மிஸ்ட்டர் சண்டே.
(என் பாஸ்ட்டர் நண்பர் கேட்டுக் கொண்டதால் இதை எழுதத் துவங்கினேன். ஜி.கே.செஸ்ட்டர்டன் எழுதிய ”வியாழக்கிழமை என்று அழைக்கப்பட்ட மனிதன்” (A Man called Thursday) என்ற புத்தகத்தின் தலைப்பு எனக்கு இந்த கருவைத் தந்திருக்கிறது)
வழக்கம் போல் கர்த்தருடைய நாளில் நான் நித்திரைக்குள்ளானேன். எத்தனையாவது வானத்தில் இருந்தேன் என்று எனக்கும் தெரியாது அருகில் இருந்தவர்களுக்கும் தெரியாது. வாரம் முழுவதும் உழைப்பு, சனிக்கிழமையில் பொழுதுபோக்கு, வார இறுதியில் கடைத்தெருவின் லோ லோ அலைச்சல், இவைகளெல்லாம் மட்டும் காரணமல்ல; கர்த்தர் தமக்குப் பிரியமில்லாதவர்களுக்கும் நித்திரையைத் தருவார் என்று சொல்வது போல இருந்தது எனது மைக்ரோ உறக்கம். ஜெப நேரத்தில் கண்களை மூடிக்கொள்ளலாம், கைகளை சப்போர்ட்டுக்கு வைத்துக்கொள்ளலாம். பாடல் நேரம் எழுந்து நிற்பதால் பிரச்சனை இல்லை. ஆனால் பிரசங்க நேரம் தான் சோதனைக் காலம். இந்த வனாந்திரத்தை எப்படியும் நாம் கடந்து போகத்தானே வேண்டும் வேண்டும்? ஆனால் இன்று மிஸ்ட்டர் சண்டே என்று ஒருவர் என்னுடன் பிரசங்க நேரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அது கனவிலா நனவிலா என்று வித்தியாசம் காணவே முடியவில்லை. அவர் சத்தம் பாஸ்ட்டரின் சத்தம் போலத்தான் இருந்தது. ஆனால் அங்கி மிஸ்ஸிங். பார்க்க வயதானவரைப் போல இருந்தாலும் ஒரு டீன் ஏஜரின் துள்ளல் பேச்சிலும் செயலிலும் தெரிந்தது.
“என் பேரு மிஸ்ட்டர் சண்டே”
“ஓ மிஸ்ட்டர் தமிழ்நாடு மாதிரியா? நீங்க பாடிபில்ட் பண்ணுறவரா? அல்லது சண்டே சர்வீஸ்ல தூங்காம இருந்ததுக்காக உங்களுக்கு இந்த பட்டம் குடுத்திருக்காங்களா?”
“ஞாயிற்றுக்கிழமையே மனுஷ உருவம் எடுத்து வந்திருக்கேன்”
“ஹா.... ஹா.... இயேசு மனுஷ உருவமா வந்ததுக்கே நாங்க அசையல.... நீங்க என்ன பெரிய சண்டே”
“சண்டே ஒரு நாள் வேலைக்குப் போக வேண்டாம்னு இருக்குதே அது மட்டும் இனிக்குதோ?”
“இங்க பாருங்க மிஸ்ட்டர் சண்டே. உண்மைய சொல்லப் போனா, ஆஃபீஸ்ல தான் நான் ரெஸ்ட் எடுக்கறேன், ரிலாக்ஸ்டா இருக்கேன். சண்டே வந்தாலே என்னோட டைம்-டேபிள் எல்லாம் தடுமாறிப் போவுது. கோயில், கோழி, பொண்டாட்டி பிள்ளைங்க, ஷாப்பிங், விசிட்டிங் அப்படின்னு ஒரே தொந்தரவாப் போச்சு. ஓய்வு நாள்ல தான் அதிக டயர்டா ஆவுது. ஞாயிற்றுக்கிழமையும் மத்த நாளுங்கள மாதிரி தான்னு நான் நினைக்கிறேன். எல்லா நாளும் ரெஸ்ட் எடுக்கறோம். சண்டே கூட ஒர்க் பண்ணத்தான் செய்யறோம்.”
”உங்க ஆஃபீஸ்ல இப்படித் தூங்குனா உங்க பாஸ் சும்மா விடுவாரா?”
“பாஸ் சும்மா விட மாட்டார், சரிதான். இங்க யார் பாஸ் அப்படிங்கறீங்க?”
“பாஸ்ட்டர் பேசினாலும் அவர் பேசறது பரலோக பாஸ் சொன்ன வார்த்தைகளத் தானே?”
“சொல்ற முறை, சொல்ற சூழ்நிலை எல்லாம் முக்கியம் இல்லியா?”
“தட்டிக் கேக்க ஆள் இல்லன்னு இப்படிப் பண்ணுற. வேற எங்கயும் நீ இவ்வளவு அசால்ட்டா, தூங்கி வழியற மாதிரி தெரியலியே?”
“நான் ஒரு இடத்துல சும்மா எதையும் செய்யாம உக்காந்திருந்தாலேயே தூங்கிருவேன்”
“ஆராதனை, தியானம் இதெல்லாம் ஆக்டிவ்-ஆ அல்லது பாசிவ்-ஆ? நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்-னு கர்த்தர் சொல்றாரே? உனக்கு வர்ற சம்பளம், போனஸ், இன்க்ரிமெண்ட் பத்தி எல்லாம் இப்படி தூங்கிக்கிடேவா சிந்திச்சுட்டு இருப்பே? சரி இந்த வாரம் பிரசங்கத் தலைப்பு என்ன தெரியுமா?”
“அது எதுவா இருந்தா என்ன? வருஷத்துல முதல் ஞாயிறு, ஏதாவது வாக்குத்தத்தம் ஆசீர்வாதம்னு விளக்கெண்ணெ போட்டு விளக்கிட்டு இருப்பாங்க. புதுவருஷ ஆராதனையிலேயே ஒரு வாக்குத்தத்த அட்டை கிடைச்சிருச்சு. அதத்தான் இந்த வருஷம் முழுக்க அடிக்கடி எடுத்துப் பாத்துக்குவேன்”
“அது என்ன வாக்குத்தத்த வசனம்? தேர்தல்-ல நிக்கிறவங்க யாரும் உங்க சர்ச்-ல இருக்காங்களா அல்லாட்டி ஏதாவது தேர்தல் வருதா?”
“ஐயோ இது கூடத் தெரியாதா? புதுவருஷத்தோட, வாக்குத்தத்தம் குடுப்பாங்க. கர்த்தர் நமக்குன்னு இந்த வருஷத்துல நடக்கப்போறது, தரப்போற ஆசீர்வாத்தத்த எல்லாம் அந்த வாக்குத்தத்த அட்டையில இருக்கற வசனம் மூலமா நமக்குத் தருவாரு”
“அப்போ ஏதாவது கிளி வந்து அந்த அட்டைய எடுத்துத் தருமோ?”
“இல்ல நாம, இல்ல இல்ல நாங்க... அதாவது சபையார் தான் அதப் போய் எடுத்துக்கணும்”
“அது எப்படி உங்க பேர் எழுதி அந்த அட்டையத் தருவாங்களா?”
“அது எல்லாம் வெளிப்படுத்தல் வரம் உள்ள ஊழியக்காரங்க அனுப்பி வைப்பாங்க. இங்கே சர்ச்ல எல்லாம் ரெடிமேடா பிரிண்ட் செஞ்ச அட்டை தான் குடுப்பாங்க. என்ன இருந்தாலும் தாய் சபையில குடுக்கற வசன அட்டை முக்கியம் இல்லியா?”
”அப்போ, ஊழியக்காரங்க எல்லாரும் அனுப்பற வசனங்கள், சர்ச்ல குடுக்கற அட்டை, காலண்டர்ல வர்ற வசனங்கள் இப்படியே ஒரு டஜன் வாக்குத்தத்தங்கள் சேர்ந்திரும் போல இருக்குதே? ஆமா, இந்த ஒரு டஜன் வசனங்களும் வேற வேற வசனமா கிடைக்குமா? அல்லது ஒரே வசனமா இருக்குமா? கர்த்தர் தந்தா ஒரே வசனமா, எல்லாத்தையும் கன்ஃபர்ம் பண்ணுற மாதிரி இருக்கணுமே?”
“அதெல்லாம் கிடையாது, வேற வேற வசனங்களாத்தான் இருக்கும் அதுல எனக்குப் பிடிச்சத கார்ல ஒட்டிக்குவேன்.”
“அதைவிட நீயே பைபிளப் படிச்சு, அதுல இருந்து ஒரு வசனத்தை எடுத்துக்கலாமே?”
“பைபிளப்படிக்க நேரம் இருந்தாத்தான் நான் ஊழியக்காரனா ஆயிருப்பேனே? நமக்குப் பதிலா ஊழியர்கள் வசனம் எடுத்துத்தர்றாங்க. எல்லாம் அவுட் சோர்சிங் மாதிரி தான்”
“எல்லா நாளும் ஒரே நாள் மாதிரி தான் அப்படின்னு சொல்றியே அதே மாதிரி எல்லா வசனங்களும் கர்த்தர் உனக்குன்னு குடுத்த வசனங்கள்னு ஏன் ஏத்துக்க முடியல? எல்லா வசனங்களும் எல்லா விசுவாசிகளுக்கும் அப்படின்னு தானே வேதம் சொல்லுது?”
“ம்? நீங்க சொல்றதும் சரியாத்தான் படுது”
”ஒரு வருஷத்துல பைபிள வாசிச்சு முடிக்கிற மாதிரி அட்டை ஒண்ணு கடையில வாங்கிக்கோ. இந்த வாக்குத்தத்த அட்டைய விட அந்த வாசிப்பு அட்டை உனக்கு நல்லது.”
பிரசங்கம் முடியவும் மிஸ்ட்டர் சண்டே காணாமல் போய்விட்டார். ஆலயத்தைவிட்டு காரில் ஏறும் போது என் மகன் ஒருவருட வேதவாசிப்பு அட்டை ஒன்றைக் கையில் வைத்திருப்பதைப் பார்த்தேன். “டேய் எனக்கும் ஒண்ணு வாங்கிட்டு வாடா” என்றேன். “ ஒரு அங்கிள் வாசல்ல நின்னு குடுத்துட்டு இருந்தாரு, அவரு கையில இருந்தது எல்லாம் காலியாப் போச்சு. அப்பா எனக்கு அது வேண்டாம் நீங்களே வச்சுக்கோங்க” என்று என் கையில் திணித்தான். இன்னொரு சிறுவன் ஒருவருட அட்டையில் ராக்கட் செய்து பறக்க விட்டுக் கொண்டிருந்தான்.
No comments:
Post a Comment