Thursday, January 23, 2014

மிஸ்ட்டர் சன்டே



”காலம் போற போக்கப் பாத்தா, காதலர் தினம் கொண்டாடுற மாதிரி கள்ளக்காதலர் தினமும் கொண்டாடுவாங்க போல இருக்கு.”

“என்னப்பா, அதிகமா நியூஸ் பேப்பர் வாசிக்க ஆரம்பிச்சுட்டியா அல்லது சீரியல் பாக்கத் துவங்கிட்டியா?”

“ஆமா, மக்கள் மத்தியில நடக்கறது தானே பத்திரிக்கை பத்தியில வருது? சீரியல் தீமா மாறுது?”

“கள்ளக் காதலுக்குக் காரணம் என்னன்னு சொல்லு பாக்கலாம்.”

“மீடியாவா?”

“கிறிஸ்தவங்களும் ஒரு காரணம்.”

“என்னங்க மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறீங்க?”

“நல்லக் காதலப் பத்தி நாம நல்லபடியா சொல்லிக் குடுக்கல, அதனாலத் தான் கள்ளக் காதல் கிறிஸ்தவங்க கிட்ட கூட சாதாரணமா வளர்ந்து கோபுரமா நிக்குது”

“ஆதலினால் காதல் செய்வீர்-னு உன்னதப்பாட்டுல இருந்து ஞாயித்துக் கிழமை எல்லாம் பிரசங்கம் செய்யச் சொல்லலாம், யூத் கூட்டமாவது அதிகமா வரும்.”

“திருச்சபை சரியா சொல்லிக் குடுக்காத எல்லாத்தையும் மக்கள் தப்பான இடத்துல கத்துக்குவாங்க. தப்ப நல்லா செய்வாங்க.”

“எனக்கும் டீன் ஏஜ் பசங்க இருக்காங்க. என்ன செய்யலாம்னு சொல்லுங்களேன்.”

“முதலாவதா நீயும் உன் மனைவியும் நல்ல நண்பர்களா இருக்கறத உம் பிள்ளைங்க பாக்கணும்.”

“அடடா கிழட்டுக் காலத்துல, தோளுக்கு மேல பிள்ளைங்கள வச்சுக்கிட்டு ரொமான்ஸ் பண்ணச் சொல்றீங்களே.”

“மரணம் நம்மைப் பிரிக்கும் வரைக்கும்-னு தானே கல்யாணத்துல சத்தியம் பண்ணுன நீ? வாழ் நாள் முழுசுக்கும் நட்பு தான் திருமணம்னு பிள்ளைங்களுக்குப் புரிய வைக்க வேண்டியது உன் கடமை.”

“இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு நாம சொல்லிக் குடுக்கணுமா என்ன?”

“இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு உலகம் கத்துக் குடுக்கற பாடம் : பசங்களும் பொண்ணுங்களும் மரத்த சுத்தி டூயட் பாடணும், சிக்ஸ் பேக், சீரோ சைஸ்-ல மாடல்கள் மாதிரி, சினிமாக் காரங்க மாதிரி இருக்கணும், கவர்ச்சி தான் காதலுக்கு தேவை அப்படிங்கறது தான்.”

”நானும் கல்யாணத்துக்கு முன்னால நினைச்சது எதுவுமே இப்போ நடக்கல. அந்தக் காலத்துல என் பொஞ்சாதி கூட அழகா இருந்த மாதிரி தான் இருந்தது.”

“கற்பனை உலகத்துக்கும் நிஜ உலகத்துக்கும் வித்தியாசம் தெரியாமத் தான் இப்படி ஏமாந்து போறாங்க பிள்ளைங்க. வயசானா எல்லாமே மாறும்னு அவங்களுக்குத் தெரியல.”

“வயசானப்புறம் இளமையான துணை இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. அப்படித் தானே கள்ளக் காதல் உருவாகுது?”

“நீ சொன்னதுல கொஞ்சம் உண்மை இருக்குது. ஆனா, வாழ்க்கைன்னா நன்மை, தீமை எல்லாமே கலந்து வரும் அப்படின்னு சொல்லிக் குடுக்கணும் பிள்ளைங்களுக்கு.”

“திருச்சபைல நம்மப் பிள்ளைங்களுக்கு சொல்லிக் குடுக்கறது எப்படி மத்தவங்க கிட்ட மாத்தம் கொண்டுவரும்னு சொல்றீங்க?”

“தப்பா சொல்லிக் குடுக்கற உலகத்தோட பாடங்கள, நம்ம பிள்ளைங்க சரியான பாடத்தால, அதாவது அவங்களோட முன்மாதிரியான வாழ்க்கையால திருத்த முடியும்.”

“ஒரு தம்ளர் தண்ணிய வச்சு, சாக்கடைய சுத்தம் பண்ணலாம்னு சொல்றீங்க?”

“சிறு துளிகள் தானே வெள்ளமா மாறும்? கொஞ்சூண்டு உரை மோர் தானே அடுத்த நாள் பால் முழுசையும் தயிராக்குது?”

“எனக்கு என்னவோ இதெல்லாம் நடைமுறைக்கு வருமான்னு தோணல.”

“ஒரு காலத்துல நற்செய்திக் கூட்டங்கள் நடந்த ஊர்கள்ல சாராயக் கடைகளும், க்ளப்-களும் மூடினதா சரித்திரம் இருக்குதே?”

“சரித்திரம் திரும்பணும். நம்ம ஆன்மீக தரித்திரம் மாறணும். நீங்க சொல்றது சரிதான். நான் இதுக்காக ஜெபம் பண்ணணும்.”

“உனக்கு டீன் ஏஜ் பிள்ளைங்க இருக்கறதுனால, சுயநலமான ஜெபமாவது பண்ணித்தான் ஆகணும்.”

“அப்படியே என்னை நேசிக்கிற மாதிரி பிறரையும் நேசிக்க வேண்டியது தான்.”

No comments: