Wednesday, December 24, 2014



டங்காமாரி    கிறிஸ்மஸ்
இது ஊஞ்சல் டிவிக்காக 2014 கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ஆகத் தயாரிக்கப்பட்டு, வெளிவராமல் போன ஒரு சிற(ரி)ப்பு திரைப்படம் பற்றிய எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட். இதில் உயிருடன் இருக்கும் அல்லது இறந்து போன யாரைப் பற்றியும், எந்த நிகழ்ச்சியைப் பற்றியும் குறிப்பிடப்படவில்லை. அப்படி ஏதாவது தொடர்பு தெரிந்தால் நீங்களும், யார் தொடர்பு படுத்தப்படுகிறார்களோ அவர்களும் தான் பொறுப்பு.
ஊஞ்சல் டிவியின் உரிமையாளர்  "சகோதரன். ஆல் இன் ஆன் அழகு ராஜ்” அவர்கள், தானே இருபத்தைந்து வேடங்களில் கிறிஸ்மஸ் திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து தயாரிக்க விரும்பினார். ஊஞ்சல் டிவியின் ஊழியர்களான ஆமாஞ்சாமி, ஜால்ரா போன்றோரின் அருமையான ஒத்துழைப்பால் இந்த நிகழ்ச்சியை, எல்லீஸ் டங்கன் அவர்களின் வளர்ப்பு மகன் இயக்குனர் டங்கர் இடம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. டங்கர் அதிக பணம் கொடுத்தால் தன் பெயர் வராமல்  “சகோதரன் ஆல் இன் ஆல் அழகுராஜா” பெயரையே இயக்குனர் என்று போட்டுக்கொள்ள அனுமதித்துவிட்டார். ஆனால் மெகா பட்ஜட் வேண்டும் என்றும், நிகழ்ச்சியை ஒளிபரப்பும் நாளில் தான் யாரும் பார்க்க முடியும் என்றும் நடுவில் ஒரு காட்சியைக் கூட யாரும் பார்க்க முடியாது என்றும்  சொல்லிவிட்டார்.


சில முக்கிய அம்சங்கள் :
இந்தப் படத்தில் “சகோதரன் ஆல் இன் ஆல் அழகுராஜ்” அவர்களுக்கு பல வேடங்களை போட்டு விடுவதற்காக ஹாலிவுட் இல் இருந்து, பேபிஸ் டே அவுட் மற்றும் ஹோம் அலோன் மற்றும் ஜூராசிக் பார்க் ஆகிய படங்களில் பணியாற்றிய மேக்கப் மற்றும் கம்ப்யூட்டர் அனிமேஷன் கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் வந்திருந்தார்கள். குறிப்பாக அழகுராஜ் அவர்கள் இயேசு பாப்பாவாக நடித்த காட்சிகளுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொடுக்க வந்த கலைஞர்களுக்கு மட்டும் ஒரு விமானம் தேவைப்பட்டது.
கதை விவாதத்தில் சகோதரன் ஆல் இன் ஆல் அழகு ராஜ் அவர்கள் பயன்படுத்திய டிஜிட்டல் வேதாகமம் வெர்ஷன் 6.66, அவர் பரலோகத்துக்குப் போயிருந்தபோது தகவல் தொடர்புக்கான தூதன் காபிரியேல் மூலமாக கடவுள் அவருக்கு நேரடியாகக் கொடுத்தது. அத்துடன் 4கே ரெசல்யூஷனில் 3 டியில் இந்தப் படம் எடுக்க ஒரு கேமராவும், அதை உலகங்கள் முழுவதற்கும்  ஒளிபரப்ப ஒரு சாட்டிலைட்டையும் இயேசு பாப்பா அவர் கையில் கொடுத்து அதை சாண்டா க்ளாசின் ரெய்ண்டீர்கள் இழுத்துவரும் ஸ்லெட்ஜ் வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டாராம்.


டங்கருக்கும்  சகோதரன் ஆல் இன் ஆல் அழகுராஜ்-க்கும் ஏற்பட்ட தகராறுகளில் முக்கியமானவைகள் :
1. டங்கர் கதையை வாசித்துவிட்டு கிறிஸ்மஸ் தாத்தா, ஏரோது ராஜா (மோடி) மற்றும் மேய்ப்பரில் ஒருவர் போன்ற பாத்திரங்களை மட்டுமே சகோதரர் ஆல் இன் ஆல் அழகு ராஜாவுக்குக் கொடுக்க முடியும் என்று சொல்லியதாகவும், மீண்டும் பரலோகம் போய் பிதாவாகிய தேவனிடம் ரெக்கமண்டேஷன் லெட்டரும், பல லட்சங்களும் கொடுத்த பின்பே டங்கர் சமாதானம் ஆனதாகவும் செய்தி கசிந்திருக்கிறது.
2. டங்கரைக் கழற்றிவிட முயற்சிகள் நடந்தாலும், உலகத் தரத்தில் படம் வர வேண்டும் என்பதால் பரலோகத்திலிருந்தே அதிக ப்ரஷ்ஷர் வந்ததால் தான் சகோதரர் ஒப்புக் கொண்டதாகவும் ஊரெல்லாம் பேசிக் கொள்கிறார்கள்.
3. இயக்குனர் வேலையையும் சகோதரரே செய்துவிடும்படி ஆமாஞ்சாமி மற்றும் ஜால்ரா ஆகியோர் தீவிரமாகச் சொல்லியும், தமிழக கிறிஸ்தவத்தை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருக்கும்   இரு முக்கிய ஊழியர்களின் தீர்க்கதரிசனம்  “2015 இல் தான் சகோதரன் ஆல் இன் ஆல் அழகு ராஜ் நேரடியாகவே ஆஸ்கார் திரைப்படத்தை தயாரித்து இயக்கப் போவதாகவும், இந்தப் படத்தில் அவர் ஏற்கும் 25 வேடங்களால் பிசியாக இருக்கும் அவர், எத்திரோவின் ஆவியால் எச்சரிக்கப்பட்டு இயக்குனர் பொறுப்பை மட்டும் டங்கருக்குக் கொடுக்க”வும் ஆலோசனை கொடுக்கப்பட்டது.  உடனடியாக சகோதரர் ஏற்றுக் கொண்டார்.




4. படத்தின் பெரும் பகுதி கிங்க்ஸ் பேலஸ் என்ற ஹோட்டலிலேயே எடுக்கப்பட்டது. கிங்க்ஸ் பேலஸ் உரிமையாளர் ஊஞ்சல் டிவி மற்றும் சகோதரன் ஆல் இன் ஆல் அழகுராஜ் அவர்களது பரம பக்தனாகவும், முதன்மையான நன்கொடையாளருமாவார். இதற்காகவே கதை பெருமளவில் மாற்றி அமைக்கப்பட்டது.
5. மரியாளாகவும், காபிரியேல் தூதனாகவும் சகோதரர் ஆல் இன் ஆல் அழகுராஜா வேடம் போட்டத்தைப் பற்றி மட்டுமே மேக்கிங் ஆஃப் டங்காமாரி கிறிஸ்மஸ் என்று மூன்று மாதங்கள் தினசரி மதியம் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப் போகிறார்கள். தனது 25 வேட அனுபவத்தைப் பற்றி 25 மாதங்கள் தினம் ஒருமணி நேரம் ப்ரைம் டைமில் சகோதரர் விளக்கமாகப் பேசவிருக்கிறார்.


இனி கதைச் சுருக்கம் :
நட்சத்திரம் தொங்கும் வீடுகளுக்கு மட்டும் செல்லும் பிரபல ஊழியர்கள் அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கிறிஸ்மஸ் தாத்தாவுடன் வருகிறார்கள். காணிக்கையை வாங்க ஒரு ஜூனியர் கிறிஸ்மஸ் தாத்தாவும் வருகிறார். அவர் கையில் க்ரெடிட், டெபிட் கார்டுகளை ஸ்வைப் பண்ண ஒரு மெஷினும் அதனுடன் இணைக்கப்பட்ட லேப்டாப் மற்றும் வைஃபை அமைப்புகளும் வருகின்றன.

சத்திரத்திலும், மாட்டுக் கொட்டகையிலும் இடம் இல்லாததால், கிங்ஸ் பேலஸ்க்குள் யோசேப்பு மற்றும் மரியாள் ஆகியோர் புறவாசல் வழியே வாட்ச் மேனுக்கும் மானேஜருக்கும் லஞ்சம் கொடுத்து நுழைகிறார்கள். சாதா அறை இல்லாததால் ஏசி அறையே அவர்களுக்குக் கிடைக்கிறது.
பல ஊழியர்கள் கேரல் ரவுண்ட்ஸ் வந்து இயேசு பாப்பாவை சந்தித்து ஆராதனை நடத்துகிறார்கள்.
இயேசு பாப்பாவுக்காக யோசேப்பு தனது டெபிட் கார்டை தேய்க்கிறார். மரியாள் தன் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை காணிக்கயாக ஊழியர் கையில் கொடுக்கிறார்.



இந்த நேரத்தில் ஹோட்டலின் முன் பகுதியில் கட்டப்பட்டிருந்த ஸ்டார் ஒன்றின் பல்பு படீர் என்று உடைந்து அந்த ஸ்டார் ஒளியிழக்கிறது. அப்போது  “ஒளியிழந்த நட்சத்திரமே” என்ற ஒரு பாடல் காட்சி வருகிறது.
மூன்று பேர் தங்கள் பேக் பேக்குகளில் இயேசு பாப்பாவுக்கு பரிசு கொண்டு வருகிறார்கள். அவர்கள் கடைகளிலும் வீடுகளிலும் ஆலயங்களிலும் தொங்கிக் கொண்டிருக்கும் ஸ்டார்களை ஒவ்வொன்றாகப் பார்த்து,  “இது இல்லை” என்று சோகமாக சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.
திடீரென்று ஹோட்டலின் நட்சத்திரம் ஒன்று ஒளியிழக்கவும், “ஆஹா இது தான்” என்று சொல்லி உடனடியாக உள்ளே நுழைந்து “தமிழருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு இங்கே வந்திருக்கிறோம்” என்கிறார்கள்.
அவர்கள் உள்ளே நுழையும் போது சாண்டா க்ளாஸ் மற்றும் சாண்டி க்ளாசி ஆகிய இருவர் பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கிறிஸ்மஸ் தாத்தா, அடுத்தவர் கிறிஸ்மஸ் பாட்டி. பெண்கள் உரிமைக் கழகத்திலிருந்து வந்திருக்கும் கிறிஸ்மஸ் பாட்டி தனக்கும் உரிமை இருக்கிறது என்று போராடுகிறார்.
அத்துடன் இயேசு பாப்பாவும் ஆணாக இல்லாமல் பெண்ணாக இருக்கும்படியாக ஒரு வேண்டுகோள் வைக்கப்படுகிறது. காபிரியேல் தூதன் உடனடியாக அதை எடுத்துக் கொண்டு பரலோகத்துக்குப் போகிறார்.
போகும் வழியில் கூட்டம் கூட்டமாக கூடாரங்களில் தங்கியிருக்கும் கட்டிடத் தொழிலாளிகளுக்கு காபிரியேல் மற்றும் குழுவினர், “ஜீசஸ் பிறந்தாரே” என்ற ஒரு பாடல் பாடும் காட்சி பிரம்மாண்டமாக, பொள்ளாச்சி அருகே எடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து, ஏரோது ராஜாவாக மோடி இருக்கிறார். கிறிஸ்மஸ் நாளில் மதமாற்றம் செய்வதாக அவர் சொன்னதாலும், கிறிஸ்மஸ் அன்று விடுமுறை இல்லை என்று அறிவித்ததாலும் தான் இந்தக் காட்சி சேர்க்கப்பட்டது.
ஆகவே, யோசேப்பும் மரியாளும் அமெரிக்காவுக்கு தப்பிச் செல்கிறார்கள். ஏரோதுக்கு பதிலடியாக பொங்கல் மற்றும் தீபாவளி நாட்களில் வெர்ச்சுவல் பாப்டிசம் என்ற முறையில் இந்தியர்கள் அனைவருக்கும் சாட்டிலைட் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு, இந்தியர்கள் முழுவதும் ஞானஸ்நானம் பெறுவது போல ஒரு க்ராஃபிக்ஸ் காட்சியை ஊஞ்சல் டிவியில் காட்டுவதாக ஒரு காட்சி வருகிறது. 



ஹோட்டல் கிங்ஸ் பேலசில் 666 ஆவது அறையிலிருந்து டெர்மினேட்டர் ஆக பிசாசு வருகிறான். இந்த வேடத்தில் மட்டும் சகோதரர் நடிக்காமல் டூப் போட்டிருக்கிறார்.  இது சகோதரர் அல்ல என்று சப் டைட்டில் காட்டப்படுகிறது.
டெர்மினேட்டரை எதிர்த்து சகோதரன் ஆல் இன் ஆல் அழகுரான் அவர்கள் மோதும் காட்சிகள் மோஷன் கேப்ச்சர் முறையில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நடிகள் மாக்கி ச்சான் அவர்கள் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பெரிய தங்க ஊஞ்சல் வானத்திலிருந்து இறங்கி வருகிறது. அதில் சகோதரர் ஆல் இன் ஆல் அழகுராஜ் அமர்ந்து பஞ்ச் டயலாக் பேசுகிறார், “கர்த்தர் தமக்குப் பிரியமானவர்களுக்கு நித்திரையைக் கொடுக்கிறார். கிறிஸ்தவ மக்களும் மற்றவர்கள் கர்த்தருக்குப் பிரியமானவர்களாக, தூங்க வைப்பதற்காகவே இந்த ஊஞ்சல் ஊழியத்தைக் கர்த்தர் எனக்குக் கொடுத்திருக்கிறார். இலவச தொலைக்காட்சிகள் தமிழகத்துக்குக் கிடைத்திருப்பது இரட்டையான ஆசீர்வாதம். இந்த ஊஞ்சலாட்டும் ஊழியத்தை உலகத் தரத்தில் சிறப்பாக நடத்த உங்கள் காணிக்கைகளை தாராளமாகக் கொடுங்கள். இந்த வருடம் கிறிஸ்மஸ் பண்டிகையை உங்கள் ஒவ்வொருவருக்காகவும் என்னை மட்டுமே கொண்டாடச் சொல்லியிருக்கிறார் ஆண்டவர். ஆகவே நான் பட்டாசு, பலகாரம், புதுத் துணி, என்று கொண்டாடுவதைப் பார்த்து பரவசமடையுங்கள். நீங்கள் கொண்டாட எவ்வளவு செலவு ஆகுமோ அதை அப்படியே எங்கள் ஊஞ்சல் டிவிக்கு அனுப்பி வையுங்கள்.”
இறுதியில் டங்கருக்கும் சகோதரர் ஆல் இன் ஆல் அழகுராஜ்-க்கும் ஏற்பட்ட பிரச்சனையால் ஹார்ட் டிஸ்க்-இல் இருந்த படத்தில் அனைத்து காட்சிகளையும் அழித்துவிட்டு டங்கரின் உதவியாளர் போய் விடவே. (ஷூட்டிங் நடக்கும் போது ஹோட்டலுக்கு வெளியே இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன)

இந்த திரைப்படம் இந்த ஆண்டு வெளிவராது. அடுத்த ஆண்டு ஆல் இன் ஆல் அழகுராஜ்  இயக்கத்தில், ஸ்டீஃபன் ஸ்பீல்பர்க் மற்றும் ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் உதவி இயக்குனர்களாக இருந்து எடுக்கவிருக்கும் திரைப்படத்திற்காக இப்போது காணிக்கை சேகரிக்கப்படுகின்றது. ஊஞ்சல் டிவி யில் விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

No comments: