Tuesday, August 20, 2013

மிஸ்ட்டர் சன்டே




“வரவர சர்ச்சுக்கு வரவே பிடிக்கல. எப்பப் பாரு, காணிக்கை காணிக்கைன்னு படுத்துறாங்க. கவர் காணிக்கை, பை காணிக்கை, ஸ்தோத்திர காணிக்கை, பண்டிகைக் காணிக்கைன்னு அடுக்கிக்கிட்டே போறாங்க. ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் தான் வரணும் தட்டிக் கேக்கறதுக்கு”

“வீட்டு வரி, தண்ணி வரி, சொத்து வரி, ரோட்டுக்கு வரி, சாமான் வாங்குனா வரி, நேரடி வரி, மறைமுகவரின்னு சத்தம் இல்லாம குடுக்கிறியே, குடுக்கலன்னா தண்ணியக் கட் பண்ணிருவாங்க, கரண்ட கட் பண்ணிருவாங்க. ஆனா இங்க சர்ச்ல அமைதியாக் கேட்டா, நோட்டீஸ் போர்ட்ல போட்டா திரும்பிப் பாக்க மாட்டீங்க. கடவுள் என்ன மிரட்டியா காணிக்கை கேக்குறார்? அவனவன் கட்டாயமாயும் அல்ல, விசனமாயும் அல்ல, மகிழ்ச்சியாக் குடுன்னு தான் வேதம் சொல்லுது.”

“வேதம் அப்படிச் சொல்லுது; ஆனா நம்ம சர்ச்ல அப்படிச் சொல்லலியே? எப்பப்பாத்தாலும் பஞ்சப்பாட்டு தானே பாடுறாங்க?”

“காணிக்கை குடுக்கலன்னா சாமி கண்ண நோண்டிடும், ரத்தம் கக்கிச் செத்துருவேன்னு சொல்லணுமா? அல்லது காணிக்கை குடுத்தா கடனெல்லாம் தீந்துரும், கூரையப் பிச்சுக்கிட்டு சாமி குடுக்குதுன்னு சொல்லணுமா? உங்கள எல்லாம் பயப்படுத்தணும் அல்லது, ஆசை காட்டணும், சின்னப் பிள்ளைங்க மாதிரி. எப்பத் தான் வளருவீங்களோ?”

“நாங்க என்ன குடுக்காமலா இருக்கோம். வாரா வாரம் காணிக்கை, அப்புறம் வருஷத்துக்கு ஒரு தடவ சங்கக் காணிக்கை, லெந்து காலத்துல சுயவெறுப்பு காணிக்கை அப்படின்னு குடுக்குறோம்.”

“இந்த சர்ச் உன்னோட சர்ச் அப்படிங்கற உரிமை உனக்கு இல்லன்னு நினைக்கிறேன். உன் சொந்த வீட்டுக்கு செலவு செய்யறதுக்கு யோசிப்பியா?”

“நம்மள யாரு இந்த சர்ச்-ல மதிக்கிறாங்க. மதிப்பு எல்லாம் ஓட்டுப் போடற வரைக்கும் தான்.”

“உனக்கும் அந்த மதிப்பு வேணும்னு தானே சங்கக் காணிக்கைய வருஷத்துக்கு ஒரு தடவ குடுக்குற? அதக் குடுக்கலன்னா, ஓட்டு கிடையாதுன்னு இருக்கறதுனால தானே அத மறுபேச்சு இல்லாமக் குடுக்குற?”

“ஆமா நம்ம உரிமைய விட்டுக்குடுக்கக் கூடாது இல்லியா?”

“உரிமைக்கு இருக்கற ஆர்வம், பொறுப்புக்கும் இருக்கணும். இதே சர்ச்சுல உனக்கு உரிமை இருந்ததுன்னா அதுல இருக்கற செலவுகளுக்கும் நீ தானே பொறுப்பு?”

“பொறுப்பு எனக்கு இருக்குது, எனக்கு சம்பளம் குடுக்கறவங்களுக்கு இல்லியே? சம்பளத்த கூட்டித் தர மாட்டேங்கறாங்களே?”

“இருக்கற வருமானத்துல பொறுப்பா செலவு செஞ்சா, நல்லாவே வாழலாம். கடவுளுக்கு குடுக்கறதுல ஒழுங்கா இருந்தா, மத்த செலவுகளிலேயும் உனக்கு பொறுப்பு வரும்.”

“அது எப்படி?”

“சம்பளம் வந்ததும் முதல் முதலா காணிக்கைக்கு தனியா எடுத்து வச்சுட்டு, மிச்சத்தத்தான் செலவு செய்யணும்னு கணக்கு பண்ணினா, எதுவெல்லாம் முக்கியமான செலவு, எதெல்லாம் தேவையில்லாததுன்னு தெரிஞ்சுடும். கடவுள் யாருக்கும் கடன் காரர் இல்ல. அவர் கண்டிப்பா உனக்கு திரும்பத் தருவார். காணிக்கை சர்ச்க்கோ, அதுல இருக்கறவங்களுக்கோ இல்ல, கடவுளுக்குன்னு நினைச்சுட்டுக் குடு, அதிகம் குழப்பம் இருக்காது.”

“வட்டி, போனஸ் எல்லாம் தருவாரா? நாம் பத்து பெர்சண்ட் நம்ம வருமானத்துல குடுத்தா, அவர் நமக்கு எத்தன பெர்செண்ட் திரும்பத் தருவார்.”

“முதல்ல நீ சம்பாதிக்கறதுக்கு உடல், உயிர், சுகம், திறமை, வேலை வாய்ப்பு எல்லாத்தையும் குடுத்ததே அவர் தான். உம் கரத்தில் வாங்கி உமக்கே திருப்பிக் கொடுக்கிறோம்-னு ஜெபத்துல சொல்றோமே அது உண்மை. எல்லாம் அவருடையது, அவர் நமக்கு குடுக்கறதுல ஒரு சின்ன பகுதிய அவருக்கு நன்றியோட குடுக்குறோம். நன்றி கெட்ட ஜென்மமா இருந்தா அவருக்கு நஷ்ட்டம் இல்ல, உனக்குத் தான் நஷ்ட்டம்.”

”பாட்டால மட்டுமில்ல பர்ஸ்-சாலயும் நன்றி சொல்லணும்ங்கறீங்க!”

“பஞ்ச் டயலாக் மட்டுமில்ல, செஞ்சு காமிக்கிற வாழ்க்கையும் வேணும்ங்கறேன்.”

2 comments:

Pethuru Devadason said...

காணிக்கை கொடுக்கும் விஷயத்தில் மட்டும் நமக்கு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. காரணங்களுக்கு அடுத்தவரை குறைசொல்லுவதைவிட நம்மை நாமே ஆய்ந்து பார்ப்பது தான் நல்லது.

Haris Prem said...

தூள் கிளப்பிட்டீங்க