Tuesday, April 22, 2014

மிஸ்ட்டர் சன்டே



”பஞ்சப் பாட்டு பாடறதுக்குப் பதிலா, ஆவிக்குரிய சபைகள்ல செய்யற மாதிரி நம்ம சர்ச்லயும் பத்துல ஒண்ணு தசமபாகம் குடுத்தாத் தான் பரலோகத்துக்குப் போக முடியும், இல்லாட்டி சாபம் தான் அப்படின்னு சொன்னாப் போதுமே எல்லாரும் கணக்கா குடுத்துருவாங்க.  காணிக்கைக்காக ஞாபகப்படுத்தக் கூட வேண்டாம். ஒவ்வொரு வாரமும் பிரசங்கத்த முடிக்கறப்போ இந்தப் பாயிண்ட தொட்டு முடிச்சா வேலை ஈசியா முடிஞ்சிரும்.”

“ஏன் இப்போ திடீர்னு இப்படி பேசற?”

“ஆமா ஒரு பக்கம் காணிக்கை குடுங்க, குடுங்கன்னு கதறிட்டு இருக்காங்க; ஆனா மக்கள் கண்டுக்காம போறாங்க.  இன்னொரு பக்கம், நேரடியாக் கேக்காம, விவரமாக் கேக்கிறாங்க மக்களும் காணிக்கையாக் கொட்டிக்கிட்டு இருக்கறாங்க.”

“மிரட்டியோ, ஆசை காட்டியோ காணிக்கை வாங்க வேண்டிய அவசியம் கர்த்தருக்கு இல்ல.”

“ஆனா கர்த்தரோட ஊழியக்காரங்களுக்கு இருக்கும் போலத் தெரியுது”

“எப்பவெல்லாம் மனுஷன் ஆசையோட, ஆர்வமா தன்னோட பணத்த மத்தவங்களுக்குக் குடுப்பான்?”

“மதிப்பு அதிகமான ஒரு பொருள் விலை குறைவா கிடைக்கறப்போ, அந்தப் பொருள் அவனுக்கு / அவளுக்கு ரொம்பத் தேவையா இருக்கறப்போ”

“சர்ச்ல இருந்து உனக்குக் கிடைக்கறது மதிப்புள்ளதுன்னு நீ நினைக்கிறியா?”

“வாரம் ரெண்டு மணி நேரம் ஒரு பெரிய கட்டிடத்துல இருக்கறதுக்கு, வாடகை, கரண்ட் சார்ஜ், ஊழியர்களுக்கு சம்பளம் - அதுல என்னோட பங்கு இப்படின்னு கணக்கு ஸ்ட்ரிக்டா போட்டுப் பாத்தா எவ்வளவு வருதோ அதைத் தான் வாரா வாரம் காணிக்கை போடுறேன்.”

“அட கஞ்சப்பயலே, கடவுள் உன்ன மாதிரி கணக்குப் பாத்தாருன்னா நீ மூச்சு விடறதுக்கு காத்து கூட கிடைக்காது உனக்கு.”

“டென்ஷன் ஆவாதீங்க. பிறப்பு, இறப்பு, வேலை வாய்ப்பு, கல்யாணம் முடிப்பு அப்படின்னு சில விஷயங்கள் இருக்குதே, அதுக்காகவாவது காணிக்கையக் குடுத்துட்டு சர்ச்ல மெம்பரா இருக்க வேண்டியதா இருக்குது.”

“இதைவிட சர்ச்ல இருந்து வேற ஒண்ணுமே உனக்குக் கிடைக்கிறதா தெரியலியா? அப்படிக் கிடைக்கிற எல்லாத்துக்கும் மதிப்பு இருக்கற மாதிரி தெரியலியா?”

”உண்மையச் சொல்லப்போனா எனக்கு எதுவுமே கிடைக்கற மாதிரி தெரியல. அல்லது தப்புக்கள் மட்டும் தான் என் கண்ணுல படுவுதோ என்னவோ.”

”ஐக்கியம், தேவனுடைய வார்த்தை, ஜெபம் இதுக்கெல்லாம் கோடிக் கோடியாக் குடுத்தாலும் போதாது. அதெல்லாம் ஆண்டவரோட தனிப்பட்ட வகையில உறவு இல்லாதவங்களுக்குத் தெரியாது. புரியாது”

“இதெல்லாம் சர்ச்ல கிடைக்குதுங்கறீங்க?”

“எல்லாமே அவரவர் கண்ணோட்டத்தப் பொறுத்தது. தம்ளர்ல தண்ணி பாதி இருந்தா, பாதி காலியா இருக்குதுன்னு ஒரு கூட்டம் சொல்லும். பாதியாவது நிறைஞ்சு இருக்குதேன்னு இன்னொரு கூட்டம் சொல்லும்.”

“அது சரி தான். நானே எனக்கு வேண்டிய ஆன்மீக ஆசீர்வாதங்கள எடுத்துக்கணும்னா நான் எதுக்கு சர்ச்க்கு வரணும்? இருக்கற இடத்துல இருந்தே ஜெபம் பண்ணி வேதம் வாசிச்சுக்கலாமே?”

“நீ ஒண்ணும் சர்ச்ல இருக்கற மத்தவங்களவிட பெரிய பரிசுத்தவான் இல்ல அப்படிங்கற உண்மையப் புரிஞ்சுக்கறதுக்காகவாவது நீ சர்ச்க்கு ஒழுங்கா வரணும்.”

“இது கொஞ்சம் ஓவரான மேட்டரா இருக்குது. சரி அப்புறம் சொல்லுங்க.”

“என்ன இருந்தாலும் ஒரு ஆராதனை முழுசும் எத்தனையோ வேத வசனங்கள நீ கேக்க முடியும், பாட்டு, சுருக்க ஜெபம், ஸ்தோத்திர ஜெபம், பிரசங்கம், ஆசீர்வாதம் இப்படின்னும் பல வசனங்களக் கேக்கறப்போ உன்ன மாதிரி யோக்கியங்களுக்கு அந்த வசனங்கள்ல இருந்தாவது ஏதாவது இன்ஸ்பிரேஷன் கிடைக்கலாம் இல்லியா?”

”ஐயா பெரியவரே, நான் ஒழுங்கா காணிக்கை போட்டுர்றேன். ஆள விடுங்க.”

“வாதத்துல தோத்துட்டோம்னு இப்படி உளறாம நல்லா யோசிச்சுப் பாரு.”

“சரி என்னோட பதில் அடுத்த வாரம் நான் போடுற காணிக்கையோட அளவுல தெரியும்.”

“அதவிட அத என்ன மனசோட போடற அப்படிங்கறதுல தான் தெரியணும்.”

No comments: