Tuesday, January 6, 2015

மிஸ்ட்டர் சன்டே

“என்னப்பா பண்டிகை எல்லாம் சிறப்பா முடிஞ்சுதா?”

“ஆமா, சிறப்பா முடிஞ்சுது. கையில இருந்த பணமும் சிறப்பா முடிஞ்சு போச்சுது. இப்போ, இயேசு மாட்டுக் கொட்டகையில இருந்த மாதிரி நான் ஆண்டியா இருக்கிறேன்.”

“ஏம்ப்பா, பாத்து செலவு பண்ணக் கூடாதா?”

“என் பொண்டாட்டியும் பிள்ளைங்களும் பாத்ததால தானே இவ்வளவு செலவு. நான் எண்ணி எண்ணி மிச்சம் பண்ணி வச்சேன். அவங்க கடையில பாத்து பாத்து செலவு செஞ்சாங்க.”

“என்னவோ அவங்க மட்டும் தான் செலவு செஞ்ச மாதிரியும், நீ  செலவே செய்யாதது மாதிரியும் பேசற? உன் காருக்கு, கேமராவுக்கு, பைக்குக்கு, எவ்வளோ ஸ்பேர் பார்ட்ஸ் அக்சசரிஸ் எல்லாம் வீட்டுக்குத் தெரியாம வாங்கியிருக்கிறே?”

“ஏழைகளுக்கு சாப்பாடு, புதுத் துணி எல்லாம் வாங்கிக் குடுத்தோம்.”

“அது சரி, வருஷத்துக்கு ஒரு நாள், நீங்க குற்ற உணர்ச்சி இல்லாம சாப்பாடு வெளுத்து கட்டுறதுக்கும், துணி உடுத்தறதுக்கும் ஏத்த மாதிரி ஏழைங்களுக்கு குடுக்கறோம்னு சொல்லிக்கிறீங்க. வருஷத்துல மத்த 364 நாளும் அவங்க சாப்பாட்டுக்கும், துணிக்கும் எங்கே போவாங்க?”

“சும்மா சோம்பேறிகள வளத்து விடச் சொல்றீங்களா?”

“உண்மையிலேயே தேவை உள்ள மக்களுக்கு உதவி செய்யலாமே? இயேசுவே சொல்லியிருக்காரு, நான் பசியாய் இருந்தேன், தாகமாய் இருந்தேன், வஸ்திரம் இல்லாமல் இருந்தேன், வியாதியாய் இருந்தேன், காவலில் இருந்தேன்... இந்த சிறியரில் ஒருவருக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்-னு சொல்லியிருக்கிறாரே?”

“இருக்கறத எல்லாம் குடுக்கச் சொல்லிருவீங்க போல இருக்குதே?”

“இயேசு ரெண்டு சட்டை இருக்கறவன் ஒண்ண மத்தவங்களுக்குக் குடுன்னு சொல்லியிருக்காரு. நான் அப்படியெல்லாம் சொல்லல. வீணாக்காம, ஆடம்பரமா செலவு செய்யாம, சிக்கனமா, மிச்சம் பிடிச்சா, உன்னோட வாழ்க்கையிலேயும் எளிமை இருக்கும், மத்தவங்க வாழ்க்கையில செழுமை இருக்கும்.”

“நீங்க என்ன கம்யூனிஸ்ட் மாதிரி பேசறீங்க?”

“சர்ச் இயேசு எதிர்பார்த்த மாதிரி க்ம்யூனிட்டியா இல்லாமப் போனதால தான் அவங்க சில வேலைகள செய்யறாங்க.”

“வாழ்க்கைய என்ஜாய் பண்ண விடக் கூடாதுன்னே வந்திருக்கீங்க போல.“

“சுயநலமா வீட்டப் பூட்டிக்கிட்டு என்ஜாய் பண்ணாம, திறந்து வச்சு, பகிர்ந்து குடுத்து என்ஜாய் பண்ணுன்னு தான் சொல்றேன்.”

“தேவை உள்ளவங்க உலகத்துல எப்பவுமே இருந்துக்கிட்டு தான் இருப்பாங்கன்னு இயேசுவே சொல்லியிருக்காரு.”

“அதே தேவை உள்ளவங்களுக்குக் குடுக்கறதுக்காகத் தான் உனக்கு ஆசீர்வாதங்களையும் ஆண்டவர் குடுத்திருக்காரு. இரண்டு சட்டை உள்ளவன் ஒண்ண மத்தவங்களுக்குக் குடுன்னு அதே இயேசு தானே சொல்லியிருக்காரு.”

“சரி ஐய்யா, முடிவா என்ன சொல்றீங்க? சொத்து எல்லாத்தையும் வித்துக் குடுத்துட்டு, தலை சாய்க்க இடம் இல்லாத வாழ்க்கை வாழச் சொல்றீங்களா?”

“சொத்து எவ்வளவு இருந்தாலும் ஆறடி நிலம் தான் கடைசியில தலை சாய்க்கிறதுக்கு கிடைக்கப் போவுது. இருக்கறப்போ அத செலவு செஞ்சா, பரலோகத்துல ஒரு ப்ளாட்டு கிடைக்கும், தியாகமா செலவு செஞ்சா அங்கே ஒரு மாளிகையும் உன் பேருல உருவாகும். நீயே முடிவு செஞ்சுக்கோ.”

“நல்ல ஐடியா தான். தங்கத்துலயும், நிலத்துலேயும் முதலீடு பண்ணுனா, நாளாக நாளாக மதிப்பு கூடிட்டே போகும்னு சொல்வாங்க.”

“ஆமா நான் சொல்றது தான் “ரியல்” எஸ்ட்டேட். அது மட்டும் இல்ல, அங்க தெரு கூட தங்கத்துல இருக்குதாம்.”

No comments: