Monday, January 3, 2011

வருஷப் பிறப்பில் ஒரு கிறிஸ்மஸ் கனவு

வருஷப் பிறப்பில் ஒரு கிறிஸ்மஸ் கனவு


டேவிட் ஒரு நடுத்தர கிறிஸ்தவன். ஆன்மீகம், உலக ஆசாபாசங்கள் இவை இரண்டிலும் அதிக ஆழம் போய்விடாமல் ஜாக்கிரதையாக வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கடத்திக் கொண்டிருப்பவன்.

அது ஒரு ஜனவரி மாதத்து சாதா நாள். கிறிஸ்மஸ்க்கு முந்தின நாள் பகட்டாக ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்த அந்தக் கிறிஸ்மஸ் மரம் இன்று நீரின்றி வேரின்றி கிழைகளில் கசங்கிய அலங்காரக் காகிதங்கள் தொங்க, கிழை துவண்டு தலை கவிழ்ந்து ஒரு மூலையில் பரிதாபமாக நின்று கொண்டிருந்தது.

பல் துலக்கத் தன் வீட்டின் கொல்லைப் புறம் சென்ற டேவிட் தன் கனிகளால் கிளைகள் தாழ்ந்திருக்கும் கொய்யா மரத்தையும் கண்டான். அந்த மரத்தின் உயிருள்ள கிளைகள் அவனிடம் ஏதோ பேசியது போல் இருந்தது.

இல்லை இல்லை அந்தக் கொய்யா மரம் சார்பாக டேவிட் தனக்குத் தானே பேசிக் கொண்டான்.

ம்... ஹூம்... அதுவும் இல்லை, கனி தரும் வாழ்வு பற்றி கடந்த வாரம் போதகர் சொன்ன கருத்துக்கள் அவன் மனதில் மரமாகிக் கனி கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

புதிதாகப் பணியில் சேர்ந்து ஐந்து இலக்க சம்பளம் வாங்குகிறான் டேவிட். ஆலயத்துக்கு வாரி வழங்கிய காணிக்கை, ஆலய கமிட்டியில் அவனுக்கு கிடைத்த பதவி, பாடகர் குழுவில் முக்கிய அங்கம், வாலிபர் ஐக்கியத்திற்கு வழிகாட்டும் பொறுப்பு, போதகர் உட்பட பெரியவர்களின் செல்லம், இத்தனையிலும் கிடைக்காத மன திருப்தி, மனமுடைந்து வந்திருந்த உடன் பணியாற்றும் நண்பனிடம் செலவிட்ட அரை மணி நேரத்தில் கிடைத்தது. "நீ ரெம்ப நல்லவண்டா, கடவுள் தாண்டா உன்ன எங்கிட்ட அனுப்பியிருக்காரு." டேவிட் தனக்குள் கொஞ்சம் பெருமைப்பட்டுக் கொண்டான்.

"விழாக்காலக் கொண்டாட்டத்துடன் மறக்கப்பட்டுப் போகும் பரிசுகளைத் தாங்கி நின்ற செத்த கிறிஸ்மஸ் மரத்தை விட கனி தரும் உயிருள்ள கொல்லைப் புறத்து கொய்யா மரமே மேல்."

ஒரு ஓரமாக நின்ற அந்தக் கொய்யா மரத்தின் கனிகள், நன்மை தீமை அறியும் படி டேவிட்டின் அறிவுக் கண்களைத் திறந்து விட்டது போல் இருந்தது.

மினுமினுக்கும் விளக்குகள், பளபளக்கும் பரிசுகள், கலகலக்கும் மணிகள், சரசரக்கும் அலங்காரத் தாள்கள் இவைகள் இல்லாமலேயே, கழிவு நீரைப் பருகிக் கொண்டு, கடும் வெயில் மழையைத் தாங்கிக் கொண்டு, பந்தா பண்ணாமல், விளம்பரம் தேடாமல், சம்பளம் கேட்காமல், விசுவாசமுள்ள வேலைக்காரன் போல நின்ற அந்தக் கொய்யா மரம் ஒரு ஜீவ விருட்சமாகத் தெரிந்தது டேவிட் கண்களுக்கு.

சில பழங்களைப் பறித்துத் தன் பையில் வைக்கும்படி சொல்லிவிட்டு குளிக்கச் சென்றான் டேவிட். தம்பியின் எதிர்மறை பதிலை, ஏற்கனவே எதிர்பார்த்தது போல், அலட்சியம் செய்துவிட்டு குளியலைத் தொடர்ந்தான்.

மதிய உணவுப் பையில் சில பழங்களை வைத்துவிட்டுத் திரும்பிய தன் தங்கையின் நெற்றியில் விழுந்திருந்த ஒரு கற்றை முடியைக் கோதிவிட்டபடியே புன்முறுவலுடன் தன் காலை உணவில் கை வைத்தான் டேவிட்.

வேப்ப மரத்தில் கொய்யாப்பழத்தை எதிர்பார்க்க முடியாதே தனக்குள் சிரித்துக் கொண்டான் டேவிட். கர்த்தரின் தோட்டத்தில் மரங்களின் குணங்கள் மாறுவது ஒன்றும் அதிசயமில்லையே.

"நான் டேவிட். டேவிட் டேவிட் தான்."

நான் தரவேண்டிய கனிகளை நான் தான் கொடுக்க முடியும். கொல்லைப் புறத்துக் கொய்யா மரத்துக்கு ஒரு நோக்கம் இருப்பது போல என் வாழ்க்கையிலும் ஒரு நோக்கம் இருக்கிறது.

உயிர் நீரையும், கதிரவனின் ஒளியையும் பெற்றுத் தானாகவே ருசியான கனிதரும், பிறரை மகிழ்விக்கும் கடமை.... இல்லை இல்லை... பாக்கியம் என்னுடையது. கையைக் கழுவிக்கொண்டிருக்கும் போது அவனுடைய அப்பா அந்த செத்த கிறிஸ்மஸ் மரத்தைக் கொல்லைப் புறத்தின் மூலையில் இருக்கும் குப்பைக் குழியில் போட்டுத் தீ வைத்துக் கொண்டிருந்தார்.

No comments: