Monday, January 3, 2011

நவதசா

எல்லா புதுவருட ஆராதனையையும் போலத்தான் அன்றும். ஒரே வித்தியாசம் புதுவருடம் பிறந்ததும் எப்போதும் கிடைக்கும் பாயாசத்துக்குப் பதில் இந்த தடவை பேப்பர் கப்பில் காஃபியும் ஒரு சமோசாவும் கொடுக்கப்படும் என்ற இரகசியம் எங்களில் சிலருக்கு மட்டும் தான் தெரியும்.அமெரிக்காவில் வேலை கிடைத்து மூன்று வருடங்களுக்குப் பின் சென்ட், ஷீ, டீ ஷர்ட், ஜீன்ஸ் சகிதமாக செல்வக்குமார் அண்ணன் கிறிஸ்மஸ் லீவுக்கு வந்ததிலிருந்து எங்கள் ஊரிலேயே சில டிஜிட்டல் மாற்றங்கள். மணிக்கு ஒருதடவை வசனம் சொல்லும் கோபுரம், சிடி ப்ளேயரில் பாட்டு.... இரண்டு நாட்களில் அவர் போகப்போவதால் செல்வக்குமார் அண்ணன் கொண்டு வந்திருந்த டி டி எஸ் சிஸ்டத்தில் புத்தம் புது டிவிடி படங்களை எல்லாம் 2012இல் உலகம் அழிந்துவிடும் என்று ஒரு படம் காட்டினார்...எனக்கு இன்னும் புல்லரிக்கிறது. ’ப்ரூஸ் ஆல்மைட்டி’, ’எவன்ஸ் ஆல்மைட்டி’ படங்கள் எல்லாம் கதைச்சுருக்கத்தை சொல்லிவிட்டு சில சீன்களை ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து விட்டுக் காட்டினார். அவர்கள் வீட்டு மாடியில் நாங்கள்
மதியத்திலிருந்து மூவிகளைப் பார்த்துவிட்டு 11.30மணிக்கு நேராகக் கோவிலுக்கு வரும் போது தான் கொட்டாவி வந்தது.

பனிக்காற்று பிடிக்காது என்று ஜன்னலையும் அடைத்து ஃபேனையும் நிறுத்திவிட்டார் ஜான்சன் அங்கிள். மூன்று வாலிபர் பாடல் பாடும் போது எனக்கு தீச்சூளைக்குள் இருந்தது போல இருந்தது.இருந்தாலும் நின்று கொண்டே ஒரு மைக்ரோ தூக்கம் போட்டு கால் முட்டி சட்டென்று மடங்கவும் முழித்துக் கொண்டேன். நல்ல வேளை நான் சுற்றுமுற்றும் பார்த்ததைக் கூட யாரும் பார்க்கவில்லை.

“அக்கினியே, உஷ்ணமே கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்”

பழைய வருஷப் பிரசங்கம் வழக்கம் போல உபதேசியார் மொக்கையைப் போட்டார். ஏதோ ஒரு ஊழியக்காரரின் பத்திரிக்கையிலிருந்து மெசேஜ்-ஐ காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தார்.

”ஐயர்வாள் மாசத்துக்கு ஒருவாட்டி வந்தாலும் சூப்பரா பேசிட்டுப் போய்ருவாரு”

நான் கொட்டாவிக்குள்ளானேன்... நான் எத்தனையாவது வானத்தில் இருந்தேன் என்று எனக்குத் தெரியாது...

வாசலின் நெற்றியில் ’வெல்கம்’ என்று பளபளப்பாக எழுதியிருந்தது. சட்டென உள்ளே நுழைந்ததும் திரும்பிப் பார்த்தேன் ’தாங்ஸ், விசிட் அகெய்ன்’ என்று அதே பளபளா எழுத்துக்கள்.வரிசையில் பலர் உட்கார்ந்திருந்தார்கள். அது ஆஸ்பத்திரியா, பேங்க் கவுண்டரா அல்லது ரெயில்வே டிக்கட் கவுண்டரா என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு முன்பு இருந்த கூட்டம் கரைந்து போயிருந்தது.

”நெக்ஸ்ட்” என்று ஒரு வயதான குரல் டி டி எஸ் ஸ்பீக்கர்களில் கேட்கவும் ஒரு உதவியாளர் தங்கத்தில் தொப்பி மற்றும் பெல்ட் அணிந்து யூனிஃபார்மில் வந்து என் பெயரை வாசித்தார்.அவர் ஆணா பெண்ணா என்று கவனிக்கவில்லை.

நான் ”யெஸ்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனேன்.

”ஒரு நிமிஷம் இங்க உக்காருங்க” அந்தக் கதவுக்கும் அடுத்து இன்னொரு கதவு இருந்த இரண்டு கதவுகளுக்கும் நடுவே ஒரு சோஃபா.அதில் நான் மெதுவாகப் புதைந்தேன்.

உள்ளே இரண்டு பேர் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. ஆனால் ஒருவர் பேசி மற்றவர் பேசிக் கொள்வதற்கு முன் கிரீச் என்று ஒரு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. எனது ஆர்வம் அதிகமாக காதுகளைத் தீட்டிக் கொண்டேன்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல நான் பூமியில இருக்கணும். கரெக்டா பன்னிரண்டு அடிக்கறப்போ என்னை வரவேற்க மக்கள் காத்துட்டு இருப்பாங்க”

கிரீச் சத்தம்...

“கரெக்டா 365 நாள் தான். அப்புறமா நீயும் என்ன மாதிரி தான்” இருமலுடன் கலந்த நடுங்கும் குரல்.

கிரீச் சத்தம்...

“செத்த டைனோசார விட உயிரோட இருக்கற பல்லி தான் பெரிசு” கிண்டல் கலந்த துள்ளும் குரல்.

கிரீச்...

“பல்லிக்கும் சாவு உண்டு”

கிரீச்...

“நேத்து செத்துப் போச்சு...நாளை எப்படின்னு தெரியாது. இன்னிக்கி தான் முக்கியம். இப்போ,நவ்...இஸ் த டைம்”

கிரீச்...

”நீ நவ் சொல்லி மூணு செகண்ட் செத்துருச்சு. நவ் நவ்னு சொல்லிட்டே இரு”

கிரீச்...

“நீ தான் ஒம்போது. நவ்-னா ஹிந்தில ஒம்போது தெரியுமா?”

கிரீச்...

“புதுசுக்கும் நவ்-னு தான் சொல்லுவாங்க. 365நாளுக்கு முன்னால நானும் நவ்... புதுசு தான்”

க்ரீச்...

”பரவால்லியே நெறைய தெரிஞ்சு வச்சுக்கிறியே.வயசுக்கேத்த அறிவு”

க்ரீச்...

”உனக்கும் அடுத்த வருஷம் நெறய அறிவு கிடைக்கும். அதோட ரிட்டையர்மெண்ட்டும் கிடைக்கும்” சிரிப்பும் இருமலும் கலந்த நடுங்கும் குரல்.

க்ரீச்...

”சரி தலையில மங்கி கேப் போட்டுட்டு வர்ரீங்களா? என்னிய மக்கள் வரவேற்கிற அமர்க்களத்தப் பாக்கலாம்.”

க்ரீச்...

”என்னோட ஃபேர்வெல்-லுக்கே நான் போகல.காய்ஞ்ச எலயப் பாத்து துளிர் எல சிரிச்சுதாம்.கீழப்பாத்தா காய்ஞ்சு கீழே விழுந்து மக்கிப் போன எலைகள் எல்லாம் கிடந்துதாம்”

க்ரீச்...

”மக்கிப் போன ஓலைகள் தானே எனக்கு உரமா இருந்து பச்சப்பசேல்னு இருக்க உதவி செய்யுது”

க்ரீச்...

“ஆனா புதுவருஷம் வாக்குத்தத்தம்,தீர்மானங்கள்னு காமெடியா இருக்கும். ஒரே நாள்,ஒரு வாரத்துல எல்லாமே பழசாப்போயிடும் உன்னைப் போலவே”

க்ரீச்...

“ஏன் இத்தனை பொறாமை. நாமளும் இப்படி இருந்துட்டு வந்தவங்க தானே. பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடட்டும்னு விடுங்களேன்”

க்ரீச்...

“புதுசுங்கறதே ஒரு மாயை தான். நேத்து இருந்தது தான் இன்னிக்கி இருக்குது. இன்னிக்கி இருக்கறது தான் நாளைக்கும் இருக்கப் போவுது. மில்க்கி வேய்க்கு உள்ள எதுவுமே புதுசு இல்ல. தெரியுதா ரெம்ப சவுண்ட் சீன் உடாதே”

க்ரீச்...

”ஓகே அதுக்காக பழையகாலத்து பைபிள் வசனத்துல இருந்து வாக்குத்தத்தம் எல்லாம் காமெடின்னு சொல்றீங்க? சேம் சைடு கோலா?”

க்ரீச்...

”எல்லாக் காலத்தையும் கடந்து எப்பவுமே புதுசா இருக்கறது தான் பைபிள். அதுல இருக்கற எல்லா வசனங்களும், எல்லா ஆட்களுக்கும் எல்லா நாட்களுக்கும் பொருந்தும். சும்மா ஆளுக்கு ஒரு வசனம் இந்த வருஷத்துக்கு அப்படின்னு ஜோசியக்காரன் கிளி கார்டு எடுக்கற மாதிரி எடுக்கறது தான் காமெடி”

க்ரீச்...

இதற்கு மேலும் என்னால் சஸ்பென்ஸ்-ஐப் பொறுக்க முடியாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். விநோதமாக மேக்கப் செய்து கொண்டு ஒரு ரிவால்விங் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவர் என்னை ஓரமாக இருந்த ஒரு சோஃபாவில் உட்காரச் சொன்னார்.

”என்னப் பாத்தா ஏதோ சைக்கோ மாதிரி தெரியுதா?” என்றார்.
நீள முடியும் அதில் ஒரு பாதி ஜெட் கருப்பும் அடுத்த பாதி பஞ்சு வெளுப்புமாக இருந்தது.ப்ரிண்டட் சில்க் சட்டையும் கிழிந்த ஜீன்ஸும் போட்டுக் கொண்டு... அவரைப் பார்த்தால் சைக்கோ மாதிரி அல்ல... ஃப்ரீக் மாதிரி இருந்தது.அடுத்த ஆளைத் தேடினேன். அந்த பன்னிரண்டுக்குப் பன்னிரண்டு அறையில் அந்த ரிவால்விங் சேர் மற்றும் ஒரு ஓரத்தில் கம்ப்யூட்டர் டேபிளும், அடுத்த ஓரத்தில் நான் உட்கார்ந்திருந்த சோஃபாவுமே அதிக நெருக்கடியில் இருந்தது. நான் நுழைந்த கதவைத் தவிர வேறு எந்தக் கதவும் இல்லை. இவர் ’ஃபைட் க்ளப்’ படத்து ஹீரோ மாதிரி தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

”என்ன பாக்கற? ரெண்டு பேரு பேசிட்டிருந்த மாதிரி இருந்துதே என்னாடா ஒருத்தன் தான் குந்திக்கினு இருக்கறானேன்னு பாக்கறியா? நவாவும் நானே ”க்ரீச் என்று சுழலும் நாற்காலியிலிருந்து திரும்பியபடியே சொன்னார். ”தசாவும் நானே...ஹஹ்ஹஹ்ஹஹா” என்றார் இப்போது அடுத்த பக்கம் நாற்காலி சுழன்றது. இதில் இளமையும் முதுமையும் கலந்திருந்தது.

அப்படியே எழுந்து என்னை வாசலுக்கு அழைத்து வந்தார். மேலே நெற்றியில் எழுதியிருந்ததைக் காட்டினார்.

”தாங்க்ஸ்... விசிட் அகெய்ன்” வாசித்தாரா என்னிடம் பேசினாரா என்று தெரியவில்லை.

“திரும்பிப் பாரு... என்ன எழுதியிருக்கு?”

வாசலுக்கு வெளியே வந்து நான் வாசித்தேன் “வெல்கம்”

”நான் தான் நவா நான் தான் தசா. நீ எங்கேயிருந்து பாக்கறே, எப்படிப் பாக்கறேங்கறதுல தான் இருக்குது மேட்டர். ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா” அவர் சிரிக்கவும் ஒரு விபரீதம் நடந்தது. அவர் தன் கையில் இருந்த கடிகாரத்தை அழுத்தவும் “டமார்” என்ற பெரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறினார். ஆனால் பூக்களாகவும் ஜிகினாக்களாகவும் உதிர்ந்தார்.

வெடி, பன்னிரண்டு மணிக்கு ஆலய மணி, வசனம் சொல்லும் ஸ்பீக்கர் எல்லாவும் என்னை எழுப்பிவிட்டன.

உபதேசியார் “திருச்சபையார் அனைவருக்கும் என் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று தங்கப்பித்தான் போட்ட தன் முழுக்கை சட்டையைத் தூக்கி பெரிய கும்பிடு போட்டார்.

என் உதட்டோரட்த்தில் இருந்த இரண்டு சொட்டு ஜொள்த்துளிகளை சர் என்று உரிந்து கொண்டு சட்டையின் கைப்பகுதியால் சட்டென்று துடைத்துக் கொண்டேன்.

No comments: