Wednesday, December 7, 2011

மிஸ்ட்டர் சன்டே!

"ஐயா, நீங்க எல்லாம் கிறிஸ்மஸ்க்கு புது ட்ரெஸ் எடுப்பீங்களா? எப்பவுமே
யூனிஃபார்ம் மாதிரி வெள்ளக் கலர்ல அங்கி போட்டுட்டு இருக்கீங்க. நீங்க
போட்டுருக்கறது புது அங்கியா இல்லியான்னு நீங்க சொன்னாத்தான் தெரியும்.
புது ட்ரெஸ் எடுக்கலன்னா கிறிஸ்மஸ் மாதிரியே இருக்காது இல்ல?"


"புதுத் துணி தான் கிறிஸ்மஸ்னு யார் சொன்னது?"


" ' பிள்ளையைத் துணியிலே சுற்றி முன்னணையில் கிடத்தியிருக்கக்
காண்பீர்கள்'னு தானே எல்லா கிறிஸ்மஸ் சீசன்லயும் சொல்றாங்க?"


"அது புதுத்துணியா பழைய துணியான்னு உனக்குத் தெரியுமா? அதுக்கும் நீ
புதுத்துணி புதுத்துணின்னு அலையறதுக்கும் சம்பந்தம் இருக்குதா?"


"இயேசு ஏழையாப் பிறந்ததே நம்மள பணக்காரங்களா ஆக்கறதுக்குத் தானே?"


"நாமப் பணக்காரங்களாவே இருக்கறதுக்காக இயேசுவ மாட்டுத்தொழுவத்திலேயே
வச்சிக்கிட்டு இருக்கலாமா?"


"வருஷத்துக்கு ஒரு தடவை புதுத்துணிய தைரியமா வாங்கி உடுத்தறதுக்கு உரிமை இல்லியா?"


"தாராளமா வாங்கி உடுத்திக்கோ. மாசத்துக்கு ஒண்ணு வேணும்னாலும் வாங்கிக்கோ"


"பின்ன ஏன் எனக்கு இவ்வளவு குடைச்சலக் குடுத்தீங்க?"


"இயேசுவோட பெயரச் சொல்லி, அவர் பிறந்த நாளச் சொல்லி நீ புதுத்துணிக்குப்
பறக்கறது தான் எனக்குப் பிடிக்கல."


"சரி இந்த வாட்டி கிறிஸ்மஸ் கொண்டாடப் போறதும் இல்ல, புதுத்துணி வாங்கப்
போறதும் இல்ல"


"அடடா, யார் யாரோட பிறந்த நாளையெல்லாம் மக்கள் கொண்டாடறப்போ, கர்த்தரோட
பிறந்த நாளக் கொண்டாடறதுல தப்பு என்ன?"


"ஐய்யா நீங்க எந்தக் கட்சின்னு முதல்லியே சொல்லிடுங்க. இப்படி நான்
பைத்தியக்காரன் மாதிரி அலசடிப்பட முடியாது"


"சரி இந்த கிறிஸ்மஸ்க்கு வெளியூருக்குப் போகலியா? தீபாவளி பலகாரத்தை
அவாய்ட் பண்றதுக்காக போன மாசம் வெளியூர் போனியே?"


"கிறிஸ்மஸ்க்கு நான் ஏன் ஊருக்குப் போகணும்?"


"தீபாவளிப் பலகாரம் வாங்காம, கிறிஸ்மஸ் கேக் குடுக்க உன்னால முடியுமா?"


"அதுக்கு என்ன? நம்ம கர்த்தர் தான் உயிருள்ள உண்மையான கர்த்தர் ஆச்சுதே"


"கர்த்தர் கர்த்தர் தான், ஆனா நாம மனுஷங்க தானே? உண்மையான கர்த்தரப்
பத்தி மத்தவங்களுக்குச் சொல்லணும்னா, குடுக்கல் வாங்கல் இருந்தாத்தானே,
ஒருத்தர் சொல்றத மத்தவங்க கேப்பாங்க?"


"இருந்தாலும் கர்த்தருடைய மக்களுக்கும் மற்ற மதத்து மக்களுக்கும்
வித்தியாசம் இருக்குது தானே?"


"நீ என்ன கர்த்தருடைய பிள்ளையா வானத்துல இருந்து குதிச்சியாக்கும்? நாலு
அஞ்சு தலைமுறைக்கு முன்னால உன் குடும்பமும் வேற மதத்துல தானே இருந்தது?"


"அவுங்களும் கர்த்தரோட மக்களா மாறணும்னு தான் கிறிஸ்மஸ் கேக்
குடுத்துட்டு அப்படியே ஒரு கிறிஸ்தவ புத்தகமும் குடுத்துட்டு வர்றேன்"


"எத்தனை வருஷமா இப்படி புத்தகம் குடுத்துட்டு இருக்கற? அதுல எத்தன பேரு
நீ விரும்புன மாதிரி கர்த்தரோட மக்களா மாறியிருக்காங்க?"


"இருபது வருஷம்.... பூஜ்யம் ரிசல்ட்"


"இந்த வருஷம் கொஞ்சமாவது ரிசல்ட் கிடைக்கறதுக்கு ஒரு வழி சொல்லட்டுமா?"


"சொல்லுங்களேன்"


" 'அவுங்கள உங்க மக்களா மாத்துறது உங்க வேலை கர்த்தாவே'ன்னு ஜெபம்
பண்ணிட்டு. அவங்க கூட சாதாரண மனுஷன் மாதிரி பழகு. அவங்க கர்த்தருடைய
மக்களா மாறணும் அப்படின்னு உள் நோக்கம். இல்லாம சாதாரண விஷயங்களப்
பத்திப் பேசு. அந்த சிநேகிதத்தை தொடர்ந்து காப்பாத்து. மத்தத கர்த்தர்
பாத்துக்குவார்."

No comments: