இந்த வலைப்பூவை, என்னை எழுது எழுது என்று நச்சரித்துக் கொண்டிருக்கும் நண்பன் X அவர்களுக்கும் என்னை எழுத்துலகில் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் கார்த்திகா ராஜ்குமார் மற்றும் ப்ருத்வி அவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.
Sunday, January 2, 2011
அவர் இங்கே இல்லை.
அவர் இங்கே இல்லை. சில ஈஸ்ட்டர்களுக்கு முன்பு என் நண்பனின் குடும்பத்துடன் ஈஸ்ட்டர் ஆராதனைக்கு பெங்களூரில் ஒரு ஆலயத்துக்கு சென்றிருந்தேன். அதிகாலை ஆராதனை ஆலயத்தின் வெளிப்புறத்தில் நடந்தது. ஆலய முகப்பில், ஒரு தூதனும் வெற்றுக் கல்லறையும் போன்ற அலங்காரம் இருந்தது. நண்பனின் அப்பா ஆராதனையின் முடிவில் சொன்னார், “கிறிஸ்மஸ்க்கும் ஈஸ்ட்டருக்கும் சில ஒற்றுமைகள் இருக்குது இல்லியா?” என்று கேட்டுவிட்டு அந்த தேவதூதன் கட் அவுட்டைக் காட்டினார். நானும் வேகமாகத் தலையாட்டிவிட்டு சில ஒற்றுமைகளைப் பட்டியலிட்டேன். அதை ரோட்டுக்கடையில் காஃபி குடித்து, அல்சூர் குளத்தாங்கரையில் அரட்டை அடித்த பின் மறந்தே போய்விட்டேன். பின்பு இப்போது அதை நினைவுபடுத்திவிட்டது புத்துயிர் பத்திரிக்கையின் கலர்ஃபுல்லான அட்டைப்படம்.
”அவர் இங்கே இல்லை”
அருமையான கருத்து. கிறிஸ்மஸ் மரத்தையும் சிலுவை மரத்தையும் இணைத்து யாரோ பேசியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது முற்றிலும் புதிய சிந்தனை.
புத்துயிரில் புது உயிர் வந்திருப்பது என்னைப் போன்றவர்களுக்கு அதிக மகிழ்ச்சி. நான் குட்டிப் பையனாக இருந்த போது குடும்ப ஜெபத்தில் தேவயிரக்கம் அய்யாவின் தின தியானத்தை அதிலுள்ள வேதபகுதியுடன் சேர்த்து வாசித்து ஜெபம் செய்வோம். அந்தக் காலத்து பரிதாபமான அட்டை இப்போது இந்த அளவுக்கு அழகாக மட்டுமல்ல அறிவோடும் வந்திருப்பது புதிய உயிர் தான். அது மட்டுமல்ல புத்துயிர் பத்திரிக்கையின் சில பழைய வாசகர்களுக்கு இது சிறிது சீரணமாகாததாகப் போகலாம் என்றாலும் துணிந்திருக்கிறார்கள். எதிர்ப்புகள் வரலாம் என்றாலும், எதிர்கால சந்ததியை மனதில் கொண்டு இப்படி ரிஸ்க் எடுக்கின்ற புத்துயிருக்கு வாழ்த்துக்கள்.
இதோ கிறிஸ்மஸ் மற்றும் ஈஸ்ட்டருக்கு நடுவிலுள்ள ஏழு ஒற்றுமை வேற்றுமைகள்:
1.தேவதூதர்கள் இரண்டிலுமே இருந்தனர். ஆனால் கிறிஸ்மஸ்-இல் தேவலோகப் பாடல் இருந்தது.
2.இரவல் இடம் - இரவல் தொட்டில் - இரவல் கல்லறை. கல்லறைக்குக் காவல் இருந்தார்கள் ரோம சேவகர்கள்.
3.கடவுளின் மனிதம் இரண்டிலுமே வெளிப்பட்டது. கடவுளின் ஜனனம் மற்றும் மரணம்.
4. இரண்டுமே அற்புதங்கள் தாம் - கன்னிப் பிறப்பு - கல்லறையிலிருந்து உயிர்ப்பு.
5. இரண்டு கொண்டாட்டங்களிலும் நாயகன் மறக்கப் படுகிறார் அல்லது மறைக்கப்படுகிறார்.
6. இரண்டிலுமே செய்தி தெரிவிக்கப்பட்டது சாதாரண மக்கள் மற்றும் செய்தியை ஏற்றுக் கொள்பவர்களிடம் மட்டுமே. மற்றவர்கள் செய்தியை தங்களுக்கு ஏற்றவிதமாக எடுத்துக் கொண்டார்கள். (ஏரோது மற்றும் யூத மதத்தலைவர்கள்)
7. இரண்டினாலுமே பின்னர் அதிகமானவர்கள் தங்கள் உயிர்களை விட வேண்டியிருந்தது. முதல் கிறிஸ்மஸ்-இல் சிறு குழந்தைகள் பல பலியாயின. உயிர்ப்புக்குப் பின், பல விசுவாசிகளும் சீஷர்களும் இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பியதற்காக உயிர் விட்டார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment