"பாட்டுப்பாடுறதுக்கு கொயர்ல என்ன சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க"
"பாலிட்டிக்ஸ்லா?"
"இல்ல டெக்னாலஜி, எனக்கு நோட்டுலயும் பீட்டுலயும் பாட முடியல"
"கவலையே படாதே. இந்த உலகத்துல இல்லாட்டியும் பரலோகத்துல நீ முடிவே இல்லாம, நித்தியத்துக்கும் பாடிக்கிட்டே இருக்கலாம்."
"இந்த உலகத்துல இருக்கற எல்லாமே ஒழிஞ்சு போனாலும், துதியும் பாடலும் மட்டும் பரலோகத்துலேயும் இருக்கும். அதனால துதியும், பாட்டும், தான் முக்கியமானதுன்னு ஒரு ஊழியர் சொல்லியிருக்காரு."
"அது சரி தான், ஆனா உன்ன மாதிரி பீட்டுல, நோட்டுல பாடாதவங்க எப்படி பரலோகத்து கொயர்ல சேர முடியும்?"
"துதியினால எத்தனை கோட்டைகள் விழுந்திருக்கு, எத்தனை யுத்தங்கள்ல ஜெயிச்சிருக்காங்க?"
"துதிங்கறது கடவுளோட மக்களுக்கு இருக்க வேண்டிய அம்சங்கள்ல ஒண்ணு தான். கெட்ட வார்த்தையும் துதியும் ஒரே வாய்ல இருந்து வரக்கூடாது தானே? பொய்யும் ஆராதனையும் ஒரே வாய்ல இருந்து வந்தா, அந்த துதிக்குப் பேரு என்ன? பீட்டு நோட்டு போன பாட்டுன்னு சொல்லலாமா? இயேசு எதுக்கு சிலுவை வரைக்குப் போகணும், பேசாம 12 சீடர்கள வச்சு ஒரு கொயர் ஆரம்பிச்சுருக்கலாமே?"
"உங்களுக்கும் கொயர் பிடிக்காதா? நீங்களும் நம்ம கேஸ் தானா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல, கருத்தச் சொன்னா புரிஞ்சுக்கோ, சின்ன சந்துக்கு உள்ள புகுந்து புதுப் புது அர்த்தங்கள நீயாவே கண்டுபிடிக்காதே."
"நான் சின்ன வயசுல கிராமத்துல வளந்தவன், கீர்த்தனை எல்லாம் எனக்கு அத்துப்படி. பாமாலைன்னா கொஞ்சம் பிரச்சனை தான்."
"பாமாலைகள்ல சித்தாந்தம், இறையியல் எல்லாம் நிறைய இருக்கு. ஆனா நம்ம நாட்டு இசை இல்ல, அது ஒண்ணு தான் இடிக்குது."
"ஆனா, எப்படியோ கொயர் பாட்டுங்கறது கிறிஸ்தவ கலாச்சாரத்துல முக்கியமானதா இருக்குது இல்லியா?"
"அதுல தப்பே இல்ல. மத்த கலாச்சாரத்துக்கும் நம்ம செய்திய இசை மூலமா கொண்டு போகணும்னா, நம்ம இசையும் வேணும்."
"அது உண்மை தான், பீளாவூண்டா மாலயே, பூகாலீடம் ஈயூமே - ன்னு பாடினா, நீங்க எந்த மொழியில பாடினீங்கன்னு கேப்பாங்க. நமக்கு நாட்டுப் பற்றே இல்லன்னு சொல்லுவாங்க. "
"நம்ம கொயர்ல தான் கீர்த்தனையையும் பாடுவாங்களே?"
"இந்த மாதிரி சமநிலை இருந்தா நல்லது."
"இன்னொரு சமநிலை வேணும், அது தான், பழைய இறையியலும், இந்தக் காலத்து நடைமுறையும் நம்ம பாட்டுக்கள்ல வேணும். இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி புதுப் பாட்டுக்களையும் நம்ம திருச்சபையில எழுதிப் பாடினா இன்னும் நல்லா இருக்கும்."
"பிரசங்கத்த விட பாட்டு நல்லது தான், ஏன்னா, அஞ்சு நிமிசத்துக்கு மேல அது போகாது. அப்புறமா எழுந்து நின்னு தான் பாடணும், எல்லாருக்கும் அதுல பங்கு இருக்கறதுனால, யாரும் தூங்க மாட்டாங்க. "
"அப்படின்னா கொயர்ல இருக்கறவங்களும் பிரசங்கியார்கள் தான்னு சொல்றீங்க?"
"கொயர் பாடறப்போ இங்கே நின்னு கூடப் பாடற நீயும் ஒரு பிரசங்கி தான்."
"அதிகப் பிரசங்கின்னு சொல்லாம இருந்தா சரி தான்."
No comments:
Post a Comment