Wednesday, July 29, 2009

சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு!!!


சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு? என்று பி.சுசிலா தனது இனிய குரலில் பாடிய பாடல் இன்னும் எனக்குப் பிடித்தமான பாடல். நான்காம் வகுப்பு வரை மாஞ்சோலை என்ற தேயிலை எஸ்டேட்டில் வளர்ந்ததால் புல் புல் குருவியைத் தான் தெரியும். படிப்புக்காக சமவெளிக்கு திருநெல்வேலிக்கு வந்தபோது தான் சிட்டுக் குருவிகளை முதல்முறையாகப் பார்த்தேன். புல் புல் அளவுக்கு அழகு இல்லாவிட்டாலும் மனிதர்களிடம் அதிகப் பயம் இல்லாமல் சுற்றுவதுவும், வீடுகளில் கூடுகள் கட்டுவதிலும் அவைகள் எனக்குப் பிடித்தமான பறவை இனமாகிவிட்டது. தினமும் கோயிலுக்குப் போகும் போது சுதந்திரமாக யாரைப் பற்றியும் கவலை இல்லாமல், பாட்டுப் பாடிக் கொண்டிருந்தாலும் சரி, ஜெபம் செய்து கொண்டிருந்தாலும், பிரசங்கம் நடந்து கொண்டிருந்தாலும் சரி, கிரிச் கிரிச் என்று கத்திக் கொண்டு சர்ர் என்று பறந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவிகளின் அட்டகாசம் ரசிக்கத் தக்கது.

”என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.” என்ற பைபிள் வசனங்கள் அவைகளுக்குத் தெரிந்திருக்குமோ இல்லையோ. எனக்கு அதிக உற்சாகத்தைக் கொடுத்தது. எங்கள் ஊர் ஆலயத்தின் பீடத்திற்கு மேல் சிலுவை வடிவத்தில் ஒரு ஓட்டை இருக்கும். காற்றுக்காகவோ, வெளிச்சத்துக்காகவோ என்பது கட்டியவர்களுக்குத் தான் தெரியும் ஆனால் இந்த சிட்டுக்குருவிகள் அதை ஒரு வீடாகத்தான் நினைத்திருந்தன.

விடலைப் பசங்க வேட்டைக்குப் போகும் போது கூட சிட்டுக்குருவியை யாரும் வேட்டையாடியதாக எனக்கு ஞாபகமில்லை. சிட்டுக்குருவியை எங்கள் வீட்டுப் பூனை பிடித்துத் தின்னும் போதெல்லாம் சிறிது சோகமும் பூனைமேல் கோபமும் வரத்தான் செய்தது.

பல காலமாக நாங்கள் தங்கியிருந்தது ஓட்டுவீடுகளாகவே இருந்ததால் சிட்டுக்குருவிகளின் கூடுகள் எங்கள் வீட்டின் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறது.

”சின்னச் சிட்டுக் குருவியே” என்ற பாடல் தமிழ்க்கிறிஸ்தவ உலகத்தில் அதிகப் பிரபலமான பாடல். ஒரு சிறுமிக்கும் சிட்டுக்குருவிக்கும் இடையிலான உரையாடல் போன்ற இந்தப் பாடல், எங்களைக் காக்கிற ஆண்டவர் உங்களைக் காத்திட மாட்டாரோ என்று சொல்லும் பாடம் அதில் மனதில் அப்பிக் கொள்வதாக இருக்கும்.

"His eyes are on the Sparrow" என்ற Ethel Waters என்னும் கருப்புப் பாடகியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த போது குருவிகளை விட நம்மைக் கடவுள் அதிகம் நேசிக்கிறார் என்ற கருத்து மனதில் பதிந்தது. பின்னர் ஒரு நாளில் அந்த அம்மா பாடியதை டி வி டியில் கேட்டபோது ஒரு உற்சாகம் மனதில் வந்தது.

காலங்கள் மாறி, நகரவாசியான போது வீட்டிலுள்ளவர்களையே அதிகம் கவனிக்காத ஒரு வாழ்க்கை வந்தபோது சிட்டுக்குருவியும் மறந்து போனது. சில சினிமா ஜோக்குகளிலும் விளம்பரங்களிலும் சிட்டுக் குருவி லேகியம் பற்றி குறிப்பிட்ட போது கூட ஒரு புன்னகையுடன் சிட்டுக்குருவியைப் பற்றிய சிந்தனையும் மறைந்து போயிருந்தது.

சமீபத்தில் செல்ஃபோன்களுக்கான மின் அலைகளால் சிட்டுக்குருவிகள் அழிந்தே போய்விட்டன என்று சொன்ன போது சிறிது கவலை இருந்தது. நவீன கண்டுபிடிப்புகளால் மனிதனுக்கும் உயிர்களுக்கும் ஏற்படும் நஷ்ட்டங்களில் ஒன்றாக இதுவும் தெரிந்தது. டி.டி.றி போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகளும் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு ஒரு காரணம் என்று சொன்னார்கள். மேலும் சிட்டுக்குருவிகள் கூடுகட்ட வசதியாக ஓட்டுவீடுகள் இல்லாததால் அவைகள் அழிந்து வருவதாகவும் சொல்லிக் கொண்டார்கள்.

ஹைதராபாத்தில் இருக்கும் என் நண்பன் மார்க் Sparrow Song அருமையான ராக் பாடல் ஒன்றை Salt என்ற பாடல் குழுவுக்காக எழுதி அந்த ஆல்பம் வெளிவந்த போது அது எனது அபிமான பாடலானது. அதே பாடல் லிட்டில் ராக்ஸ் என்ற ஆல்பத்தில் சிறுவர்கள் Acapella ஸ்டைலில் பாடுவதாக வந்த போது இரண்டு மடங்கு மகிழ்ச்சி. ஆனால் அந்த லிட்டில் ராக்ஸ் ஆல்பத்தை தமிழில் நான் கொண்டுவந்த போது அந்த ஒரு பாடலை மட்டும் தமிழ்ப்படுத்தவில்லை. அந்த அற்புதமான பாடலை நான் சொதப்பிவிடக்கூடாது என்பதுவும் ஒரு காரணம்.

பெங்களூரில் என் நண்பன் ஐசக்-இன் அலுவலகத்தில் இருந்த புத்தகம் ஒன்றைத் தற்செயலாகப் புரட்டிய போது சிட்டுக்குருவியைப் பற்றிய ஒரு படைப்பு படத்துடன் வந்திருந்ததைப் பார்த்து உற்சாகமாகிவிட்டேன். என் மொபைல் ஃபோனின் கேமராவில் அதைப் பிடித்து வைக்க நினைத்த போது அந்தப் பக்கத்தை ஸ்கேன் செய்து தருவதாக என் நண்பன் சொல்லவும் மின்சாரம் நின்று போக உடனடியாக அந்தப் படத்துடன் கூடிய படைப்பை வெட்டி எடுத்துத் தந்துவிட்டார் அந்த நண்பர். அதில் பெங்களூரில் இரண்டு இடங்களில் சிட்டுக்குருவிகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. ரிச்மண்ட் டவுனின் கர்லி தெருவிலும் புதிய விமான நிலையத்திலும் அவைகளைக் காணலாம் என்று எழுதியிருந்தது எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது.

அப்போது ராஜஸ்தானிலுள்ள மவுன்ட் அபுவில் ஒரு கடைத்தெருவில் சிட்டுக் குருவிகளைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. ஊட்டியிலும் சிட்டுக்குருவிகளைப் பார்த்த போது என்னிடம் கேமரா இல்லை. நண்பர்கள் எனக்காக படம் பிடித்தார்கள் அந்தப் படம் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

லிட்டில் ராக்ஸ் ஆல்பத்தை தமிழில் பதிவு செய்து கொண்டிருந்த போது என் இசையமைப்பாளர் நண்பன் சாம் வீட்டுக்கு அருகில் மின்கம்பத்தில் ஒரு சிட்டுக்குருவிக் கூட்டம் அட்டகாசமாக சத்தமிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. எப்படியாவது அவைகளின் கூடுகளைக் கண்டுபிடித்து பாட்டனி பேராசிரியர்கள் மாணவர்கள் துணையுடன் சிட்டுக்குருவிக் குஞ்சுகளை பல ஊர்களிலும் பரவச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

நடுவில் குற்றாலத்திலுள்ள ஒரு பள்ளியில் ஆளுமை மேம்பாட்டுக் கருத்தரங்குகள் நடத்திக் கொண்டிருந்த போது சிட்டுக்குருவிகளைப் பற்றி ஏதோ சொல்லியிருக்கிறேன். அதைக் கேட்ட ஒரு மாணவன் எனக்கு ஈ மெயில் அனுப்பி சிட்டுக்குருவி படத்தை அனுப்பும்படி கேட்டிருந்தான். உடனடியாக விக்கிப்பீடியாவில் sparrow என்ற தலைப்பில் அடித்துப் பார்த்து சிட்டுக்குருவிகளின் இன்டர்நேஷனல் புகழைப்பார்ந்து உணர்ச்சிவசப்பட்டேன். விக்கிப்பீடியாவில் கிடைத்த ஒரு படத்தைத் தான் இங்கேயும் தந்திருக்கிறேன்.

சமீபத்தில் திருநெல்வேலியிலிருந்து ரெட்டியார்பட்டி செல்லும் வழியில் என் நண்பர் ஒருவர் வீட்டுக்கு அருகே சிட்டுக் குருவிகள் சாலையில் மேய்ந்து கொண்ருந்ததைப் பார்த்து நிஜமாகவே உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். இன்றும் என் வீட்டின் அருகே புல் புல் குருவிகள் அழகாகப் பாடிக் கொண்டிருந்தாலும், சிட்டுக்குருவிகள் மேல் எனக்குள்ள பாசம் அதிகமாகத் தான் இருக்கிறது. சிட்டுக்குருவிகள் அழிந்து போய்விடவில்லை என்ற உண்மை எனக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

எனது பாட்டனி ஃப்ரொஃபசர் நண்பரைச் சந்தித்து சிட்டுக் குருவிகளைப் பற்றி இன்னும் விபரங்கள் சேகரித்து எனது ப்ளாக் மற்றும் வெப்சைட்டில் போடுவதாக உத்தேசித்திருக்கிறேன்.

2 comments:

Valarum Vinnarasu said...

Really simply superb. i am vey enjoying this article. please continue your wonderful wtiting.

Ponnuraj,
Valarum Vinnarasu

Thevathasan said...

http://youtu.be/Ag1wGRWepqU