Sunday, March 31, 2013

மிஸ்ட்டர் சன்டே




"கணக்கு, சந்தா பாக்கி, ஏல பாக்கி எல்லாம் அடுத்த வாரத்துக்குள்ள குடுக்கச் சொல்லி அறிவிப்பு குடுத்திருக்காங்க."

"உங்க ஊரு இல்ல இல்ல நாடே இப்படித்தானே, கடைசி நேரத்துல வரிசையில நின்னுகிட்டு பதறிக்கிட்டு இருப்பீங்க"

"ஆதார் அட்டை எடுக்கறதுக்கு கடைசி நாள் முடிஞ்சிருச்சு. இன்னும் மூணு மாசத்துக்கு அப்புறம் தான் அடுத்த ரவுண்டு வருவாங்களாம் "

"நீ கடைசி நாள் கடைசி மணி நேரத்துல போயிருப்ப. அதனாலத் தான் மூணு மாசம் காத்திருக்க வேண்டியதா இருக்கு. அடுத்த தடவையாவது கொஞ்சம் முந்தியே போயிரு."

"கடைசி நேரத்துல இயேசப்பா கிட்ட வேண்டிக்கிட்ட வலது பக்கத்துக் கள்ளன் பத்தி உங்களுக்குத் தெரியாதா?"

"முதல்ல அந்த கள்ளன் வலது பக்கத்துல இருந்தான் - னு பைபிள்ல இல்ல. அப்புறமா நீ கள்ளன் இல்ல. நீ சாகறப்போ இயேசு உன் கூட சாகவும் மாட்டார். அதாவது அவர் உயிரோட எழுந்துட்டார். அப்புறமா அந்தக் கள்ளனுக்கு கிடைச்ச மாதிரி உனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்குமான்னு தெரியாது. நாளைக்கே, இல்லன்னா இன்னிக்கே நீ செத்துட்டேன்னா? "

"அடப் பாவி மனுஷா, நான் செத்துப் போயிருவேன்னு சாபம் உடுறீங்களா? லாசரு செத்துப் போயிட்டான்னு கேள்விப்பட்டதும் இயேசு என்ன பதறி அடிச்சிட்டா ஓடிப் போனார்? மூணு நாள் லேட்டாத் தானே போனார்?"

"விதிவிலக்கை எல்லாம் விதியா மாத்தக்கூடாது தெரியுதா? இயேசு எல்லா நேரத்திலேயும் தாமதம் பண்ணிக்கிட்டு இருக்கல. அப்புறமா அவரோட தாமதத்துக்கு அர்த்தம் இருக்கும், காரணம் இருக்கும்"

"அது மாதிரி தான் நம்ம தாமதத்துக்கும் எப்பவுமே ஒரு காரணம் இருக்கும். இல்லாட்டியும் கண்டுபிடிச்சிருவோம்ல? சரி இயேசுவோட தாமதத்துக்குக் காரணம் என்ன?"

"அது இயேசு. அவரோட வல்லமையைக் காட்டத்தான் தாமதம் பண்ணினார். ஆனா இப்பொழுதே அனுக்கிரக காலம், இன்றைக்கே இரட்சண்ய நாள் அப்படின்னு வேதம் சொல்லுதே!"

"கடவுள் இரக்கம், உருக்கம், கிருபை, மன்னிப்பு எல்லாம் தர்றவர் தானே. கெட்ட குமாரன் லேட்டா வந்தாலும் ஏத்துக்கிட்டார் தானே?"

"அதெல்லாம் இருக்கட்டும். லேட்டா, எண்ணெய் இல்லாம வந்த அஞ்சு கன்னிகைகள உங்கள எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டாருன்னு ஒரு உவமை இருக்குது தெரியுமா?"

"எப்படிப் பேசினாலும் மடக்கிருதீங்களே! இயேசு இதோ வர்றார் அதோ வர்றார், வந்துட்டார், சீக்கிரமா வர்றார், நாளாக்கழிச்சு வர்றானுல்லாம் பல பேர் பேசிக்கிறாங்களே, இயேசுவே இன்னும் தாமதாமாகிட்டுத் தானே இருக்கார்?"

"மக்கள் எல்லாம் மனந்திரும்பணும் அப்படிங்கற அக்கறையில தான் தாமதம் பண்ணுறார். அது தான் அவரோட தாமதத்துக்குக் காரணம். அவர் தாமதிக்கலன்னா நாம எல்லோருமே வேற வழியே இல்லாம அழிஞ்சு போயிருப்போம்.இப்பவும் அவரப் பத்தித் தெரியாதவங்களுக்கு நற்செய்தியைச் சொல்றதுக்கு நாம தாமதம் பண்ணுற ஒவ்வொரு நிமிடமும் எத்தனையோ பேர் அவரைத் தெரியாமலேயே நரகத்துக்குப் போயிட்டு இருக்காங்க தெரியுதா?"

"உடனே நான் போயி சந்தாவக் கட்டிட்டு வந்துர்றேன். அப்புறமா மத்தவங்களுக்கு இயேசுவப் பத்தி எப்படி சொல்றதுன்னு, புத்தகம் வாங்கிப் படிக்கப் போறேன்"





No comments: