இந்த வலைப்பூவை, என்னை எழுது எழுது என்று நச்சரித்துக் கொண்டிருக்கும் நண்பன் X அவர்களுக்கும் என்னை எழுத்துலகில் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் கார்த்திகா ராஜ்குமார் மற்றும் ப்ருத்வி அவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.
Monday, May 20, 2013
மிஸ்ட்டர் சன்டே!
”சர்ச்-ல ஆராதன நடந்துட்டு இருக்கறப்போவே கரண்ட் போறது எரிச்சலா இருக்கு. லட்சக்கணக்குல
செலவு செஞ்சு ஜெனரேட்டர் வாங்கி வச்சும் பிரயோஜனம் இல்ல. ஒண்ணு ஒண்ணர நிமிஷம் ஃபேன் நின்னு, என் தூக்கமும் கலைஞ்சு.... ச்சே. சினிமா தியேட்டர்ல மாதிரி கரண்ட் போறதும் திரும்ப வர்றதும், ஜெனரேட்டர் ஓடறது தெரியாத மாதிரியும் சர்ச்-லயும் ஜெனரேட்டர ரெடி பண்ணலாம் இல்லியா?”
“ஒண்ணர நிமிஷம் பொறுமை கூட இல்லியே, நீயெல்லாம் என்ன கிறிஸ்தவன்? ஒரு காலத்துல கரண்ட்டே இல்லாம மக்கள் வாழ்ந்தாங்க தெரியுமா? இப்பவும் ஜெனரேட்டர் வசதி, இன்வெர்ட்டர் வசதி இல்லாத பாமர மக்களும் நம்ம நடுவிலேயே வாழ்ந்துக்கிட்டு தான் இருக்காங்க. இருக்கற வசதிகளுக்காக நன்றி உணர்வோட இரு.”
“குளிர் காலத்துல கரண்ட் கட் ஆனா பரவாயில்ல, வியர்க்காது, ஃபேன் இல்லாம மேனேஜ் பண்ணிக்கலாம். ஆனா அப்பத்தான் அணையில தண்ணி இருக்கு, கரண்ட் கட் அதிகம் இல்லன்னு சொல்லுவாங்க. காத்து அடிக்கிற காலத்துல ஃபேன் அதிகம் தேவையில்லை, அப்போ காற்றாலையில இருந்து கரண்ட் இருக்குது; மின்சாரம் தடை இல்லாம கிடைக்கும்னு சொல்லுவாங்க. நாயக் கண்டா கல்லக் காணும் கல்லக் கண்டா நாயக்காணும்-னு சொன்ன மாதிரி தான். கத்தரி வெயில் அடிக்கிற இந்தக் காலத்துல ஒண்ணர நிமிஷத்துல ஃபேன் நின்னுட்டா தூக்கம் போயிருது, உங்க கூட பேசிட்டு இருக்கற வாய்ப்பும் போயிருது.”
“ஆமா அந்த ஒண்ணர நிமிஷம் இடைவெளிக்குப் பிறகும் நீ தூங்கிட்டு இருக்கறதால தானே இப்ப
எங்கூட பேசிட்டு இருக்கற?”
“அதெல்லாம் சரி, பரலோகத்துல ஏசி இருக்குமா?”
“நரகத்தோட ஒப்பிட்டுப் பாத்தா, ஏசி இல்லாட்டியும் பரலோகம் ஒரு கூலான இடம் தான். கடவுள விட்டுப் பிரிஞ்ச நித்திய வாழ்க்கை நெருப்பு மாதிரின்னா, அவர் கூடவே முடிவே இல்லாத வாழ்க்கை வாழறது ஜில்லுன்னு தானே இருக்கணும்?”
“எப்படியோ நரகத்து நெருப்பு தான் பரலோகத்து ஏசிக்கு கரண்டு குடுக்குற அணு உலை மாதிரி இருக்கும்-னு நினைக்கிறேன்.”
“பேச்ச மாத்தாதே, ஒரு நிமிஷம் ஒண்ணரை நிமிஷ கஷ்ட்டத்தையே தாங்க முடியலன்னு சொல்றியே, நீயெல்லாம் நரகத்துக்குப் போனா உஷ்ணத்த தாங்க முடியாதே? என்ன பண்ணுவ?”
“நரகத்துக்குப் போகக் கூடாதுன்னு தானே இப்படி பக்தியா, ஒழுங்கா கோயிலுக்கு வர்றது, கர்த்தருக்கு உரிய கடமைகள சரியா செய்யறதுன்னு இருக்கிறேன்?”
“அப்படின்னா மோட்சம் நரகம்னு ஒண்ணு இல்லவே இல்லன்னு யாராவது நிரூபிச்சிட்டா நீ கடவுள விட்டுட்டுப் போயிருவியா?”
“அது என்னவோ யாரும் அப்படி நிரூபிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.”
“சின்ன வயசுல இருந்தே வேதக்காரனா வளந்ததனால இப்படி சொல்லுற. ஆனால் உண்மையிலேயே அப்படி உன்னோட நம்பிக்கைய அசைக்கற மாதிரி யாராவது வாதம் பண்ணினா உன் நிலைமை எப்படி ஆகும்?”
“அடடா யோசிக்க வச்சிட்டீங்களே! எனக்கும் அப்படி அப்பப்போ சிந்தனை வந்திருக்கத் தான் செய்யுது. என்ன பண்ணலாம்? யோசனை சொல்லுங்களேன்?”
“பரம்பரை, பாரம்பரியம், பயம் - அதாவது நரக பயம், அப்புறம் பரலோக ஆசை, இதை எல்லாம் விட்டுட்டு, உண்மையிலேயே இயேசுவைப் பின்பற்றுதல் அப்படின்னா என்ன? அவர் சொன்னதுக்கெல்லாம் கீழ்ப்படியறது எப்படி இருக்கும்? அப்படின்னு நீயாவே உன்னோட பக்திய புதுசா வளத்துக்கோ. இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படியிற சவாலான வாழ்க்கையத் துவங்கிப் பாரு, வாழ்க்கை போர் அடிக்காது.”
“ஷாக் அடிக்கிற மாதிரி பேசிப்புட்டீங்களே! இனிமே தூக்கமும் வராது; ஒரு வாரத்துக்கு உங்களப் பாக்கவும் முடியாது. கண்டிப்பா நீங்க சொன்னத அசை போட்டு யோசிச்சுப் பாக்கிறேன்.”
“மாடு தான் அசை போடும், அப்படின்னா நல்ல மாட்டுக்கு ...”
“...ஒரு ஷாக்கு.”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment