Monday, November 15, 2010

மைக் டெஸ்ட்டிங் 2

மைக் டெஸ்ட்டிங் 2************
முதல் நிமிஷத்திலேயே இது சரியில்லை என்று சொல்லிய நண்பரிடம் வாங்கிவந்த பல லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஒரு ‘கிறிஸ்தவ’ திரைப்படத்தை முழுவதுமாகப் பார்த்தேன்.

பல காலமாக சினிமாவில் இயக்குனராக போராடிய ஒருவர் (அதற்கு காரணம் டிவிடியைப் பார்த்தால் புரியும்), கர்த்தரிடம் கண்ணீர் விட்டு அழுது வாய்ப்புக்காக மன்றாடியபோது, தரிசனத்தில் ஒரு தயாரிப்பாளரை வரவழைத்தாராம் ஆண்டவர். படத்தயாரிப்பின் தடைகளை எல்லாம் ஜெபித்து ஜெயித்த குழு, வெளியிட வழியில்லாமல் உபவாசித்து ஜெபித்ததில், வேத வசனத்தின் படி ஒரு குறிப்பிட்ட வினியோகஸ்தரை சந்திக்கச் சொன்னார் கடவுள். ஆண்டவரின் வல்லமையைத் தெரிந்து கொண்ட நாங்கள் இனி அவரைப்பற்றி மட்டுமே படம் எடுப்போம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். என்னைப் போன்ற கிறிஸ்தவர்களுக்கு இது வரமா? தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது சாபமா? என்று குழம்பிப் போய் இருக்கிறேன்.

துப்பாக்கிக்குப் பதிலாக ஆங்கில வேதாகமத்தை அணைத்துக் கொண்டே எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் சுற்றுகிறார் கதாநாயகியான ஊழியக்காரி.

ஆண் ஊழியர் அடித்துத் துரத்தப்பட்ட ஊரில், பெண் ஊழியர், போதகரின் ஜெபத்தில் ஆண்டவர் வெளிப்படுத்தியதின்படி ஊழியம் செய்யப் போகிறார். ஊழியக்காரியைத் தாக்க வந்த அடியாட்களின் கண்களில் திடீர் காற்றில் மண் விழுந்து அவர்கள் கண்கள் அரிப்பு எடுக்கின்றன. ஊழியக்காரி தப்பி ஊருக்குள் போகிறார். ஆங்கில வேதாகமத்தில் இருந்து தமிழ் வசனத்தை வாசித்து ஜெபிப்பார் கதாநாயகி. பின்னர் சாகக் கிடப்பவர்களை ஊழியக்காரி தொட்டதும், ஷாக் அடித்து எழுந்துவிடுவார்கள். கதை, வேதாகம அடிப்படை, நடிப்பு, வசனம், ஒலிப்பதிவு, இசை எல்லாவற்றிலும் கடவுளின் கிருபையை மட்டுமே நம்பியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. கடவுளின் இரக்கத்தை மட்டுமே கிறிஸ்தவ ரசிகர்கள் நம்பித் தான் இனி டிவிடிக்களை வாங்கிப் பார்க்க வேண்டும் போலத் தெரிகின்றது. பல காட்சிகளில் வாயசைக்கிறார்கள் நடிகர்கள், ஆனால் சத்தம் வரவில்லை.

ஒரே பாட்டில் ஊரே மனந்திரும்பத் தயாராகிறது. ஊதா நிறத்து புதிய ஏற்பாட்டை ஊர் மக்களுக்கு ஊழியக்காரி கொடுக்க, எங்களுக்குப் படிக்கவே தெரியாது என்று மக்கள் சொல்ல, எழுத்தறிவு இயக்கம் துவங்கும் என்று நான் யூகித்தேன். ஏமாந்தேன். எதிர்பார்க்காத திருப்பம். இந்த புத்தகத்தக் கையில் ஏந்தி, இயேசுவை நோக்கி மனதுருகி பிரார்த்தனை செய்தா, எல்லா சந்தோஷமும், நிம்மதியும் வீடு தேடி வரும். எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என்கிறார் ஊழியக்காரி. ஊர்மக்கள் புனிதப் புத்தகத்தை கண்களில் ஒற்றிக்கொள்கிறார்கள்.

இனி என்னை அக்கான்னு கூப்பிடக் கூடாது, சிஸ்டர்னு கூப்பிடணும் என்று சிறுவர்களுக்கு ஊழியம் செய்யும் ஊழியக்காரி சொல்கிறார். மக்கள் வில்லனைக் கொல்லக் கொதித்துச் செல்லும் போது அவர்களை அடக்குகிறார் ஊழியக்காரி. கிளைமாக்ஸ் காட்சியில் சிலுவையிலிருந்து வரும் கதிர் (கிராஃபிக்ஸ்) வில்லனின் முகத்தை எரித்துவிட அவர் மனம் திரும்புகிறார். ”இந்த உலகத்தில் யாரும் பாவத்தோடு பிறப்பதில்லை. ஆனால் காலமும் சூழ்நிலையும் தான் அவர்களைப் பாவம் செய்ய வைக்கிறது. வாங்க ஆண்டவர் இயேசுவ ஜெபிக்கப் போகலாம்.” என்றெல்லாம் சொல்லப்படும் அபத்தங்கள் எங்கே கொண்டு விடப் போகிறதோ நமது கிறிஸ்தவத்தை! இறையியல், சினிமா இரண்டும் தெரியாதவர்கள் கிறிஸ்தவ தமிழ் ஊடகத்தில் பிழைத்துக் கொள்ளலாம் என்ற அருமையான உண்மையை உணர்த்தும் இன்னுமொரு சிறந்த முயற்சி.


ஆட்டுக் குட்டிகள், கோழிகள், சில இயற்கை காட்சிகள் நான் கிராமத்தில் வாழ்ந்த நாட்களை நினைவுபடுத்தின. அந்த இரண்டு காட்சிகளைத் தவிர இந்தப் படத்தில் பாராட்டவோ குறிப்பிடவோ எதுவும் இல்லை.

இந்தப் படத்தின் தலைப்பைக் குறிப்பிட்டு கடவுள் பெயரில் பிழைப்பவர்களுக்கு நஷ்ட்டத்தை உண்டாக்க விரும்பவில்லை. அப்படியே யான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என்ற எண்ணமும் இதற்கு இன்னொரு காரணம்.

4 comments:

johnny said...

nice one anna

Unknown said...

LOL!! what a comedy!! ;) I should ask my family people to read your blog! :O

Moses said...

Please send me the movie name, so that I can do my part as you had done yours.
Thanks

Unknown said...

I do not know whether to laugh or cry. Valid comments, valiantly said!