடன் நேர் எதிராகத் தெரிந்த போதகருக்கும் இடது வலது பாரிசங்களில் இருந்த வாரிசையும் வாழ்க்கைத் துணையையும் பார்த்து கை கூப்பிவிட்டுப் பின்புறம் திரும்பினால், அடுத்த கட்சிக்கார கமிட்டி மெம்பர்.... கசப்பை உள்ளே வைத்து பசப்பலாக ஒரு இளிப்பை உதட்டில் வைத்து “சோஸ்த்திரம்” சொன்னேன். பாமாலை 170 பாடுவோம் என்றார் போதகர். “ஆ சகோதரர் ஒன்றாய் ஏகமான சிந்தையாய் சஞ்சரித்தல் எத்தனை நேர்த்தியான இனிமை” என்று உறுதியாகத் தெரியாத ராகத்தில் சபை பாடிக்கொண்டிருந்தது. இப்படி ஒரு வசனம் சங்கீத புத்தகத்தில் இருப்பது எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் பாட்டு இருப்பது தெரியாது. ராகமும் தெரியாததாக இருந்தது.

No comments: